ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் பிரபலங்களே ஒருவருக்கு ரசிகர் பட்டாளமாக இருக்குமென்றால் அதில் அஜித்குமார் முக்கியமானவர். 'தல' என்ற செல்லப்பெயருடன் கோலிவுட்டில் வலம் வரும் அஜித்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிவருவது மறுக்கமுடியாத ஒன்று. இன்றைய தேதிக்கு அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். வருடத்துக்கு இரண்டு படமே அதிசயம் என்று இருந்தாலும், அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் துளியும் குறையாது. எத்தனையோ தோல்விகளை கொடுத்து சினிமாவில் போராடிக்கொண்டிருந்த வேளையிலும் அஜித்தை அவர் ரசிகர்கள் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பது இன்றளவும் பலருக்கும் அதிசயம்.
அஜித் ரசிகர்கள் யாரிடமாவது சென்று 'நீங்கள் ஏன் அஜித் ரசிகர்'? என்று கேட்டால், அவர்கள் சிரித்துக்கொண்டே 'தெரியவில்லை, ஆனால் அஜித் ரசிகர்' என்பார்கள். இல்லையென்றால் 'அவர் ஒரு நல்ல மனுஷன்' என்று பதில் சொல்லுவார்கள். திரைப்படம் என்பதை தாண்டி, நடிகர் என்பதை தாண்டி அஜித்திடம் அவர் ரசிகர்கள் எதையோ கண்டுக்கொண்டு விடுகிறார்கள். அந்த பிணைப்பு தான் அஜித்தை என்றுமே கொண்டாட வைக்கிறது.
80களில் பிறந்தவர்கள், 90களில் பிறந்தவர்கள், 2k கிட்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களும் அஜித்துக்கு உண்டு. அஜித் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திருவிழாவைப்போல கொண்டாடப்படுகிறது என்றால் அங்கிருப்பது வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது இருக்கிறது.
இன்றைய தேதிக்கு அஜித்குமார் என்றால் மாஸ். ஆனால் ஒருகாலத்தில் சாக்லெட் பாயாக இருந்து பெண் ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர் அஜித். கல்லூரி பெண்கள் கூடி பேசிச்சிரிக்கும் நேரங்களில் 'அஜித் மாதிரி ஒரு பையன்' என்ற பேச்சு அடிபடாமல் கடந்திருக்காது. இது தான் 'பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்' என வைரமுத்துவையும் எழுத வைத்தது.
திரையில் பார்க்கும் ரசிகர்களையும் தாண்டி உடன் நடிக்கும் நடிகர்களும் அஜித் புகழ் பாடுவதும் இயல்பான ஒன்று. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தாலும் அனைவரிடத்திலும் மரியாதை, எளிமை போன்ற இயல்புகளால் அனைவரையும் வசீகரித்து விடுகிறார் அஜித்குமார். அஜித்துடன் நடித்த பாதிப்பில் தன் செயல்பாடுகளில் எளிமையையும், மரியாதையையும் கொண்டுவந்துள்ள நடிகர்களும் கோலிவுட்டில் உண்டு. ரசிகர்களோடு சேர்ந்து எத்தனையோ நடிகர்களும் அஜித்தின் திரைப்படங்களை முதல் நாள் பார்த்து சிலாகிப்பதும் வாடிக்கை.
'வாழு வாழ விடு' என்பதே அஜித்தின் தாரக மந்திரம். ரசிகர்களுக்கு அஜித் சொல்லும் ஒரே அறிவுரை, 'உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் கவனியுங்கள்' என்பதே. அதற்கு அவரே வாழும் உதாரணமும் கூட. திரைப்படத்தை தவிர அஜித்தின் முகத்தை வேறு எந்த திரையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் காணமுடியாது என்பது பல விமர்சனங்களை கொடுத்தாலும் அவரின் ரசிகர்கள் அதனை விரும்பி ஏற்கிறார்கள்.
ஒரு நடிகர் மீது ஏன் இவ்வளவு அன்பு? என்று கேட்கும் அளவுக்கான ரசிகர்கள் கூட்டம் அஜித்துக்கு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. காரணம்? அவர் பைக் ஓட்டுகிறார், கார் ஓட்டுகிறார், மாஸாக நடிக்கிறார் என்பதையும் தாண்டியது. ஒருவேளை அவர் நடிப்பதை நிறுத்திவிட்டாலும் அவருக்கான ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ஒருவர் கூட இடம்பெயர்ந்துவிட மாட்டார்கள்.
''ஒரு முறை அஜித் ரசிகர் ஆகிவிட்டால், என்றுமே அஜித் ரசிகர் தான்'' என்பதுவே அஜித் ரசிகர்களின் கான்செப்ட். ஏன் அப்படி? என்று பெரிய ஆய்வுகள் எல்லாம் தேவையில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, திரைப்படம் என்பதை தாண்டி, நடிகர் என்பதை தாண்டி அஜித்திடம் அவர் ரசிகர்கள் எதையோ கண்டுகொண்டு விடுகிறார்கள். அந்த பிணைப்பு தான் அஜித்தை என்றுமே கொண்டாட வைக்கிறது.