சிறப்புக் களம்

கடினமான மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடந்தது எப்படி ?

கடினமான மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடந்தது எப்படி ?

சென்னையில் இப்போது அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சுரங்கப் பணி முடிவடைந்துவிட்டது. இப்போது திருமங்கலம் - செனாய் நகர் இடையே சுரங்க வழி மெட்ரோ ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள்ளாக நேரு பூங்கா தொடங்கி எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும்.
மேலும் சென்னையில் வண்ணாரப்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை இடையிலான சுரங்கப் பணியும் முடிவடைந்துவிட்டது. நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் மெட்ரோ ரயில் சுரங்க செய்திகளை படிப்போம் பார்ப்போம், ஆனால் அந்தச் சுரங்கப் பணி எப்படி நடைபெற்று இருக்கும் என நாம் எப்போதாவது யோசித்து இருக்கோமா ?

சென்னைப் போன்ற பழமையான நகரங்களில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடைபெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதே நிதர்சனம். இந்தியாவிலேயே மிக சவாலான மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் சென்னையில் மட்டுமே நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் அதிகப்படியான பாறைகள் இருந்ததால் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணி மிகக் கடுமையானதாகவே இருந்தது என்று பணியாற்றிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 
கடந்த காலங்களில் அண்ணா சாலையில் ஏற்பட்ட விரிசல்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால் இதுபோன்ற பள்ளங்களும், விரிசல்களும் சுரங்கப் பணியின்போது ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் இதனால் உயிரிழப்பு, பொருள் சேதமும் ஏற்படாது என பொறியியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

எப்படி சுரங்கப் பணி நடைபெற்றது? 

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் ஈடுபட்டன. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டன.
சாலைக்குக் கீழே சுமார் 20 மீட்டருக்கு கீழே ரயில் பாதை அமைக்கப்படுகிறது. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டருக்கு கீழே சுரங்கம் தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்தச் சுரங்க ரயில் பாதை அமைகிறது.
மேலும், 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப் பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் தூரம் வரை சுரங்கம் தோண்டப்பட்டது. டனல் போரிங் இயந்திரத்தின் முன்புறம் உள்ள கூர்மையான பிளேடுகள் சுரங்கத்தை தோண்டும். சுரங்கத்தை தோண்டிக்கொண்டே சிமென்ட் கலவைகள் மூலம் வட்டமாக வழி ஏற்படுத்தும். சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் மண் குவியல்கள் இயந்திரத்தில் உள்ள கன்வயர் பெல்ட் மூலம் வெளியே அனுப்பப்படும். பின்பு, லாரிகள் மூலம் சென்னைக்கு வெளியே மண் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.

சவாலாக இருந்த எழும்பூர் பகுதி

சென்னையிலேயே சவாலாக இருந்தது நேரு பூங்கா - எழும்பூர் இடையிலான சுரங்கப் பாதை மட்டுமே. இந்தப் பகுதியில் அதிகமான பாறைகள்
இருந்ததால் கடினமான சேதங்களை டனல் போரிங் இயந்திரம் சந்தித்தது. கிட்டத்தட்ட 2012 ஆம் ஆண்டில் சுரங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டுதான் முடிவுற்றன. சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என 9 ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் உள்ளன.

850 பழைய கட்டடங்கள் ! 

வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையேயான சுரங்க ரயில் பாதை மிகவும் சிக்கலாக இருந்தது. இந்தப் பகுதிகளில் பழைய கட்டடங்கள் இருந்ததால், அவ்வப்போது பல பிரச்னைகளைக் கடந்து இந்தப் பணிகளும் இப்போது நிறைவு பெற்றுள்ளன. வண்ணாரப்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே மட்டும் கிட்டத்தட்ட 850 கட்டடங்களைத் தாண்டி இந்தச் சுரங்கப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

ராட்சத மின் விசிறிகள் 

சுரங்க ரயில் நிலையங்களுக்கு தலா 4 ராட்சத மின்விசிறிகள் மூலம் காற்றோட்டம் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த ராட்சத மின்விசிறிகள், வெளியே இருந்து உள்ளே காற்றை இழுத்து உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுகின்றன. 
மெட்ரோ ரயில் சுரங்கத்தில் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் பாதுகாப்பு நுழைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய சுரங்கத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி சுரங்கத்தில் இருக்கும் பாதுகாப்பு நுழைவில் சென்று வெளியே செல்லும் வகையில் இந்த வழி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நுழைவு அருகில் இருக்கும் அடுத்த மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.