சிறப்புக் களம்

ரபேல் விவகாரத்தால் சி.பி.ஐ இயக்குநர் நீக்கமா ? - சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

ரபேல் விவகாரத்தால் சி.பி.ஐ இயக்குநர் நீக்கமா ? - சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

rajakannan

ரபேல் ஊழல் விவகாரத்திற்கும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா காட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களை கூறி வருகின்றனர். இதில், மொயின் குரேஷி மோசடி வழக்கில் ரூ2 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் ராகேஷ் அஸ்தானா மற்றும் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த விவகாரத்தில், திடீரென அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரையும் பிரதமர் மோடி தனித்தனியே அழைத்து சந்தித்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டது, அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இதனிடையே, “சிபிஐ-ன் சுதந்திரத்தை பிரதமர் மோடி படுகுழியில் தள்ளியுள்ளார். சிபிஐ மீதான நம்பகத்தன்மை மீது பலமான தாக்குதல் நடத்தியுள்ளார்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ரபேல் ஊழல் தொடர்பான விசாரணையை தொடங்குவதாக அலோக் வர்மா இருந்தார். இந்நிலையில்தான்  சிபிஐ இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கும் ரபேல் ஊழல் விவகாரத்திற்கும் சம்பந்தம் உண்டா? ரபேல் ஊழல் வழக்கின் விசாரணை அலோக் வர்மா தொடங்க இருந்தது, பிரதமர் மோடிக்கு பிரச்னையாக மாறியிருந்ததோ?” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கம் சிபிஐக்கு எதிராக அரசியல் சதியை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி நியமித்த சிபிஐ அதிகாரிகளை பாதுகாக்கும் பொருட்டு இந்த பிரச்னையில் முக்கிய அதிகாரிகள், இயக்குநர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரபேல் ஊழல் விவகாரம் உள்ளிட்டவற்றை சிபிஐ விசாரித்து வந்ததா என்று எங்களுக்கு தெரியவில்லை. அப்படி ரபேல் விவகாரத்தை விசாரித்ததுதான் பிரச்னை என்றால், இந்த நடவடிக்கை மத்திய அரசினையும், பிரதமரையும், அவருக்கு ஆதரவான அதிகாரிகளையும் பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரித்து வந்த டிஐஜி ஏன் அந்தமானுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, “சிபிஐ என்பது தற்போது பிபிஐ ஆக மாறியிருக்கிறது, அதாவது பாஜக புலனாய்வு அமைப்பாக மாறியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது!” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் மனு சிங்க்வி கூறும் போது “ ரபேல் விவகாரத்தை பார்த்து பாஜக பயந்து போய்யுள்ளது, அதனை தடுக்கவே இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்” எனவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ஜெட்லி “ சி.பி.ஐ என்பது தனித்துவமான அமைப்பு, அதன் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. தலைமை பொறுப்பில் இருக்கும் இரண்டு அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கும் போது, அவர்களை தலைமையாக கொண்டு சி.பி.ஐ செயல்பட்டால், அது எப்படி சரியாக இருக்கும் ? , மேலும் தற்போதைய நடவடிக்கை என்பது அரசின் முடிவல்ல, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு” என தெரிவித்தார். 

முன்னதாக, ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி மூத்த பிரசாத் பூஷன், அருண் ஜோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து வலியுறுத்தி புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக, ரபேல் விவகாரம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் ஆவணங்களை கோர சிபிஐ முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தான், சிபிஐ இயக்குநரான அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.