ஹெல்த்

எந்த தொந்தரவும் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு வர என்ன காரணம்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

எந்த தொந்தரவும் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு வர என்ன காரணம்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

JananiGovindhan

பாலிவுட் நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான ராஜூ ஸ்ரீவத்ஸவ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சரிந்து விழுந்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் செயற்கை சுவாசத்தின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஹார்ட் அட்டாக் குறித்த செய்திகளாக வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கே இருந்து வந்த இருதயம் தொடர்பான நோய்கள் தற்போது 25 வயது இளசுகள், 40களின் பிற்பகுதியில் வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கும் பலரையும் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி வருகிறது.

குறிப்பாக தீவிர உடற்பயிற்சி செய்பவர்களிடையே இந்த மாரடைப்பு பாதிப்பு அதிகளவில் ஏற்படுவது பலரையும் பீதியடையச் செய்திருக்கிறது. இப்படி இருக்கையில், வொர்க் அவுட் செய்யும் போதோ அல்லது அதிகளவில் உடல் உழைப்பில் ஈடுபடும்போது திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அந்த நபருக்கு ஏற்கெனவே இதயத்தில் உள்ள அடைப்புகள் குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என இருதய நோய் நிபுணரும் இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவருமான பேராசிரியர் கே.ஸ்ரீநாத் ரெட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார்.

செல்கள் மற்றும் கொலஸ்ட்ரால் துகள்கள் எண்டோடெலியல் செல்களின் தடையை உடைத்து தமனியின் உள்ளே ஊடுறுவதன் காரணமாகவே இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால்தான் இதயத்தின் தமனியில் பிளேக் எனும் பம்ப் உண்டாகிறது. இருப்பினும் உடற்பயிற்சி நல்ல விதமான முறையல்ல என்று கூறிட முடியாது. ஆனால் ஒரு நல்ல விதமான வாழ்க்கை முறையை பின்பற்றி உணவு பழக்கங்களை கண்காணிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

வாழ்க்கை முறை, மரபியல் குறைபாடுகள், குடும்ப வரலாறுகளும் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆகவே உடல் பருமன் உள்ளவர்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் தீவிர உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது என்றும், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வது மட்டுமே தீர்வாக கருதக் கூடாதும் என்றும் இதய நோய் நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டி கூறியிருக்கிறார்.

ALSO READ: 

ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதன் மூலம் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிட முடியும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் கடைசியில் ஆபாத்தான காரணிகளையும் மாரடைப்புகளையுமே கொடுக்கிறது. நீங்கள் தேர்வு செய்யும் உடற் பயிற்சிகள் அதி தீவிரமானதாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அது குறைந்த அளவிலான பயிற்சிகள் முதல் மிதமானதாக இருந்தாலே போதும் என்கிறார் மும்பையைச் சேர்ந்த மூத்த கார்டியோலொஜிஸ்ட் அதுல் லிமாயி. மேலும் நபருக்கு நபர் உடற்பயிற்சிகள் வேறுபடும் மற்றும் சுயமாக வொர்க் அவுட் செய்தால் அபாயமாக இதய நோய்க்கே வித்திடும் என எச்சரிக்கிறார்.

இதுபோக எந்த கெட்டப்பழக்கங்கள், குடும்ப வரலாறு, இதய பாதிப்பு, ஒழுங்கற்ற உணவு முறை போன்றவை இல்லாத பலரும் ஜிம்மில் உடற் பயிற்சிக்காக சேர்ந்த சில மாதங்களிலேயே இதயத்தில் உபாதை ஏற்படுவதை உணர்ந்திருக்கிறார்கள். அப்படிதான் காமெடியன் ராஜூ ஸ்ரீவத்ஸாவின் நிலையும். இது தொடர்பாக பேசியுள்ள டெல்லியை சேர்ந்த 42 வயதான பொறியாளர் அபிஷேக் சவுத்ரி, “ஜிம் சேர்வதற்கு முன்பு வரை தனக்கு எந்த தொந்தரவும் இருந்ததில்லை. ஆனால் தற்போது சுவாச பிரச்னைக்காக மருத்துவரிடம் அவசர ஆலோசனை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார். அபிஷேக் சவுத்ரியின் விஷயத்தில் ஸ்ட்ரெஸ்தான் அடிப்படையாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ALSO READ: 

அதேவேளையில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியனின் 2021ம் ஆண்டு ஆய்வுப்படி, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அதனை கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அடுத்த ஆறு ஏழு ஆண்டுகளில் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரிய வந்திருக்கிறது. இது போக, பல நாட்களாக மன அழுத்தத்தில் இருப்பவர்களால் முறையாக தூங்க முடியாமல் போகும், குறைவாக உடற்பயிற்சி செய்யவும், ஆரோக்கியமற்ற ஸ்பைஸியான உணவுகளை சாப்பிட வைக்கும். இவற்றையெல்லம் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மருத்துவ ஆலோசனைகளை நாடுவதே சிறந்த முறையாக அமையும்.