சிறப்புக் களம்

'பீஸ்ட்' அப்டேட் போட்டோ... நெட்டிசன்கள் தேடிய அபர்ணா தாஸ் யார்?!

'பீஸ்ட்' அப்டேட் போட்டோ... நெட்டிசன்கள் தேடிய அபர்ணா தாஸ் யார்?!

PT WEB

'பீஸ்ட்' படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படம் மூலமாக நடிகை அபர்ணா தாஸ் பிரபலமாகி வருகிறார். அவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் இணையங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அவரது பின்புலம் குறித்து பார்ப்போம்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகைகள் பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

படக்குழு வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் திலீப்குமார், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் இடம்பெற்றிருந்தினர். மேலும், நடிகர் விஜய் 'டிரம்ஸ்' வாசித்து கொண்டு இருக்க, நடிகை பூஜா ஹெக்டே பாட்டு பாடுகிறார். மற்ற நடிகர்களும் இசை வாத்தியங்களை வாசிப்பது போல உள்ளது. கிட்டத்தட்ட 'டாக்டர்' படத்தில் நடித்திருந்த முக்கால்வாசி நடிகர்கள் இடம்பெற்றிருந்த இந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் 'ஸ்டைலிஷ் லுக்' நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், விஜய் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்துவந்தனர்.

விஜய்யை அடுத்து அந்தப் புகைப்படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது கீ போர்டு வாசித்துக்கொண்டிருந்த பெண் புகைப்படம்தான். ஸ்டைலிஷ் லுக்கில் இருந்த அந்தப் பெண்ணை நடிகர் ரெடின் கிங்ஸ்லி பார்த்துக் கொண்டிருப்பார். இதைவைத்து அந்தப் பெண் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். அவர் பெயர் அபர்ணா தாஸ். 25 வயதாகும் இவரும் கேரள வரவு நடிகைதான். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மாரா பகுதிதான் இவரின் சொந்த ஊர்.

இவரின் குடும்பம் மஸ்கட்டில் செட்டில் ஆகியுள்ளது. என்றாலும் நென்மாரா பகுதியில் பள்ளிப் படிப்பையும், உயர் கல்வியை மஸ்கட்டிலும் முடிந்த அபர்ணா தாஸுக்கு, தமிழகத்துடன் நெருங்கிய உறவு உள்ளது. தமிழகத்தின் தொழில் நகரமான கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில்தான் எம்பிஏ படித்திருக்கிறார் அபர்ணா. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்த வந்த அபர்ணாவுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது 2019-ல் ஃபஹத் பாசில் நடிப்பில் 'ஞான் பிரகாஷன்' படத்தில்தான். இதில் இரண்டாம் கதாநாயகியாக சிறிய வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இதன்பின் அதே ஆண்டு வெளியான 'மனோகரம்' படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அபர்ணா. ஃபீல் குட் மூவியான இதில் 'ஸ்ரீஜா' என்ற வேடத்தில் நடித்திருந்த அபர்ணாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது, 'பிரியன் ஓட்டத்திலானு', 'நீயாம் நிழலில்' என்ற இரண்டு படங்களில் மலையாளத்தில் நடித்து வரும் அபர்ணா, 'பீஸ்ட்' படம் மூலமாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, ஒற்றைப் புகைப்படம் மூலமாக படம் வெளியாகும் முன்பே அபர்ணா தாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருக்கிறார்.

- மலையரசு