சிறப்புக் களம்

உ.பி வன்முறையால் யோகியின் '60 நாள்' மிஷனுக்கும் பாதிப்பா? - ஒரு பார்வை

உ.பி வன்முறையால் யோகியின் '60 நாள்' மிஷனுக்கும் பாதிப்பா? - ஒரு பார்வை

PT WEB

விவசாயிகள் 8 பேர், உள்ளூர் நிருபர் ஒருவர் ஆகிய 9 பேரின் உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் வன்முறை சம்பவம் அரசியல் ரீதியிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளதால், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் '60 நாள் மிஷன்' திட்டம் தள்ளிப்போகலாம் என கருதப்படுகிறது. அந்த மிஷனின் தொடர்பான பின்னணியை விரிவாகப் பாப்போம்.

உத்தரப் பிரதேசத்தில் 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றும் பொறுப்பு முதல்வர் யோகி ஆதித்யநாத் நோக்கி வந்துள்ளது. சில மாதங்கள் முன் பாஜக மத்திய தலைமைக்கும் யோகிக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் யோகிக்கு மாற்றாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.கே.சர்மாவை மாநில அரசியலில் முன்னிலைப்படுத்த தொடங்கினார்கள், மத்திய தலைமையில் இருப்பவர்கள். ஆனால், சில காலம் கழித்து சமரசம் ஏற்பட, யோகி மீண்டும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், பாஜகவின் உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் செப்டம்பர் 24 அன்று லக்னோவில் நடந்த தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பில், உத்தரப் பிரதேச பாஜக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை யோகி ஆதித்யநாத் தலைமையில் சந்திக்கும் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இதனால், கட்சியின் தேர்தல் முகமாக மாறியிருக்கும் முதல்வர் யோகி, தனக்கு இருக்கும் புகழை வாக்குவங்கியாக மாற்றும் செயல்முறையை தொடங்கியிருக்கிறார். கடந்த 23-ம் தேதி பாஜக கூட்டத்தில் பேசிய யோகி, தனது 60 நாள் மிஷனை அறிவித்தார். யோகியின் இந்த 60 நாள் மிஷன் என்பது பிரசார சுற்றுப்பயணம் ஆகும். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் நவராத்திரி சீசனுக்குப் பிறகு யோகி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 75 மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் பாஜக சார்பில் சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒன்று முதல் இரண்டு மாவட்டங்களுக்குச் சென்று, அடிக்கல் நாட்டுவது, புதிய அரசாங்க திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், பாஜகவின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளான யுவ மோர்ச்சா மகிளா மோர்ச்சா, கிசான் மோர்ச்சா போன்றவை யோகியின் வருகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது என பிரசார திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மூத்த பாஜக துணைத் தலைவர் ஒருவர் யோகியின் இந்த 60 நாள் மிஷன் தொடர்பாக பேசுகையில், "அரசாங்க நிகழ்வுகளுடன், கட்சி சார்பில் கூட்டங்கள், பேரணிகள் அல்லது மாநாடுகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் மாதத்திற்குள், முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது முழு சுற்றுப்பயணத்தையும் நடத்தும் வகையில் அரசும் பாஜகவும் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளன" என்றுள்ளவர், மேலும் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்.

இந்த பிரசாரங்களின்போது மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியவம் கொடுப்பது என்பதுவே அது. செல்லும் இடங்களில் இருக்கும் உள்ளூர் பிரச்னைகளை தீர்த்துவைப்பது முக்கிய திட்டமாக இருக்கும் என்றுள்ளார். எதிர்க்கட்சிகளையும் இந்தக் கூட்டங்கள் வாயிலாக 'அட்டாக்' செய்யும் பிளானும் உள்ளதாம். குறிப்பாக, இந்துதுவா கூற்றுகளை முன்னிறுத்துவதுடன், சில பல வார்த்தைகளைக் கூறி எதிர்க்கட்சிகளைத் தாக்குவதும் முக்கிய அஜெண்டாவாக இருக்கும் என்றுள்ளார்.

அதேநேரத்தில், பாஜக அரசின் முக்கிய சாதனையாக இருக்கும் அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தை பெரிதாக பிரச்சாரத்தில் பேசுவது என்பதுடன், முன்பு இருந்ததைவிட தீபோத்சவம், பிரயாக்ராஜின் கும்பமேளா, பர்சானாவின் ஹோலி, காசியின் தேவ் தீபாவளி, நவராத்திரி போன்றவை பாஜக ஆட்சியில் பிரமாண்டமாக கொண்டாடபடுவதை எடுத்து சொல்லி பாஜகவின் பாரம்பரிய இந்து வாக்கு வங்கியை வலுப்படுத்தவும் யோகி செயல்படுவார் என்றுள்ளார்.

பாஜக தேசிய துணைத் தலைவரும், உத்தப் பிரதேச மாநிலப் பொறுப்பாளருமான ராதா மோகன் சிங், "முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில மக்களிடையே மிகவும் பிரபலமான தலைவர். நான்கரை வருட ஆட்சிக்குப் பிறகு, மக்கள் மனதில் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. அதனால்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்களை யோகியை வைத்து செயல்படுத்த கட்சி அமைப்பு திட்டமிட்டுள்ளது" என்றுள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்போ, யோகியின் சுற்றுப்பயணத்தை ஒரு தேர்தல் ஸ்டன்ட் என்றும், இந்த சுற்றுப்பயணம் பாஜகவுக்கு பயனளிக்காது என்று ஒரே குரலாக எதிரொலிக்கிறார்கள். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் யாதவ் என்பவர், "முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்த வேலையும் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் கோபமாக உள்ளனர். யோகியின் சுற்றுப்பயணத்தால் பொதுமக்களின் அதிருப்தி அதிகரிக்கும்" என்றுள்ளார்.

இந்தச் சூழலில்தான், விவசாயிகள் 8 பேர், உள்ளூர் நிருபர் ஒருவர் ஆகிய 9 பேரின் உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தின் தாக்கம் என்பது முதல்வர் யோகியின் மிஷன் ப்ளானிலும் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.

- மலையரசு