நடப்பு நிதியாண்டின் (2020-21 ) முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இதுவரை பார்த்திராத அளவில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பெரும் பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீளுமா?
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும்போது, ‘’கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில்தான் இருந்தது. இப்போது கொரோனாவினால் மேலும் சரிவை சந்தித்திருக்கிறது. இது உண்மையில் வரலாறு காணாத சரிவு.
கடந்த நிதியாண்டின் (2019-20) முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.2 சதவீதம் வளர்ச்சி இருந்த நிலையில், கடந்த ஜனவரி – மார்ச் மாதத்தில் 3.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு பொருளாதாரம் சரிவை நோக்கித்தான் செல்லும்.
டீசல் மற்றும் பெட்ரோல் மீது வரி விதிப்பு, இறக்குமதி வரி என வரிகளை உயர்த்தினால் மக்கள் கையில் எப்படி பணம் இருக்கும்? நுகரும் தேவை ஊக்குவி்க்கப்படவில்லை. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எப்படி பொருளாதாரம் உயரும்? கொரோனாவின் விளைவுகளை எதிர்கொள்ள சரியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது.
நடப்பு நிதியாண்டு முழுவதும் பொருளாதார வளர்ச்சி 10 முதல் 11 சதவீதம் வரை மட்டுமே இருக்கும். தற்போதுள்ள 23.9 சதவீதம் வீழ்ச்சியை சரிக்கட்ட முடியாது. இதனால் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
100 ரூபாய் இந்தியாவிற்குள் வருகிறது என்றால் 65 ரூபாய் ஒரே நிறுவனத்திற்கே சென்று சேர்கிறது. 8 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டு உள்ளது. அவை ஒரே கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஃபியூச்சர் குரூப் கடனால் மூழ்கிவிட்டது. இவையெல்லாம் ஆரோக்கியமான போக்கு அல்ல’’ என்கிறார் அவர்.
பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ‘’ஜிடிபி சரிவு எதிர்பார்த்த ஒன்றுதான். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், போக்குவரத்து என சகலத்தையும் நாம் முடக்கிவிட்ட பின் எப்படி ஜிடிபி உயரும்? இந்த கொரோனா காலக்கட்டத்தில் எந்த நாட்டில்தான் ஜிடிபி குறையவில்லை? உலகின் வலிமையான பொருளாதார சக்திகளாக திகழும் சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன.
இந்தியா பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் பல நாடுகளை விட நாம் முன்கூட்டியே பொதுமுடக்கத்தை அமல்படுத்தினோம். வரலாறு காணாத சரிவு என்கிறார்கள். கொரோனா வரலாறு காணாத பேரிடர் தானே. அப்படியொரு பேரிடரில் நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்திப்பது இயல்பானதே.
எனினும் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வேளாண் துறை 3.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பொதுமுடக்கத்தில் இருந்து மத்திய அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த காலாண்டில் ஜிடிபி ஓரளவு உயரக்கூடும். முழுமையான அளவில் தளர்வுகள் வரும்போது பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக மீளும்’’ என்கிறார் அவர்.