Monsoon in Kerala Kerala Tourism
சிறப்புக் களம்

கண்ணுக்கு மை அழகு; கேரளாவுக்கு மழை அழகு... பருவமழை காலத்தில் கேரளாவில் பார்க்க வேண்டிய 5 இடங்கள்!

கேரளாவின் முழு அழகையும் காண வேண்டும் என்றால் தென்மேற்குப் பருவமழை காலத்தில் செல்ல வேண்டும்.

Justindurai S

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. கோடை வெயிலில் வறண்டு போயிருந்த அனைவரின் மனமும், மழையைக் கொண்டு வரும் மண் வாசனையை நுகர்ந்ததும் ஈரம் கசிந்து காணப்படுகிறது. இப்போதுதான் அனைவரின் முகத்திலும் ஒரு இன்பக் கீற்று படர்கிறது.

மழை பெய்கையில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்கும் சுகமும், ஒரு சாய்வு நாற்காலியை போட்டுக் கொண்டு, கையில் சூடான டீயை வைத்துக் கொண்டு மழையை ரசித்தபடியே உட்கார்ந்திருப்பதும் யாருக்குதான் பிடிக்காது. ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் சுகம் எதில் இருக்கிறது தெரியுமா? மென்மையான காற்றோடு பெய்யும் சாரல் மழைக்கு நடுவே சாலையில் செல்வது எவ்வுளவு புத்துணர்ச்சியை கொடுக்கும் தெரியுமா? சரி இதையெல்லாம் அனுபவிக்க நினைக்கிறீர்களா? வாங்க, கேரளாவிற்கு சுற்றுலா செல்வோம். உங்களுக்கு பிடித்த அருமையான இடத்தை நாங்கள் கூறுகிறோம்.

Monsoon in Kerala

கேரளாவின் முழு அழகையும் காண வேண்டும் என்றால் பருவமழை காலத்தில் செல்ல வேண்டும். இந்த சமயத்தில் தான் கூட்டம் குறைவாக இருக்கும். சுற்றுப்புறங்கள் அமைதியாக காணப்படும். அவ்வப்போது வரும் மழை சாரலில் நனைந்தபடியே உங்கள் இணையரோடு ஒரு “ரொமாண்டிக் அவுட்டிங்” செல்ல இதைவிட்டால் வேறு எப்போது செல்வீர்கள்.

நீங்கள் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் மழைக்காலத்தில் செல்லுங்கள். அப்போதுதான் இங்குள்ள நீர்வீழ்ச்சிகளின் முழு அழகையும், பசுமை போர்த்திய புல்வெளிகளில் இருந்து வீசும் இதமான காற்றின் ஸ்பரிசத்தையும், மேகக் கூட்டங்கள் இடையே பனி போர்த்திய மலைச்சிகரங்களின் கம்பீரத்தையும் பார்க்கலாம்.

Athirapally Waterfalls

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கேரளாவில் பல அருவிகள் இருந்தாலும், இந்த அருவியின் அழகை வெறும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது. திருச்சூரில் இருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அதிரப்பள்ளி. இந்த அருவியை பல பாடல் காட்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ‘பாகுபலி’ படக் காட்சிகள் எல்லாம் இங்கு எடுக்கப்பட்டது தான். இதன் அழகை ரசித்தபடியே எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் இங்கு அமர்ந்திருக்கலாம். அருவியை சுற்றிலும் இருக்கும் அடர்ந்த காடுகளும், கீச்சிடும் பறவைகளும், குளிர்ச்சியான சூழலும் உங்களை மெய்மறக்கச் செய்யும். இங்கு வந்தீர்கள் என்றால் அப்படியே அருகிலுள்ள சார்பா அருவி மற்றும் வளச்சல் அருவியையும் பார்க்க மறந்துவிடாதீர்கள்.

THEKKADY

தேக்கடி

தேக்கடியில் பெரியார் வனவிலங்கு சரணாலயம் சென்று அங்கு பெரியார் ஆற்றை கண்டு ரசிக்கலாம். இயற்கையை ரசித்தபடியே காலாற நடந்து இங்குள்ள பல தோட்டங்களை காணலாம். பருவமழை காலங்களில் தேக்கடியில் சுற்றிப்பார்க்க பல அருமையான இடங்கள் உள்ளன.

படகு சவாரி, பசுமை நடை, மேகக்கூட்டங்கள் இடையே நடந்து செல்வது போன்றவை மழைக்காலங்களில் மட்டுமே இங்கு சாத்தியம். மலை ஏறுவது, வனவிலங்கை பார்வையிட காட்டுக்குள் செல்வது, மூங்கில் தெப்பத்தில் சவாரி செய்வது என பல சாகசங்களில் ஈடுபடலாம்.

இது பிரபலமான சுற்றுலாத்தளம் என்பதால் தங்குவதற்கு விடுதிகள் நிறைய உள்ளன. முக்கியமாக தேக்கடியில் இருக்கும் சிறிய கிராமமான வண்டன்மேடுவிற்கு அவசியம் செல்லுங்கள். இங்கு உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக ஏலக்காய் தோட்டங்கள் மிகுதியாக உள்ளன.

Bekal Fort

பெகல் கோட்டை

“கல்லில் வடித்த கவிதை” என இந்த பழங்கால கோட்டையை கூறலாம். 35 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மண் கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் அருகிலேயே கடற்கரை உள்ளது. கொஞ்சம் விட்டால் ஆளையே தூக்கிச் செல்லும் அளவிற்கு அரபிக் கடலில் இருந்து வீசும் காற்றும், கொட்டும் அடை மழையும் இந்த கோட்டையை சுற்றுலாவாசிகளின் விருப்பத்துக்குரிய இடமாக மாற்றுகிறது.

கேரளாவின் மற்ற கடற்கரையில் உங்களுக்கு கிடைக்காத 'ரொமண்டிக் டச்' பெகல் பீச்சில் நிச்சியம் கிடைக்கும். அதனால் தான் என்னவோ மனிரத்னத்தின் பம்பாய் படத்தின் பிரபலமான “உயிரே” பாடல் இங்கு படமாக்கப்பட்டது. அந்தப் பாடலின் உயிரோட்டத்தை இந்த இடம் இன்னும் ஒரு மடங்கு கூட்டியது என்றே சொல்ல்லாம். இக்கோட்டையின் அருகிலேயே பள்ளிக்கரா பீச், பெக்கல் மீன் பூங்கா, கப்பில் பீச் மற்றும் சந்திரகிரி கோட்டை போன்ற பிரபலமான பல பகுதிகளை நீங்கள் சுற்றிப் பார்கலாம்.

Nelliampathi

நெல்லியம்பதி

பாலக்காட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெல்லியம்பதியை சொர்க்கம் என்று சொன்னால் மிகையல்ல. இது ஒரு அற்புதமான மலை வாசஸ்தலம். ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் இங்கு வருடம் முழுதும் இதமான காலநிலை நிலவுகிறது. ஆனால் இதன் அழகை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால் நீங்கள் மழைக் காலத்தில் வர வேண்டும். அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளிகள், பரந்து விரிந்த காஃபி மற்றும் தேயிலை தோட்டங்கள் போன்றவை நிச்சயம் சுற்றுலாவாசிகளை ஈர்க்கக் கூடியவை. நெல்லியம்பதிக்கு செல்லும் வழியெங்கும் உங்களுக்கு பல புதிய அனுபவம்  கிடைக்கும். சாலையின் இருபுறமும் நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்தபடியே உங்கள் பயணத்தை தொடரலாம்.

சாலையில் செல்லும் போதே காட்டு விலங்குகள் உங்கள் கண்ணில் பட வாய்ப்புள்ளது. சுற்றுலாவாசிகளின் வசதிக்காக பாலக்காட்டிலிருந்து நெல்லியம்பதிக்கு பேருந்து வசதியை கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. மலைப்பகுதியான இங்கு காரில் பயணம் செல்வது தான் கொஞ்சம் எளிதானது. இரண்டு மூன்று நாள் தங்குவதாக இருந்தால், கைகட்டி என்ற இடத்தில் கேரள அரசின் தங்கும் விடுதிகள் உள்ளன.

ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் சில காலம் இங்கு தங்கியிருந்ததாக கூறப்படும் சீதர்குண்டு பகுதி மற்றும் கேசவன்பரா, சுளியாறு, மீன்கரா அணை, இந்தியாவில் அதிகளவில் தேயிலையை உற்பத்தி செய்யும் மங்களூரு எஸ்டேட் போன்ற பல அருமையான பகுதிகள் நெல்லியம்பதியை சுற்றிலும் உள்ளன.

வயநாடு

வயநாடு

பருவமழை காலங்களில் வயநாட்டின் அழகை இயற்கை இன்னும் பல மடங்கு உயர்த்துகிறது. வானத்தை தொடும் மலைச்சிகரங்களும் பசுஞ்சோலை போர்த்திய புல்வெளிக் காடுகளும் பனியின் ஊடே ஒரு மாயவித்தையை நிகழ்த்துகின்றன. வயநாட்டின் குளிர்ச்சியும் அவ்வபோது பெய்யும் சாரல் மழையும் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகின்றன.

வயநாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று சொன்னால், பூக்கோடு ஏரி, பானசுரா சாகர் அனை, மீன்முட்டி அருவி, எடக்கல் குகைகள், வயநாடு விலங்குகள் சரணாலயம் மற்றும் குருவா தீவு போன்றவற்றை கூறலாம்.

தவறவிடாதீர்: இது கேரளாவின் ஊட்டி: வா! வா! என அழைக்கும் வயநாடு

Monsoon in Kerala

ஆயுர்வேத சிகிச்சை மையங்கள்

இங்குள்ள ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் கேரளாவின் புகழை உலகளவில் பிரபலமாக்கியுள்ளன. உடல் சிகிச்சை மற்றும் மசாஜ் செய்வதற்காக மட்டுமே பலர் கேரளவிற்கு வருகை தருகிறார்கள். முழுமையான உடல் சிகிச்சையை எடுப்பதற்கு பருவமழை காலம் தான் சிறந்தது என இந்தியாவின் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த சமயத்தில் தான் காலநிலை ஈரப்பத்தோடும், குளிர்ச்சியாகவும் மாசில்லாமலும் இருக்கும். இந்த சமயத்தில் சிகிச்சை எடுத்தால் நம் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.