சிறப்புக் களம்

"தீவிரவாதி பொண்ணு எப்படி அரசியலுக்கு வரலாமென்று கேட்கிறார்கள்": வீரப்பன் மகள் பேட்டி

"தீவிரவாதி பொண்ணு எப்படி அரசியலுக்கு வரலாமென்று கேட்கிறார்கள்": வீரப்பன் மகள் பேட்டி

sharpana

“இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன். ராதாகிருஷ்ணன் அய்யாவை சந்தித்தேன். ‘பாஜக மூலம் நீங்கள் நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும்’ என்று அவர், கேட்டுக்கொண்டதால் கட்சியில் இணைந்தேன். அதற்கு முன்புவரை அரசியலில் சேரவேண்டும் என்ற எண்ணமே இல்லை. கொரோனாவுக்குப் பிறகு கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட இளைஞர்களிடமும் பெண்களிடமும் கட்சியை வளர்க்கத் திட்டமிட்டுள்ளேன்” என்று  உற்சாகமுடன் பேசுகிறார், ‘வீரப்பன்’ மகள் வித்யாராணி.

சமீபத்தில், பா.ஜ.க மாநில இளைஞரணி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வித்யாராணியிடம் பேசினோம்… எந்தக் கேள்வி கேட்டாலும் மனதில் பட்டதை மறைக்காமல் எதார்த்தமாக பேசினார்.

உங்கள் அப்பாவை சுட்டுக்கொன்றது அ.தி.மு.க அரசு. ஆனால், அதே அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பாஜகவில் இணைந்திருக்கிறீர்களே?

 இதையெல்லாம் நினைத்து நான் பின்வாங்கினால், என் நோக்கம் நிறைவேறாது. எங்க அப்பாவுக்கும் காவலர்களுக்கும் நடந்த சண்டையில் எத்தனையோ மக்கள் வாழ்க்கையை இழந்துள்ளார்கள்? இரு தரப்பிலுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், எனது அப்பா தேவையில்லாமல் யாருடைய உயிரையும் எடுத்ததில்லை என்று நம்புகிறேன். சட்டத்தை மதிக்காமல் சென்றதால் அவருக்கு, இதுபோன்ற ஒரு நிலைமை வந்துவிட்டது. எனக்கு அது வருத்தம்தான். முன்கூட்டியே நல்ல வழியில் சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பது விஷயம் இல்லை. அப்பாவை சுட்டுக்கொன்ற கூட்டணி என்று நான் யோசிக்கவில்லை. பா.ஜ.க நாடு முழுவதும் பிரபலமான கட்சி. அதன்மூலம், மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகத்தான் நினைக்கிறேன்.

அப்படியென்றால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உங்களை வேட்பாளராக பார்க்கலாமா?

அதுகுறித்து, இன்னும் யோசிக்கவில்லை. ஆனால், கட்சி முடிவு செய்தால் போட்டியிடுவேன்.

 தேர்தலில் போட்டியிட பணபலம் வேண்டுமே? உங்கள் அப்பா நிறைய பணம் வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறதே?

நாங்கள், ஒரு சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். அப்பா வாழ்க்கையில் எல்லாம் விபரீதமாக நடந்துவிட்டது. பலர் பலவிதமாக சொல்கிறார்கள். அதெல்லாம் புரளி. அப்பா வைத்திருந்ததாக சொல்லப்பட்ட பணமெல்லாம் என்ன ஆச்சு? எங்கப் போச்சின்னு தெரியாது. அதையெல்லாம் பார்த்ததுகூட இல்லை. எங்களுக்குப் படிக்க உதவி பண்ணியதே வெளிமனிதர்கள்தான். இப்போது, கர்நாடக எல்லையில் அப்பாவின் பூர்வீக சொத்தான ஒரு தோட்டமும் வீடும் உள்ளது. அவ்வளவுதான்.

உங்கள் காதல் திருமணம் சர்ச்சையானதே? எதிர்ப்பு தெரிவித்த உங்கள் அம்மா சமாதானம் ஆகிவிட்டாரா?

பெரும்பாலான பெற்றோர்களுக்கு காதல் திருமணம் பிடிக்காது. அதுதான், எனக்கும் நடந்தது. நாளைடைவில் சரியாகிவிட்டது. என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிகிறார். மிகுந்த மரியாதை கொடுத்து என்னை சமமாக நடத்துவார். எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். அவரின் அந்தக் குணம் என் அம்மாவுக்கு பிடித்துவிட்டது. இருவரும் சமாதானமானதில் எனக்கு நிம்மதி. என் அரசியலுக்கு கணவரும், அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருக்கும் உங்கள் அம்மா, பா.ஜ.கவில் நீங்கள் பொறுப்பேற்றது குறித்து என்ன சொன்னார்? 

 நாங்கள், அரசியலை எப்போதும் குடும்பத்திற்குள் கொண்டு வந்ததில்லை. ஆனால், என் விஷயத்தில் அம்மா சந்தோஷப்படுகிறார். ஏன் இந்தக் கட்சியில் அவர் இருக்கிறார்? என்று நான் கேட்டதில்லை. அவரும் என்னிடம் கேட்கவில்லை. எங்களுக்குள் எந்த வருத்தமும் இல்லை.

 உங்கள் தங்கை விஜயலட்சுமி என்ன செய்கிறார்?

நானும் தங்கையும் சேர்ந்து இருப்பதற்கான சூழல் அமையவே இல்லை. அவள் வேறொரு இடத்தில் வளர்ந்தாள். ரொம்ப சுட்டித்தனம் செய்வாள். அதனாலேயே, எல்லோருக்கும் பிடிக்கும். என்னைப் போலவே, அவளும் வழக்கறிஞர்தான். திருமணமும் ஆகிவிட்டது. அவளது வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

 உங்கள் அப்பாவிடம் மறக்க முடியாத நினைவு எது?

அப்பா ஒரு நல்ல ஆன்மா. ஏதோ ஒரு சூழ்நிலையால் உலகத்தை விட்டுப்போக வேண்டியதாகி விட்டது. அவரிடம் இருந்த நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வேன். எனது, பாட்டி வீடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. அப்பா அந்தவழிப் போகும்போது நாங்கள் இருப்பதை தெரிந்துகொண்டு வந்து பார்த்துவிட்டுச் சென்றார். நான், மூன்றாவது படிக்கும்போது கடைசியாக அவரைப் பார்த்தேன். முதலும் கடைசியுமாக என்னிடம், ’மருத்துவராகி மக்கள் சேவை செய்யவேண்டும்’ என்றார். மருத்துவர் ஆக முடியவில்லை. அரசியல்மூலம் சேவை செய்வேன்.

அவரிடம் பிடித்த விஷயம், சொன்னதை செய்வார். துணிச்சலுக்கான உருவம் அவர். நான் பார்த்தவரையில் எளிமையானவர். ’உன் அப்பா ஒரு நகைச்சுவையான மனிதர். ரொம்ப ஜாலியாக பேசுவார்’ என்று எல்லோரும் சொல்லி கேட்டிருக்கிறேன். இன்று நான் இத்தனை பிரச்சனைகளை கடக்கிறேன் என்றால், அது அப்பாவின் தைரியத்தைப் பார்த்துதான்.

பெரிய வருத்தம் என்னவென்றால், ஒரு குடும்பமாக நாங்கள் அப்பாவுடன் வாழவே இல்லை. நான்கு பேரும் ஒன்றுசேர்ந்து உணவுகூட அருந்தியதில்லை. அதற்கான, சூழலும் அமையவில்லை. நானாவது அப்பாவை பாத்துள்ளேன். தங்கைக்கு அதுவும் கொடுத்து வைக்கவில்லை. அப்பா என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்துவிட்டோம். அவருடன் ஒரு ஃபோட்டோ கூட எடுத்ததில்லை. ஒரு பெண்ணின் வாழ்வில் அப்பாவின் தேவையும், இல்லாத வலியும் வளர்ந்த பின்புதான் தெரியும்.

 அப்பாவுடன் இருந்தவர்களுடன் பேசுகிறீர்களா?

யாராவது கஷ்டப்பட்டால் அப்பாவால் தாங்க முடியாது. அதனால்தான், நிறைய செய்திருக்கிறார். அவர் எனக்குள் வாழ்கிறார். அப்பாவுடன் இருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். அவரும் கொஞ்சம் கண் தெரியாதவர்தான். அவரின் பிள்ளைகளுக்கும் இன்னும் கொஞ்சம் பேருக்கும் எங்களால் முடிந்த உதவிகளை இன்றுவரை செய்து வருகிறோம்.

 வழக்கறிஞருக்கு படித்துவிட்டு பள்ளி நடத்துவது ஏன்?

நான், வளர்க்கப்பட்ட முறை அப்படி. எனக்கு பள்ளிதான் வீடு. விளையாடுத்திடல் எல்லாமே. வெளியுலகமே தெரியாமல் வாழ்ந்தேன். நான், கொடுத்து வைத்த விஷயம் ரொம்ப நல்ல மனிதர்களுடன் வாழ்ந்துவிட்டேன். என் ஆசிரியர்கள் சின்ன விஷயத்தில்கூட நல்லதையே சொல்லிக்கொடுத்தவர்கள். அவர்களின் ஊக்கத்தால் மாநில அளவிலான ஓட்டப்பந்தயத்தில் நிறைய பதக்கங்களை  குவித்துள்ளேன். கிளாசிக்கல் டான்சஸில்கூட அரங்கேற்றமும் செய்துள்ளேன். என், பள்ளி வாழ்க்கையை மிஸ் செய்ததாலேயே கிருஷ்ணகிரியில் ’வித்யா ப்ளே ஸ்கூல்’ ஆரம்பித்தேன். அதோடு, வித்யா அகாடமி பெயரில் நீட் தேர்வும் சிவில் சர்வீஸ்  கோச்சிங்கும் கொடுத்துவருகிறோம். நான், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்போடு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாவரவியலும் விலங்கியலும் எடுக்கிறேன். இதில், பல ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்கிறார்கள்.

 விஜயகுமார் ஐ.பி.எஸ் உங்கள் அப்பா குறித்து  ‘சேசிங் தி பிரிகண்ட்’ என்ற நூலை வெளியிட்டுள்ளாரே? படித்திருக்கிறீர்களா?

கொஞ்சம் உண்மைத் தன்மையோடு எழுதியிருக்கலாம். ஒரு மனுஷன் கிடைச்சிட்டார்; அவருக்கு ஒரு கிரிமினல் பின்புலம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று எழுதியிருக்கிறார். அதில், எனக்கு வருத்தம்தான்.

 நீங்களும் உங்கள் தங்கையும் வழக்கறிஞர்கள். அப்படி இருக்கும்போது வழக்கு தொடுத்திருக்கலாமே?

 நாங்கள், குழந்தையிலிருந்தே பிரச்சனைகளை மட்டும்தான் சந்தித்துள்ளோம். இனிமேலாவது வாழவேண்டும் என்று நினைக்கிறோம். எங்க அப்பா அப்படி சூழ்நிலையால் மாட்டிக்கிட்டார் என்பதற்காக நாங்களும் எங்க குடும்ப வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிக்க முடியாது. துஷ்டரை கண்டால் தூரவிலகு பாலிஸியை கடைப்பிடிக்கிறோம். யாரிடமும் எந்தப் பிரச்சனைக்கும் போவதில்லை.

நீங்களும் ஓ.பி.சி பிரிவில்தான் வருவீர்கள். ஆனால், நீங்கள் பொறுப்பேற்றிருக்கும் பாஜக ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று மறுத்து வருகிறதே?

நானும் ஓ.பி.சியில் வந்தாலும் என்னை பாஜக ஒதுக்கவில்லையே? பொறுப்புதானே, கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

 பிடித்த அரசியல் தலைவர்?

நிர்மலா சீதாராமன். அவரின் உறுதியான பேச்சும் செயல்களும் பிடிக்கும். அதற்கடுத்ததாக, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகராவ் பிடிக்கும். அவரின், அரசியல் மக்களுக்கானதாக உண்மைத்தன்மையோடு உள்ளது.

அப்பாவின் மீசையைப் பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். உங்களுக்கு என்னத் தோன்றும்?

எங்கள் குலதெய்வம் மீசையோடுதான் இருக்கும். அப்பாவை பார்த்து பயந்ததில்லை. வீரத்தின் அடையாளமாகப் பார்க்கிறேன்.

 உங்கள் அப்பாவை விமர்சித்ததில் பாதித்த விமர்சனம் என்ன?

’தீவிரவாதி பொண்ணு எப்படி அரசியலுக்கு வரலாம்’ என்று கேட்கிறார்கள். ஏன், பாதிக்கப்பட்டவர்கள் திருந்தி வரக்கூடாதா? அதை, ஏன் குத்திக்காட்ட வேண்டும்.

- வினி சர்பனா