சிறப்புக் களம்

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ - டெல்டா பகுதிக்கு இதனால் என்ன நன்மை?

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ - டெல்டா பகுதிக்கு இதனால் என்ன நன்மை?

webteam

சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு இன்று அடிக்கல் நாட்டி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டத்திற்கும் அதிமுக அரசு அனுமதியளிக்காது. முக்கியமாகக் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தமிழக அரசு அனுமதி தராது. மேலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? அது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த சேதுராமனிடம் பேசினோம். அவர் பல தகவல்களை நமக்கு அளித்தார். “தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் அரசு இதனைக் கொண்டுபோக வேண்டும். இதில் இரண்டு அம்சங்களை நாம் வலியுறுத்த விரும்புகிறோம். ஒன்று; இந்தச் சட்டவரைவுக்கு மத்திய அரசு மேலும் அழுத்தம் கொடுக்காத அளவுக்கு இருக்க வேண்டும். இரண்டு; ஏற்கெனவே இங்கு சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கே கச்சா எண்ணெய் எடுத்து வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு எண்ணெய் எடுப்பதற்கான கொள்கையில் மத்திய அரசு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முன்பு இருந்த சட்டத்திற்கு New Exploration Licensing Policy (NELP) என்று பெயர். ஆனால் இப்போது புதியதாக வந்துள்ளது Hydrocarbon Exploration And Licensing Policy (HELP). இதில் மூன்று விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். ஒன்று; single licensing. முன்பு Nelp கச்சா எண்ணெய் எடுப்பதற்கு மட்டும்தான் அனுமதி. ஆனால் இரண்டாவதாக வந்த Help (மரபு சார்ந்த முறை) மூலம் ஒரு அனுமதியை வைத்து என்னென்ன வளங்கள் உள்ளதோ அதை எல்லாம் எடுத்துக் கொள்ளலாம். இதை காவிரி டெல்டா பகுதியை பொறுத்தவரை ஆபத்தானதாகப் பார்க்கிறோம். இங்கு அனுமதி வழங்கியுள்ள ‘நீரியல் விரிசல்’ என்ற முறை உலகம் முழுவதும் கேள்விக்குரியதாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் இதை தடை செய்துள்ளார்கள். ஆகவேதான் இதை இங்கே அனுமதிக்க மாட்டோம் என நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா எல்லாம் கைவிடப்பட்ட எண்ணெய் வயல்களை ஏலத்திற்கு விட்டார்கள். அது இதுவரை இரண்டு ரவுண்ட் முடிந்துள்ளது. அதில்தான் நெடுவாசல், காரைக்கால் பகுதிகள் எல்லாம் வந்தன. மாநில அரசு அதை செயல்படுத்தவிடாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மீத்தேன் திட்டத்திற்காக முன்பே மத்திய அரசு மன்னார்குடியில் நிரந்தர ப்ளான்ட் போட்டு வைத்திருக்கிறது. இதுதவிர தனியார் நிறுவனங்கள் எங்கு எல்லாம் எண்ணெய் வளங்கள் உள்ளன என்பதை கண்டறியலாம். அப்படி அவர்கள் கண்டறிந்தால் அதை அரசு ஏலத்திற்கு விடும். 2016 இருந்து இதற்காக 5 ரவுண்ட் ஏலத்திற்கு விட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏழு இடங்கள் தேர்வாகி உள்ளன. அதில் நான்கு இடங்கள் காவிரி டெல்டா பகுதிக்குள் வருகின்றன. இங்கு 200க்கும் மேலான கிணறுகள் இயங்கி வருகின்றன. ஆகவே இந்தச் சூழலில்தான் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்” என்றவரிடம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் கிடைக்கக்கூடிய நண்மைகள் என்ன? எனக் கேட்டோம்.



“இதற்கு முன்பாக 2011 இல் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதைப் போன்று அறிவித்துள்ளார்கள். இதனால் என்ன நன்மை என்ற நம்முடைய எதிர்பார்ப்பைதான் சொல்ல முடியும். வேளாண் சார்ந்த தொழில்கள் இல்லாமல் வேறு தொழில்கள் அனுமதிக்கப்படாது. வேளாண் நிலங்கள் முன்பு கூறிய திட்டங்களுக்குப்போவது தடுக்கப்படலாம். வேளாண் தொழிலை பாதுகாப்பதற்கான திட்டங்கள் முன்மொழியப்படலாம். சட்டமன்றத்தில் இதற்காக தனிச் சட்டம் கொண்டு வந்து அறிவிப்பதன் மூலமாக டெல்டா பகுதியைச் சார்ந்த 17 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதுகாக்கப்படும். முன்பு 21 லட்சம் ஹெக்டேர் இருந்தது. அது குறைந்துவிட்டது. அது மேலும் குறையாமல் தடுக்கலாம்” என்றார்.

இது குறித்து அக்ரி செல்வத்திடம் பேசினோம். “உண்மையில் இதை அறிவித்த முதல்வருக்கு எங்களது நன்றி. இதனால் விவசாயம் பாதுகாக்கப்படும். இதை அறிவித்ததன் மூலம் விவசாயத்தை நசிவடையச் செய்யக் கூடிய விஷயங்கள் எதுவும் அந்தப் பகுதிகளில் நுழையாது. ஆகவே பாதுகாக்கப்படும். வெளியிலிருந்து இந்த மண்டலத்திற்குள் வரும் பாதிப்பை தடுக்கும். ஷேல் கேஸ், மீத்தேன் போன்ற அச்சுறுத்தல்கள் இதனால் அகலும் என நம்புகிறோம். ஆனால் இது மட்டுமே போதாது. விவசாயம் எங்கு எல்லாம் நடைபெற்று வருகிறதோ அங்கு எல்லாம் அந்தப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அறிவிப்பால் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் பெருகும்” எனத் தெரிவித்தார்.