சிறப்புக் களம்

வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமனாகிறதா? - என்ன சொல்கிறது ஆய்வுகள்

வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமனாகிறதா? - என்ன சொல்கிறது ஆய்வுகள்

Sinekadhara

உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் டி. இதனால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைப்பதுடன், தொற்றுகள் அண்டாமலும், உடலை வலிமையாகவும் எலும்புகளை உறுதியாகவும் வைக்கிறது. வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் நிறை குறியீட்டெண் என்று சொல்லக்கூடிய BMI குறைந்து, உடல் எடை குறைவதையும், எடை கட்டுக்குள் இருப்பதையும் கண்கூடாக பார்க்கமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலில் புதிய கொழுப்பு செல்கள் சேர்வதை வைட்டமின் டி குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், மேலும் கொழுப்பு செல்களின் சேமிப்பை அடக்கி, கொழுப்பு சேர்வதை திறம்பட குறைப்பதாகவும் கூறுகிறது மாயோ க்ளினிக். உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதில் செரட்டோனின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இது உடலில் பசியை கட்டுப்படுத்தி, செரிமானத்தைத் தூண்டுவதால், உடல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் எடை குறைகிறது. உடலில் அதிகளவு வைட்டமின் டி இருந்தால் அது இந்த இரண்டு ஹார்மோன்களின் அளவையும் அதிகரிக்கிறது. இது மனநிலை முதல் தூக்கம்வரை உடலில் அனைத்து செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உடற்பருமன் மற்றும் அதீத எடை உள்ளவர்களுடைய உடலில் வைட்டமின் டி குறைவாக உள்ளதா?

ஹார்வார்டு ஹெல்த் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், உடல் பருமனானவர்கள் குறைவான வைட்டமின் டி நிறைந்த உணவுகளையே உட்கொள்வதாகவும், இதனால் வைட்டமின் டியை ஆக்ட்டிவ் ஆக்குவதற்கு தேவையான சில நொதிகளை உடல் இழக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், க்ளிவீலாண்ட் க்ளினிக் கூறுகையில், சிறிய எடை குறைப்பு கூட ரத்தத்தில் வைட்டமின் டியை அதிகரிக்கிறது என்கிறது. எப்படியாயினும் ரத்தத்தில் வைட்டமின் டி அதிகரிப்பது உடல் எடையை குறைத்து, மேலும் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.

வைட்டமின் டி குறைபாட்டை தெரிந்துகொள்வது எப்படி?

டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முயன்றும் முடியவில்லை என்றால் உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளதா என்பதை பரிசோதனை மூலம் கண்டறியலாம். மேலும் சில பொதுவான அறிகுறிகள்:

சோர்வு
இன்சோம்னியா அல்லது தூக்கமின்மை
எலும்பு வலி
மன பதற்றம் மற்றும் மன அழுத்தம்
முடி உதிர்வு
தசை பலவீனம்
உடல் வலி

வைட்டமின் டி-ஐ அதிகரிப்பது எப்படி?

சூரிய வெளிச்சம்: சூரிய ஒளியிலிருந்து அதிகம் கிடைப்பதால் வைட்டமின் டியை ’சூரிய ஒளி வைட்டமின்’ என்றும் அழைப்பர். வைட்டமின் டிக்கு முன்னோடியாகச் செயல்படும் ஒரு வகை கொலஸ்ட்ரால் தோலில் உள்ளது என்று ஹெல்த்லைன் கூறுகிறது. இந்த கலவை சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் UV-B கதிர்களுடன் வினைபுரியும்போது அது வைட்டமின் டியாக மாறுகிறது.

கொழுப்பு மீன்கள்: சூரை, கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் இறால், சிப்பிகள் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகம் இருக்கிறது. மேலும் இந்த உணவுகளில் இதயத்திற்கு நன்மை பயக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகம் இருக்கிறது என்கிறது National Library of Medicine.

செறிவூட்டப்பட்ட உணவுகள்: பால், ஆரஞ்சு ஜூஸ், தானியங்கள், தயிர் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகம் இருக்கிறது.

முட்டை மஞ்சள் கரு: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. அதாவது 100கிராம் மஞ்சள்கருவில், 281 IU வைட்டமின் டி இருக்கிறது. இது மிகவும் அதிகம். எனவே முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடாமல் முழு முட்டையையும் சாப்பிடுவது நல்லது.

தானியங்கள்: எப்போதும் குறைந்த கலோரி கொண்ட செறிவூட்டப்பட்ட தானியங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது தினசரி தேவையான வைட்டமின் டியை உடலுக்கு கொடுத்துவிடும். இதனை சர்க்கரை இல்லாத செறிவூட்டப்பட்ட பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.