சிலருக்கு அசைவம் பிடிக்கும், சிலருக்கு காய்கறிகள் பிடிக்கும். ஆனால் அந்த இரு தரப்பினரிலிருந்துமே பழங்களுக்குக்கென்று தனி ஃபேன்பேஸ் இருக்கிறது. நார்ச்சத்து அல்லது ஃப்ரக்டோஸ், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அல்லது கலோரிகள் என அனைத்துச் சத்துக்களுமே பழங்களில் அடங்கியிருக்கிறது. தற்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதிலும் பழங்களுக்கு பங்கு உண்டு என்கின்றனர் நிபுணர்கள். ரத்தத்திலுள்ள மெழுகு போன்ற பொருளானது இருவகைப்படும். அதில் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதங்கள் (high-density lipoproteins) நல்லது என்றும், குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் (low-density lipoproteins) கெட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த LDL அதிகமாக இருக்கும்போது அது இதய நோய்களின் அபாயத்தை அமைதியாக அதிகரிக்கும்.
கொலஸ்ட்ரால் ஃப்ரெண்ட்லி பழங்களை எடுத்துக்கொள்வதன்மூலம் LDL அளவை கட்டுப்படுத்தலாம். அதிக கொழுப்பை கட்டுப்படுத்தும் 5 பழங்களை பற்றி பார்க்கலாம்.
வாழைப்பழம்: விதைகளற்ற, பல சத்துக்கள் நிறைந்த இந்த பழமானது உடலில் கொழுப்பை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நீர்ச்சத்தானது உடலில் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
திராட்சை: வைட்டமின் சி சத்து நிறைந்த திராட்சையானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலில் கொழுப்பு அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. அதாவது கெட்ட கொழுப்புகளை கல்லீரலுக்கு கொண்டு சென்று உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.
ஆப்பிள்: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் எப்போதும் முன்னிலை வகிக்கிறது ஆப்பிள். இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்தானது இந்த பழத்தை இதயத்திற்கு உற்ற நண்பனாக வைத்திருக்கிறது. மேலும் ஆப்பிளிலுள்ள பாலிபெனால்கள் உடலில் கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
அவோகடோ: இந்தியாவில் இந்த பழம் விலை அதிகமானதாக காணப்பட்டாலும் இதிலுள்ள ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ரத்தத்திலுள்ள கொழுப்பு அளவை கட்டுக்குள் வைப்பதில் அவோகடோ முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே தினசரி ஸ்மூத்திஸ் அல்லது சாண்ட்விச்களில் இதை சேர்த்துக்கொள்ளலாம்.
அன்னாசி: அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி இருக்கிறது. இது தமனிகளில் உள்ள கொழுப்புப் படிவுகளை உடைத்து ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.