போட்டி 45: இந்தியா vs நெதர்லாந்து
மைதானம்: எம் சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களூரு
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 12, மதியம் 2 மணி
2023 உலகக் கோப்பையில் இதுவரை: இந்தியா
போட்டிகள் - 8, வெற்றிகள் - 8, தோல்வி - 0, புள்ளிகள் - 16
புள்ளிப் பட்டியலில் இடம்: முதலாவது
சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலி - 543 ரன்கள்
சிறந்த பௌலர்: முகமது ஷமி - 16 விக்கெட்டுகள்
இந்திய அணியின் மிகச் சிறந்த உலகக் கோப்பை குரூப் பிரிவாக இது அமைந்திருக்கிறது. அனைத்து அணிகளையும் வென்றிருக்கிறது, முதலில் பேட்டிங் செய்து, சேஸிங் என அனைத்து விதங்களிலும் வென்றிருக்கிறது. பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணியை முந்தைய போட்டியில் புரட்டி எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது ரோஹித் அண்ட் கோ.
2023 உலகக் கோப்பையில் இதுவரை: நெதர்லாந்து
போட்டிகள் - 8, வெற்றிகள் - 2, தோல்விகள் - 6, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: சைபிராண்ட் எங்கெல்பிரெக்ட் - 255 ரன்கள்
சிறந்த பௌலர்: பாஸ் டி லீட் - 14 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்காவை அப்செட் செய்த நெதர்லாந்து, அதன்பிறகு வங்கதேசத்தை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. 2 தோல்விகள் அடுத்ததாக 1 வெற்றி. பின்னர் இரு தோல்விகள், அதைத் தொடர்ந்து ஒரு வெற்றி என ஒரே டெம்ப்ளேட்டில் தான் சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அந்த வெற்றிக்குப் பிறகு இரு தோல்விகளைச் சந்தித்துவிட்டு இந்தியாவை எதிர்கொள்கிறார்கள்.
மைதானம் எப்படி இருக்கும்?
பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியம் எதிர்பார்த்ததைப் போலவே பேட்டிங்குக்கு சாதகமான மைதனமாகவே இருந்திருக்கிறது. இங்கு இந்த உலகக் கோப்பையில் நடந்த 4 போட்டிகளில், இரண்டில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது. இரண்டில் சேஸிங் செய்த அணிகள் வென்றிருக்கின்றன. சிக்ஸர் மழையாய்ப் பொழிந்த நியூசிலாந்து vs பாகிஸ்தான் போட்டி நடந்தது இங்குதான். அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 400 ரன்களைக் கடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் அந்த ஸ்கோரை எட்ட முயற்சிக்கும்.
இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம்
விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக வலம் வரும் இந்திய அணி இந்தப் போட்டியையும் வென்று சரித்திரம் படைக்க நினைக்கும். இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் மட்டும்தான் இந்திய அணி அனைத்து குரூப் போட்டிகளையும் வென்றிருந்தது. ஆனால் அப்போது 6 லீக் போட்டிகள்தான்! ஒருபக்கம் இந்திய அணி ஒன்பதாவது வெற்றியை குறிவைத்தாலும், ஒருசில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய மாற்றங்கள் இருக்காது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறிப்பிட்டிருந்தார்.
இருந்தாலும், ஓரிரு மாற்றங்களாவது செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் முக்கிய ஆயுதமான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவருக்குப் பதில் பிரசித் கிருஷ்ணா தன் முதல் உலகக் கோப்பை போட்டியில் ஆடக்கூடும். இஷன் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தால் ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் ஒருவருக்குப் பதில் அவர் களமிறங்கலாம். டாப் ரன் ஸ்கோரர்கள் பட்டியலில் இருக்கும் ரோஹித், கோலி ஆகியோர் நிச்சயம் ஆடுவார்கள். ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.
தென்னாப்பிரிக்க அணியை வென்றிருந்தாலும், மற்ற போட்டிகள் நெதர்லாந்துக்கு எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லை. அவர்களின் மிடில் ஆர்டர் மட்டும் ஓரளவு போராடிக் கொண்டிருக்கிறது. பந்துவீச்சு ஒரு போட்டியில் நன்றாக இருந்தால், அடுத்த போட்டியில் சொதப்புகிறது. டாப் ஆர்டர் எதற்கும் உதவுவதில்லை.
ஆனால் அனைத்து ஏரியாவும் இந்தப் போட்டியில் சரியாக செயல்படவேண்டும். ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இடத்தைப் பிடிக்க இன்னும் அந்த அணிக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகளே அந்தத் தொடரில் விளையாடும். புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்திருக்கும் வங்கதேசம் 4 புள்ளிகளே பெற்றிருப்பதால், இந்தப் போட்டியின் வெற்றி நெதர்லாந்து கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.
கவனிக்கவேண்டிய வீரர்கள்
இந்தியா - விராட் கோலி: ஒருநாள் அரங்கில் ஐம்பதாவது சதம் இந்தப் போட்டியில் வருமா என்று இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்: அந்த அணியின் பேட்டிங் தூண். கேப்டனாகவும் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவை வீழ்த்தவேண்டுமெனில் அவர் தன் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியாகவேண்டும்.