ஒரு குழந்தை மற்றும் சிறுவன் உட்பட நான்கு பேர் கொண்ட இந்தியக் குடும்பத்தினரின் உடல்கள், அமெரிக்க எல்லைக்கு அருகில் கனடாவில் கண்டெடுக்கப்பட்டன. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்லும்போது கடும் உறைபனியில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க சட்ட அமலாக்கப் பிரிவினர் கனடா எல்லைக்கு அருகே கைது செய்தனர். இவர் கனடாவில் இருந்து சட்ட விரோதமாக மனிதர்களை கடத்தி அமெரிக்காவில் கொண்டு சென்று விடும் வேலையை செய்பவர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், “கனடா-அமெரிக்க எல்லையில் ஒரு கைக்குழந்தை உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள எங்கள் தூதர்களை இந்த நிலைமை குறித்து அவசரமாக விசாரித்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்
சட்டவிரோத மனித கடத்தல்:
கனடாவில் இருந்து பல நாடுகளை சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக எல்லையை கடக்க வைத்து, அவர்களை அமெரிக்காவில் கொண்டுவிடும் வேலையை பல ஏஜெண்டுகள் செய்கின்றனர். உண்மையில் கனடா - அமெரிக்கா எல்லை கடக்கும் பயணம் மிகவும் ஆபத்தானது, இப்பயணத்தில் பலர் உயிரிழப்பது உண்டு.
தற்போது 4 இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து வெளியாகியுள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, வடக்கு டகோட்டாவில் உள்ள அமெரிக்க எல்லைக் காவல்படை புதன்கிழமையன்று கனட எல்லைக்கு தெற்கே ஸ்டீவ் ஷாண்ட் என்பவர் இயக்கிய ஒரு பயணிகள் வேனை நிறுத்தியது, அந்த வேனில் ஆவணமற்ற இரண்டு இந்திய பிரஜைகளுடன் இருந்தார். மேலும், அந்த வாகனத்தின் உள்ளே பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் மற்றும் சிற்றுண்டிகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வேனை பிடித்த இடத்திற்கு அருகிலேயே ஐந்து இந்திய பிரஜைகள் நடந்து செல்வதை போலீசார் கண்டனர்.
அவர்களை கைது விசாரித்தபோது, தாங்கள் எல்லையைத் தாண்டிச் செல்வதாகவும், தங்களை அழைத்துச் செல்ல சிலர் வருவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் 11 மணி நேரத்திற்கும் மேலாக உறைபனியில் நடந்ததாகவும் தெரிவித்தனர், இவர்களில் பலரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலும் விசாரணை நடத்திய போது மற்றொரு குடும்பம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து கனடாவின் வின்னிபெக்கில் உள்ள மனிடோபா ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக அந்தப் பகுதியைத் தேடத் தொடங்கினர். கடினமான தேடுதலுக்குப் பிறகு, எல்லையில் இருந்து வெறும் 10 மீட்டர் தொலைவில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூன்று உடல்களை அதிகாரிகள் ஒன்றாகக் கண்டுபிடித்தனர். சிறிது தூரத்தில் ஒரு இளம் சிறுவனின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது . அவர்கள் குளிர்கால ஆடைகளை அணிந்திருந்தனர், ஆனால் உறைபனி தாங்காமல் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது, ஏனெனில் அப்பகுதியில் குளிர் வெப்பநிலை மைனஸ் 35 C ஆக உள்ளது.