கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயர் விஜய். மாஸ்டர் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்துகொண்டிருந்த வேளையில், படப்பிடிப்புக்கு இடையே புகுந்தது வருமான வரித்துறை. நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வியாபாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற வருமானவரித்துறை, விஜயை அவரது பனையூர் வீட்டிற்கு கையோடு அழைத்துச்சென்று விசாரித்தது. இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடிய விடிய சோதனை என தொடர்ந்த வருமான வரித்துறையினரின் அப்டேட், விஜய் வீட்டில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்ற விளக்கத்துடன் முடிந்தது. வருமானவரித்துறை பரபரப்பிற்கு பின் மீண்டும் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அப்போது விஜயை விமர்சித்து இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் பேட்டி கொடுத்தார். அந்தப்புள்ளியில் வருமானவரித்துறை என்ற கட்டத்தில் இருந்து அரசியல் களத்திற்குள் சென்றது விஜய் விவகாரம். அர்ஜூன் சம்பத்தின் பேட்டிக்கு எதிர்வினையாக திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டினர் விஜய் மக்கள் இயக்கத்தினர். அர்ஜூன் சம்பத்திற்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம் இருந்ததாகவும் ஆனால் விஜய் தரப்பில் இருந்து அனுமதி இல்லை என்பதால் அமைதியானதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது இந்த விவகாரம். என்.எல்.சியின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு விஜயை எதிர்க்க எண்ணமில்லை, நிலக்கரி சுரங்கத்தை பாதுகாக்க வேண்டுமென்பதே எண்ணம் என்ற விளக்கத்தை கொடுத்தது பாஜக. ஆனால் விஜய்க்கு எதிரான பேட்டிக்கே போராட்ட திட்டமிட்ட விஜய் ரசிகர் மக்கள் இயக்கம், பாஜகவின் போராட்டத்திற்கு வேறு மாதிரியான பதிலை தரவிரும்பியதாகவே கூறப்படுகிறது. அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு எதிராக தங்கள் தரப்பு கூட்டத்தை கூட்டி பலத்தை நிரூபிக்க மக்கள் இயக்கம் திட்டமிட்டதாகவே தெரிகிறது.
அதுவரை நெய்வேலியில் சத்தமில்லாமல் சென்ற மாஸ்டர் படப்பிடிப்பு அதற்கு பின் சுற்றுலாத்தளமானது. வருமான வரித்துறையினரின் வருகை, அடுத்து அரசியல் கட்சியினரின் வருகை என தடம் மாறிய நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கு பின்னர் வந்து சேர்ந்தது பெரும் படை. கையில் விஜய் மகக்ள் இயக்கத்தின் கொடிபறக்க விஜய் ரசிகர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் போலீசாரும், பாதுகாப்புப்படையினரும் குவிக்கப்பட்டனர். கூட்டத்தை கலைந்து போகச்சொல்லி தடியடியும் நடத்தப்பட்டது.
ஆனால் அடுத்த நாள் கூட்டம் மேலும் அதிகமானது. படப்பிடிப்பு நடக்கிறது, விஜய்யை பார்க்கலாம் என்ற பொதுவான பார்வையால் பொதுமக்களும் அங்கு கூடத்தொடங்கினர். காத்திருப்பவர்களை ஏமாற்றாத விஜயும், ஷூட்டிங் வேன் ஏறி ரசிகர்கள் பட்டாளத்துடன் செல்ஃபி எடுத்தார். விஜயின் செல்ஃபியால் ஆர்வமான ரசிகர்கள், பொதுமக்களும் அதிக அளவில் வர மூன்றாவது நாளும் நெய்வேலியில் கூட்டம் அலைமோதியது. அன்று பேருந்தின் மேலே ஏறிய விஜய் கைகூப்பி நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே விஜய் எடுத்த செல்ஃபியும் வைரல் ஆனது. இப்படி சத்தமில்லாமல் நெய்வேலிக்கு வந்த விஜய், பெரும் கூட்டத்திற்கு இடையே கைகூப்பியபடியே வெளியேறினார்.
நடந்த கதை இதுவென்றாலும், இந்த கூட்டம் கூடியதற்கு பின்னால் விஜயை காணவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இல்லை என்றும் விஜய் எதிர்ப்புக்கு பெரும் பதிலைக் கூற விரும்பியே இவ்வளவு கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தெரிகிறது. விஜயைத் தொடரும் அரசியல் நகர்வுகளை விஜய் மக்கள் இயக்கம் கூர்ந்து கவனிப்பதாகவும் கண்டன போஸ்டர்கள், ஒரே நாளில் திரட்டப்பட்ட கூட்டம், சமூக வலைதளங்களில் ஆதரவு ட்ரெண்டிங்ஸ் என சத்தமில்லாமல் துரிதமாக வேலைபார்த்து வருவதாகவுமே அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
சர்க்கார், மெர்சல் இசை வெளியீட்டு விழாக்களில் விஜயின் அரசியல் பேச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மாஸ்டர் படம் முன்னதாகவே அரசியல் பேசத்தொடங்கிவிட்டது என்கின்றனர் சிலர். போராட்டம் சுரங்கத்தை காப்பாற்றவே என்று அரசியல்கட்சி கூறுவது உண்மை என்றால் ரசிகர்கள் கூடியதும் விஜயைப்பார்க்க மட்டுமே என்கின்றனர் விஜய் ரசிகர்கள். வருமானவரித்துறை, நெய்வேலி கூட்டம் என பல கதைகள் நடந்துவிட்ட நிலையில் ஒரே செல்ஃபியை மட்டுமே எடுத்துவிட்டு அமைதியாக இருக்கும் விஜய் மாஸ்டர் இசைவெளியீட்டில் ஏதேனும் பதில் அளிப்பார் என்பதையே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.