ஹெல்த்

தரையில் அமர்ந்து சம்மனங்கால் போட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? அசத்தலான தகவல்கள்!

தரையில் அமர்ந்து சம்மனங்கால் போட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? அசத்தலான தகவல்கள்!

JananiGovindhan

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் சில பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக பார்ப்பதற்கு ஏதோ கெடுபிடிகள் போன்று நினைக்க வைத்தாலும், அவை பெரும்பாலும் உடலுக்கும் மனதுக்கும் நன்மையை அளிக்கக் கூடியவையாகவே இருக்கும். அது விளையாட்டாக இருந்தாலும் சரி தினசரி வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி.

அதில் முக்கியமானதாக இருப்பது தரையில் அமர்ந்து உணவருந்துவது. இந்த பழக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சம்மனங்கால் எனும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதும், அமர்வதும் எந்த அளவுக்கு உடல் நலத்திற்கு பலனை கொடுக்கும் என்பதை காணலாம்:

1) எடையை குறைக்க உதவும்:

தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் உடல் அசைவுகள் செய்ய வைக்கும். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராக நிகழும். மேலும் கீழே அமர்ந்து எழுவது Full Squat உடற்பயிற்சி செய்வது போல.

இதை தொடர்ச்சியாக செய்து வருவதால் உடல் எடையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை காண முடியும். மேலும் சம்மனங்கால் போட்டு அமர்வதால் அதிகளவில் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். ரிலாக்சேஷனாக இருக்கும். மனதளவில் ஒரு வகையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

2) தோரணையை மேம்படுத்தும்:

கால்களை மடக்கி கீழே அமர்வது ஒரு வகையான யோகா பயிற்சி போன்று. இந்த பொசிஷன் முறையாக உட்காரும் பழக்கத்தை கொண்டு வரும். இதன் மூலம் முதுகும் முதுகெலும்பும் நேராக இருக்க உதவும். எலும்பை பலப்படுத்தவும் இந்த உட்காரும் முறை உதவியாக இருக்கிறது.

3) செரிமானத்தை சீராக்கும்:

டைனிங் டேபிளில் அமர்ந்து காலை தொங்கப்போட்டு அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக தரையில் சம்மனங்கால் போட்டு சாப்பிடும் போது அது செரிமானத்திற்கு உதவுகிறது என்றும் இது செரிமான ஒழுங்குமுறையை அதிகரிக்கச் செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

4) மனதை ரிலாக்சாக இருக்கச் செய்யும்:

கிராமப்புறங்களில் ஒரு பேச்சுவழக்கு இருக்கும். என்னதான் கயித்துக்கட்டிலில் அமர்ந்தாலும் கீழே அக்கடாவென உட்காரும்போதுதான் சொர்க்கமாக இருக்கிறது எனக் கூறப்படுவதுண்டு. அந்த வகையில் தரையில் சாவகாசமாக உட்காருவதால் மனம் தளர்வான மனநிலையில் அமைதியாக இருக்கும். மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் குறையும் எனக் கூறப்படுகிறது.

5) பிணைப்பை மேம்படுத்தும்:

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக கீழே அமர்ந்து சாப்பிடும் போது பிணைப்பை ஏற்படுத்த உதவும். ஒருவரை ஒருவர் அறியவும் புரியவும் வைக்கும். கவனமாக சாப்பிட தோன்றும். இதன் மூலம் தேவையில்லாம மனக்கசப்புகள் ஏற்படாமல் தவிர்க்கச் செய்யும். இதனால் மனம் சந்தோஷமான மனநிலையில் இருக்கும்.