ஒட்டுமொத்த உலகமும் தொலைத்தொடர்பு இணைய சேவையின் அடுத்தகட்டமான 5ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் வரவை எதிர்பார்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் சேவை தற்போது உலகின் சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவிலும் விரைவில் 5ஜி அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்க நாட்டில் பயன்பாட்டுக்கு வந்த 5ஜி சேவையால் விமானப் போக்குவரத்து மேற்கொள்வதில் சிக்கல் என சொல்லப்பட்டது.
இதனை அந்நாட்டின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் நிர்வாகம்) உட்பட பல்வேறு நாடுகளின் ஏர்லைன் நிறுவனங்கள் தெரிவித்தன. அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ரெட் கார்டு போட்ட ஏர்லைன்களில் இந்தியாவின் ஏர் இந்தியாவும் ஒன்றாகும். சில நிறுவனங்கள் தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி இருந்தன.
5ஜி சேவையால் விமானங்களுக்கு என்ன சிக்கல்?
எப்போதுமே ஒரு தொழில்நுட்பம் உலகில் அறிமுகமாகும் போது அதற்கான விமர்சனங்கள் எழுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உலகில் 5ஜி சேவை அறிமுகமான போது சூழலியல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். சிலர் கொரோனா பரவலுக்கு 5ஜி தொழில்நுட்பம்தான் காரணம் எனவும் சொல்லியிருந்தனர். இந்த நிலையில்தான் அமெரிக்காவில் 5ஜி சேவையால் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் எழுந்தது.
அமெரிக்காவில் 5ஜி சேவை 3.7GHz முதல் 3.98GHz வரையிலான ஃப்ரீக்வென்ஸி ரேஞ்ச் என்ற அளவில் வழங்கப்படுகிறது. இது 5ஜி பயன்பாட்டில் உள்ள மற்ற நாடுகளின் ஃப்ரீக்வென்ஸி உடன் ஒப்பிடும்போது சற்று கூடுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் நவீன ரக விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியோ அல்டிமீட்டரின் ஃப்ரீக்வென்ஸிக்கும், அமெரிக்காவின் 5ஜி ஃப்ரீக்வென்ஸிக்கும் இடையே சிறிய வித்தியாசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கலுக்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த அல்டிமீட்டரை பயன்படுத்தி தரையிலிருந்து விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றனர் விமானிகள். அதனடிப்படையில் தரையிறங்கும் போது வேகத்தை குறைத்து விமானங்களை சேஃப் லேண்டிங் செய்கின்றனர். பனிமூட்டம் அதிகம் இருந்தால் அல்டிமீட்டரின் உதவி விமானிகளுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
5ஜி மற்றும் அல்டிமீட்டரின் ஃப்ரீக்வென்ஸி அருகருகே இருப்பது சிக்கலை உருவாக்கும் என்பது ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உட்பட ஏர்லைன் நிறுவனங்களின் கூற்றாக இருந்தது.
இந்நிலையில், தற்போது விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்குவதை அமெரிக்க டெலிகாம் சேவை நிறுவனங்களான AT&T மற்றும் VERIZON தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அமெரிக்க அரசு தரப்பிலும் இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்காலிக தீர்வாக பஃபர் ஸோன்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் உள்ளது போல ஃப்ரீக்வென்ஸி ரேஞ்சை குறைத்துவிடலாம் என்ற ஆலோசனைகளும் சொல்லப்பட்டு வருகிறது.