சிறப்புக் களம்

''நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது...'' - மனதிலிருந்து நீங்கா 'வானொலி'யின் நினைவுகள்!

''நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது...'' - மனதிலிருந்து நீங்கா 'வானொலி'யின் நினைவுகள்!

webteam

கையில் இருக்கும் செல்போனில் தட்டினால் பிடித்த பாட்டு ஓடுகிறது. வேண்டுமென்றால் நேரலையாக 24 மணி நேரமும் நாட்டு நடப்புகளை செய்திகளாக பார்க்க முடிகிறது. இப்படி நாம் நினைக்கும் நேரத்தில் நாம் நினைப்பதை செல்போன் மூலமே செய்துவிட முடிகிறது. ஆனாலும் இதில் ஏதோ ஒன்று குறைகிறது.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினராக இருந்த ஒரு பொருள். எத்தனையோ பேரின் தனிமையை பகிர்ந்துகொண்ட ஒரு நண்பன். இப்படி ஒரு உணர்வாகவே இருந்த ஒன்றுதான் வானொலி. அந்த கரகரப்பு சத்தத்தை சரிசெய்து முடிப்பதற்குள் முடிந்து போன பிடித்த பாடலால் நொந்த மனம் தான் இங்கு எத்தனையோ? எங்கோ ஓடும் காதல் பாடலுக்கு தூரம் நின்று பரஸ்பரமாக கண்களால் காதல் பேசிக்கொண்டு இருந்த காதலர்களால் நிறைந்திருந்தன குடியிருப்பு தெருக்கள்.

''நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது'' என நமக்குள் நுழையும் காந்தக்குரலை மறக்கவே முடியாது. ''இந்தப்பாடலை விரும்பி கேட்டவர்கள்'' என சொல்லப்படும் பெயர்களோடு நமக்கு இனம்புரியாத ஒரு உறவு உருவாகியது உண்மைதானே. பிடித்த ஒருபாடலைக்கேட்க கடிதம் எழுதி அனுப்பிவிட்டு பாட்டு வருமா? நம் பெயர் வருமா? என தினம் தினம் காத்திருந்த கதைகளும் இங்கு ஏராளம் உண்டு. நான்கா? ஆறா? விக்கெட்டா? கரகரப்புகளுக்கு இடையே வந்துவிழும் கிரிக்கெட் கமெண்ட்ரிகளை கூடி நின்று குதூகலித்த வெற்றி தோல்வியை பகிர்ந்துகொண்ட கிரிக்கெட் ரசிகர்கள்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஓடும் புதுப்பட பாடல்களுக்காக வேலைகளையெல்லாம் முன்னதாகவே முடித்துவிட்டு காத்திருந்து பாட்டு கேட்ட இசை பிரியர்கள். மழை வருமா? புயல் உருவாகி இருக்கிறதா? என வானொலியை நம்பி வயலில் இறங்கிய விவசாயிகள். வானொலியை நம்பி கடலுக்குள் இறங்கிய மீனவர்கள். இப்படி தனக்கென ஒரு கூட்டத்தை காக்க வைத்து அவர்களை கட்டியணைத்துக்கொண்டது வானொலி.வீடோ, கடையோ எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு பாடல்கள், செய்திகள் என எதையாவது வழங்கிக்கொண்டிருக்கும். அதன் அருகில் யாருமே இருக்கமாட்டார்கள்.

ஆனால் அதன் ஒலியைக் கேட்டுக்கொண்டு பல செவிகள் அங்கிருக்கும். ஏதோ ஒரு பாடல் ஓடிக்கொண்டிருக்க, அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே பாடலை பாடியவாறு அம்மாக்கள் சமைத்துக்கொண்டு இருப்பார்கள். வயல்வேலைகளில் எத்தனையோ தொழிலாளிகளின் அலுப்பை போக்கி இருக்கிறது இந்த வானொலி. குறிப்பிட்ட நேரத்தில் வரும் செய்திக்காக முன்னதாகவே காத்திருக்கும் அப்பாக்கள். இப்படி குடும்பத்தில் அனைவரின் தோளிலும் கைபோட்டு கடந்து வந்திருக்கிறான் இந்த வானொலி நண்பன்.

யாரோ ஒருவரை போல என்றுமே நம்முடன் பேசிக்கொண்டு இருந்தது வானொலி. எதையாவது சொல்லிக்கொண்டு இருந்தது. வானொலி இருக்கும் வீட்டில் தனிமை இருக்காது என்று சொல்வார்கள். யாராவது அதில் பேசுவார்கள். எதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். நம் வேலையோடு வேலையாக அந்த உரையாடல், அந்த பாடல் ஏதோ ஒரு ஒலி நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கும். எதிர்பாராத நேரத்தில் ஓடும் நமக்கு பிடித்த பாடல், நினைவுகளை கிளறிவிடும் ஏதோ ஒரு இசை, இப்படி வானொலி ஒரு அழகான ஒன்றாகவே நம் வாழ்க்கையில் இருந்தது.

இன்று தொலைக்காட்சி வந்துவிட்டது. இணையம், செல்போன் வந்துவிட்டது. ரேடியோக்கள் FMகளாக மாறிவிட்டன. பாடலோ செய்தியோ பிடித்தது எல்லாம் அடுத்த நொடி கிடைத்துவிடுகின்றன. ஆனாலும் ஒரு நண்பனாக இருந்த ரோடியோவின் உணர்வு இவை எவற்றிலும் கிடைக்கவில்லை. எத்தனையோ தொழில்நுட்பங்கள் இருந்தும் தனிமையில் ரோடியோ தந்த ஒரு துணை இன்று நமக்கில்லை. இன்றும் நம் வீடுகளை ஏதேதோ பொருட்கள் அலங்கரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு உறவைப்போல இருந்த வானொலியின் உணர்வை எந்த பொருளும் அவ்வளவாக தரவே இல்லை. எல்லா பொருட்களும் பொருட்களாகவே இருக்கின்றன. ஆமாம், வானொலியும் ஒரு பொருள் தான். ஆனால் அதில் ஒரு உயிர் இருந்தது.

இன்று உலக வானொலி தினம்! பசுமை மாறா நினைவுகளை அசைபோடுவோமாக...!