கடந்த இரு வார உலகப் பொருளாதார நடப்புகளை கவனித்து வரும் பலர் - 'நாயகன்' திரைப்படத்தில் வரும் கமல்ஹாசன் போல, "இந்தியா - ஒரு உள்ளூர் தாதாவாக மாறி, அமெரிக்காவுடன் மல்லுக்கு நிற்க வேண்டும்" என்ற கருத்தை முன்வைக்க.... "போகாத ஊருக்கு வழி சொல்வதில் நம்பிக்கை இல்லை. சுமூகமான தீர்வுக்கு என்ன வழி என்பதைத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார்கள் மற்றவர்கள்.
இதில், எந்தப் பாதையை இந்தியா தேர்வு செய்யப் போகிறது என்பது முக்கியம். தற்போதைய நடப்புகளும், செய்யப்படும் முன்னேற்பாடுகளும் நமக்கு காட்டும் திசை - இரண்டாவது பாதையை! சரி.... "கடந்த இரு வாரங்ககளில், உலக அரங்கில் அப்படி என்ன பெரிதாக நடந்திருக்கிறது?" என்பது நியாயமான கேள்வி!
மார்ச் 19 மற்றும் 20 தேதிகளில் - அதாவது, இன்று தொடங்கி, 2 நாட்கள் - தலைநகர் தில்லியில் உலக வர்த்தக அமைப்பு - WTO உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மட்டத்திலான உச்சி மாநாடு நடக்கிறது. கிட்டத்தட்ட 50 நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவையும், இந்த மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மட்டும் இதில் பங்கேற்காது என தெரிகிறது - அதுவும் கூட, "பங்காளிச் சண்டை" காரணங்களைக் குறிப்பிட்டுதான்! இதுபோன்ற ஒரு தருணத்தில்... சற்றும் எதிர்பாராத வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 4 நாட்களுக்கு முன் - இந்தியாவை பாதிக்கும் இரண்டாவது கணையை வீசியிருக்கிறார். முதல் கணையைப் போல இல்லாமல், இந்த இரண்டாவது கணையின் இலக்கு - இந்தியா மட்டும்தான். ஆம்! இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு - உள்ளூரில் தற்போது அரசு வழங்கும் மானியச் சலுகைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
"இங்கே அரசு தரும் மானிய சலுகையால், சர்வதேச சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் குறைந்த விலையில் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்கிறார்கள். இதே பொருளை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களால், அவற்றைக் குறைந்த விலையில் விற்க முடியவில்லை. அவர்கள் சந்தை வாய்ப்பை இழக்கிறார்கள். எனவே, சமதளத்தில் நின்று வியாபாரம் செய்வதை உறுதிப்படுத்த, இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்" என்பது டிரம்ப்பின் வாதம்.
சரி... இது 2வது கணை என்றால், முதல் கணை எதற்காக? அப்போது வீசப்பட்டது எப்போது?
"கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளைத் தவிர, மற்ற எந்த உலக நாடுகளில் இருந்தும் - அமெரிக்கா இறக்குமதி செய்யும் உருக்கு இரும்புக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" இதுதான், முதல் கணை. மார்ச் 9ம் தேதியன்று வெள்ளை மாளிகையில் இருந்து இது கிளம்பியது.
ஏற்கெனவே, சொன்னது போல இதன் இலக்கு - இந்தியா மட்டுமல்ல; மற்ற பல நாடுகளுடன் சேர்ந்து, இந்தியாவும் பாதிக்கப்படும். அதனால், முதல் கணையால் இந்தியாவுக்கான பாதிப்பு என்றால், 2017ம் ஆண்டின் ஏப்ரலில் தொடங்கி டிசம்பர் வரை - அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 44.53 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கான அலுமினியம் மற்றும் 26.64 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கான உருக்கு இரும்பு போன்றவை, இனி சவாலைச் சந்திக்க வேண்டி வரும்.
இது தவிர, இரண்டாவது கணையினால் பாதிப்பு என்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தற்போது ஏற்றுமதியாகும் - ஐடி துறைக்கான மென்பொருட்களில் தொடங்கி, ஆயத்த ஆடை, பின்னலாடை, உணவுப் பொருட்கள், வாகனங்கள், உதிரி பாகங்கள்.... இப்படி எல்லா சமாச்சாரமும் சவால்களைச் சந்திக்கும். 2016 -17ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஓராண்டில் ஏற்றுமதியாகும் பொருட்களின் மொத்த மதிப்பு 2,74,365 கோடி ரூபாய். அவ்வளவு ஒரே நாளில் கை நழுவிப் போய் விடும் என்பதல்ல பொருள். இனி தொடர்ந்து நம்மால், அந்த அளவுக்கு வியாபாரம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குள்ளாகிறது.
இனி, ஒவ்வொரு கணையாக எடுத்துக் கொண்டு, தாக்கத்தைப் பற்றி பேசுவோம்.
முதல் கணை - உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதி தொடர்பானது. இதனால், கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவிலேயே உள்ள நிறுவனங்களின் காட்டில்தான் மழை. அதுவும் அடைமழை. இதுவரை களத்தில், அவற்றுடன் போட்டியிட்ட பிற நிறுவனங்களை விட - உருக்குக்கு 25% வரை... அலுமினியத்துக்கு 10% வரை விலையில் சாதக நிலையைப் பெற்றுவிட்டன. இந்தியாவைப் போலவே, சீனாவும் இதனால் பாதிக்கப்படும். யதார்த்த நிலையைச் சொல்வதானால், இந்த இரு நாடுகள்தான் டிரம்பின் முக்கிய இலக்கு எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து பேசும்போது, இந்தியாவின் முன்னாள் வர்த்தகச் செயலர் ஜி கே பிள்ளை உள்ளிட்ட, மேலும் சில அறிவுஜிவிகள், "திருப்பி அடிக்க வேண்டும்" என்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பாதாம் பருப்பு, பிஸ்தா, ஹெர்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள், லெவிஸ் ஜீன்ஸ், போர்பென் விஸ்கி போன்ற இன்னும் பல பொருட்களின் மீது நாமும் வரியை அதிகரிக்கலாம் என்பது அவர்களது பரிந்துரை. கவனிக்க... "நாமும் வரிவிதிக்கலாம்" என்று அவர்கள் சொல்லவில்லை; "வரியை அதிகரிக்கலாம்" என்றுதான் சொல்கிறார்கள். அதாவது, ஏற்கெனவே நம்மால் வரி விதிக்கப்படுகிறது. இப்போது, அதை அதிகரிக்கலாம் என, எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றச் சொல்கிறார்கள்.
ஆம். அமெரிக்கத் தரப்பில் இருந்து, இதுகுறித்து பேசும் சிலர் - இந்தியாவின் எதிர்வினையை இப்படித்தான் பார்க்கிறார்கள். டொனால்ட் டிரம்ப் தன் இரண்டாவது கணையை வீசிவிட்டு பேசியதில் மேலும் சில தகவல்கள் உள்ளன. குறிப்பாக - ஹெர்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள். "இந்தியாவில் இருந்து பல வகையான இருசக்கர வாகனங்கள் அமெரிக்காவுக்கு வருகிறது. அதற்கெல்லாம் நாங்கள் வரிவிதிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் ஹெர்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியாவில் 50 சதவீத வரி. (இது ஏற்கனவே 75%ல் இருந்து, குறைக்கப்பட்டிருக்கிறது) இதுபோல, எங்களுக்கு 50% வரிவிதித்தால், நாங்களும் அதே அளவு வரிவிதிப்போம்" என்பது, டிரம்பின் வாதம். அதன் காரணமான மின்னல் வெட்டும், இடி முழக்கமும், புயல் மழையும்தான் இந்திய ஏற்றுமதியாளர்களிடையே!... இன்றைக்கு இந்திய வர்த்தகத்துறை தொடர்பானவர்களின் தலைவலிக்கு காரணம் இதுதான்.
மழைக்காலம் என்றால் - இடி மழையும்.... மின்னல் வெட்டும்... இருக்கத்தான் செய்யும். அப்போதைக்கு குடை பிடித்தோ, ரெயின் கோட்டு அணிந்தோ, ஏதோ ஒருவகையில் சமாளிக்க வேண்டியதுதான். இங்கே குடை... ரெயின் கோட்டு என்பவை - WTO விதிகளில் இந்தியாவுக்கு சாதகமாக உள்ள அம்சங்கள். இன்று தொடங்கி, நாளையும் தில்லியில் நடக்க உள்ள வர்த்தக அமைச்சர்கள் மட்டத்திலான உச்சி மாநாட்டில், இந்தியாவின் தரப்பில் இருந்து அமெரிக்காவுடன் சமரசம் பேச, தீவிர முயற்சிகள் நடக்கும் என்பதுதான் இந்திய அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ரீட்டா டீயோட்டியா பகிர்ந்து கொள்ளும் தகவல்.
இப்போது WTO விதிகளுக்கு வருவோம். WTO ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் மீது, யாரும்... எந்த நாடும் திடீரென தன் விருப்பம்போல வரிவிதிக்க இயலாது என்பதால், உருக்கு இரும்புக்கும், அலுமினியத்துக்கும் வரிவிதிக்கும் ஆணையில் கையொப்பமிட்டபோது கூட, "இது நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக" (எந்த பாதுகாப்பு? பொருளாதாரப் பாதுகாப்போ?) என, ஒரு காரணத்தையும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதனால், இதையே, தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் இந்தியா, "அமெரிக்கா எங்களது நட்பு நாடு. அதனுடன் முரண்பாடு எதுவுமில்லை. எனவே, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த நேரத்திலும் இந்தியா அச்சுறுத்தல் இல்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்படும் ஒரு வரியை, எங்களின் மீதும் விதிக்க வேண்டிய அவசியமில்லை. கனடா, மெக்ஸிகோ நாடுகளுக்கு உள்ளது போல, இந்தியாவுக்கும் வரியில்லா நிலையைத் தர வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கப் போவதாக ரீட்டா டீயோட்டியா உள்ளிட்ட வர்த்தகத்துறை வட்டாரத்தில் யோசனை உள்ளதாம். தில்லியில் நடக்கும் 2 நாள் உச்சி மாநாட்டில் குறைந்தபட்சம், இதற்கான அஸ்திவாரத்தை போடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
விஷயம் இதோடு முடியவில்லை. மாறாக, இங்கேதான் தொடங்குகிறது. காரணம் - ஒரு சாமானிய இந்தியனின் மனதில் இப்போது எழும் வரிசையான கேள்விகள்.
1. அமெரிக்காவின் 'ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிளு'க்கு இந்தியாவில் வரிவிதிப்பது போல - இந்திய மோட்டர் சைக்கிளுக்கு வரிவிதிப்பேன் என டிரம்ப் சொல்வது நியாயம்தானே?
2. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இந்திய அரசு வரிச்சலுகை தருகிறது என்றால், அது என்னவிதமான சலுகை?
3. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அரசு தரும் இவ்விதமான சலுகையை நிறுத்த முடியாதா? நிறுத்தினால், என்ன ஆகும்?
அமெரிக்க அதிபரின் இரண்டாவது கணைப்படி - 'இந்திய அரசு சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகள் தரப்படுகின்றன'. இது உண்மைதான். நம்பத்தகுந்த புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் இருந்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் தரப்படும் மானிய சலுகையின் மதிப்பு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் சொல்வதானால், சுமார் 45,500 கோடி ரூபாய். இந்தத் தொகையை, ஏற்றுமதிக் கடன் வட்டிச் சலுகை, ஏற்றுமதி செய்யும் உத்தரவாதத்தில், இறக்குமதி செய்யப்படும் இயந்திரம் மற்றும் கருவிகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை, சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க கட்டண சலுகை, ஏற்றுமதி மண்டலத் தொழில்களுக்கான சலுகை, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சலுகை.... இப்படி இன்னும் பல விஷயங்கள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. அதோடு, இந்தச் சலுகையை பயன்படுத்துவது யார் என்று பார்த்தால் - இந்திய உருக்கு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, ஐடி துறையின் மென்பொருள் ஏற்றுமதியாளர்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள், விவசாயப் பொருள் ஏற்றுமதியாளர்கள், வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாக ஏற்றுமதியாளர்கள்..... என இதுவும் நீண்டு கொண்டே போகும் ஒரு பட்டியல்தான்.
சர்வதேச வர்த்தகம் என்று வரும்போது - வளர்ந்த நாடான அமெரிக்காவும், வளரும் நாடான இந்தியா போன்ற பிற நாடுகளும், உலகில் உள்ள இன்னும் பல ஏழை நாடுகளும் WTOவின் பார்வையில் ஒன்றுதானா.... என்ற கேள்வி நியாயமானது. அப்படி, கண்மூடித்தனமான நிபந்தனைகள் விதித்தால், இந்த WTO அமைப்பு, இன்னும் உயிரோடு இருக்குமா.... எப்போதே அதன் சடலத்தின் மீது புல் முளைத்திருக்கும். ஆனால், இன்னும் ஜல்லிக்கட்டு காளை போல, அது துள்ளிப் பாய்வதற்கு காரணம் இருக்கிறது. WTOவுக்கான விதிகள் வகுப்பதில், பல இடங்களில்... பல்வேறு காரணிகளை வைத்து சலுகைகள்..., நிபந்தனைகள்...., தளர்வுகள் தரப்பட்டுள்ளன. இதோடு, பிரச்னை என்றால், அதை தீர்ப்பதற்கும் சில இணக்கமான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை ஏற்று சரியான பாதையில் பயணிப்பது - அந்தந்த நாடுகளின் முடிவு! திறமை!! சாதுர்யம் அல்லது சாணக்கியத்தனம்!!!
இப்போது, இந்திய ஏற்றுமதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த காரணமாக இருக்கும் விதி - "மான்யங்கள் மற்றும் பிற சலுகைகள் தரப்படுவது குறித்தானது" அதாவது - WTO Agreement on Subsidies and Countervailing Measures.
இதன்படி,
1. ஒரு நாட்டின் தனிநபர் ஆண்டு சராசரி வருமானம், ஆயிரம் அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தால், அவை தங்களது நாட்டின் ஏற்றுமதி தொழில்களுக்கு மானியம் அளிக்கக் கூடாது.
2. வளர்ந்து வரும் நாடாக இருக்கும் பட்சத்தில், அதன் ஆண்டு சராசரி தனிநபர் வருவாய் - தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு 1000 அமெரிக்க டாலரைக் கடக்கும் பட்சத்தில், அந்த நாடு ஏற்றுமதி தொழிலுக்கு மானியம் வழங்குவதைப் படிப்படியாக நிறுத்த வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும்.
இந்தியா, தற்போது மேற்கண்ட இரு விதிகளின்படித்தான் பாதிப்புக்கு உள்ளாகிறது. காரணம் - கடந்த 2013, 2014, 2015 ஆகிய 3 ஆண்டுகளில், தொடர்ந்து தனது ஆண்டு சராசரி தனிநபர் வருமானத்தில் - 1000 அமெரிக்க டாலர் மதிப்பை இந்தியா கடந்துவிட்டது. அந்தத் தகவலை WTO முறைப்படி சான்றளித்து 2017ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. எனவே, இந்த 2018ல் தொடங்கி ஏற்றுமதிக்கான மானியங்களை படிப்படியாக நிறுத்த வேண்டும்.
அதை வலியுறுத்தத்தான், அமெரிக்கா முயல்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால், அதை வேறு வழியில் அணுகுவதாகத் தோன்றுகிறது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். "கொடுவா பிடி பிடிச்சாத்தான், அருவாப்பிடியாவது மிஞ்சும்" என! அதனால், கோரிக்கை வைப்பதைப் பெரிதாக.... ஒட்டுமொத்த தடை வேண்டும் என்றால்தான், படிப்படியாக 8 ஆண்டுகளில் மானியத்தை நிறுத்திக் கொள்ள தயாராவார்கள் என்று நினைத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் முழுதடை கோரியிருக்கலாம். அல்லது, அவரது இயல்பான அதிரடி நடவடிக்கையாகவும் இந்த 2ம் கணையை ஏவியிருக்கலாம். எது எப்படியானாலும், இந்திய ஏற்றுமதியாளர்களும், இந்திய அரசும் இன்னும் யதார்த்த நிலைச் சந்திக்க தயாராகவில்லை. அதனால், அமெரிக்காவின் அறிவிப்பு இப்போது நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. மறுபுறம், WTO உறுப்பு நாடு என்ற வகையில், டிரம்ப் அறிவிப்பால், இந்தியாவுக்கு உடனடியாக - பெரும் பாதிப்பு வர வாய்ப்பில்லை. பல நேரங்களில் இந்தியாவுக்கு பாதகமான அமைந்த WTO, இந்தச் சூழலில் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. 2025க்குள் ஏற்றுமதி மானியங்களை நிறுத்துவது எப்படி என திட்டமிட்டு தயாரானால் போதும் என்பதே விவரமறிந்தவர்களின் விளக்கம். எனவே, இப்போது தில்லியில் நடக்கும் உச்சி மாநாட்டிலும், அதன் பிறகும் முயன்று, டிரம்ப் வீசிய 2வது கணையின் சூட்டை சமாளிக்கும் யுக்திகளில் இந்தியா இறங்க வேண்டும்.
முதலாவது கணையைப் பொறுத்தவரையிலும் கூட, இந்தியா அமெரிக்காவுடன் மோதல் போக்கில் இறங்குமா என்பது சந்தேகம்தான். தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 17 உலக நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனால், டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து நடக்கும் சமரச முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாமல் போனால், WTO உறுப்பு நாடுகளில் ஒன்றோ, பலவோ.... சேர்ந்தோ, தனித்தோ அமெரிக்கா மீது வழக்கு தொடர வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், அதில் இந்தியா ஒரு மூன்றாவது தரப்பாக சேர்ந்து கொள்ளத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, டிரம்ப் தொடங்கியுள்ள இந்தச் சர்ச்சை - இப்போதைக்கு, எரியும் தீக்குச்சியைத் தவறுதலாக பிடித்துவிட்ட கையைப் போலத்தான். அதாவது, அறுவை சிகிச்சை... அது.... இதுவென அவசரகதி எதுவும் தேவையில்லை; ஆனால், வார்த்தைகளால் விவரிக்க முடியாத எதோ ஒருவகை எரிச்சலால் நிம்மதி இழந்த நிலை தொடரும். எத்தனை விரைவில் காயத்துக்கு மருந்து போட்டு புண்ணை ஆற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் தீர்வு இருக்கிறது.