சிறப்புக் களம்

பராசக்திக்காக சிவாஜியை தேர்வு செய்த காமக்கூர் வீடு: சிவாஜி பிறந்த தினத்தில் சில நினைவுகள்

பராசக்திக்காக சிவாஜியை தேர்வு செய்த காமக்கூர் வீடு: சிவாஜி பிறந்த தினத்தில் சில நினைவுகள்

webteam

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள். அவர் கணேசனாக இருந்து சிவாஜி கணேசனாக உருவாகக் காரணமாக இருந்த முதல் படம் பராசக்தி. அந்தப் படத்தில் நாயகனாக நடிப்பதற்காக அவரைத் தேர்ந்தெடுத்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் வீடு ஆரணிக்கு அருகில் காமக்கூர் கிராமத்தில் உள்ளது. தமிழ் சினிமாவின் வரலாறு உறைந்த அந்த பழம்பெரும் வீட்டுக்குச் சென்றுவந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.

சம்புவராயர் அடிச்சுவட்டை கள ஆய்வு செய்யலாம் என்ற நோக்கில் ஆரணி நோக்கிப் பயணம் செய்தேன். ஆரணியில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி, சுதாகர் என்ற நண்பரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஆரணியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் இவரது பங்கு முக்கியமானது. ஆரணி டைம்ஸ் என்ற வட்டார இதழ் மற்றும் புத்தகக் கடையும் நடத்திவரும் சுதாகரைத்தான் வழிகாட்டியாக எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார்.

ரெங்கையா முருகன் 

ஆரணியைச் சுற்றிவிட்ட பிறகு நான் சுதாகரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். காமக்கூர் முதுபெரும் புலவர் சுந்தர முதலியார் வம்சாவளியைச் சேர்ந்தவர்களைப் பார்க்கவேண்டும் என்றேன். சுந்தர முதலியார் குறித்து திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி நின்றுகொண்டிருந்த தூண் 

தற்போது சுந்தர முதலியார் பரம்பரையினர் அங்கு இல்லை. அவர்களது வம்சாவளியினர் ஆரணி நகருக்கு சென்றுவிட்டதாகக் கூறினார்கள். அந்த நேரத்தில் சுதாகர், "இந்த ஊர்தான் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ஊர்" என்றார். உடனே எனக்கு ஆர்வம் உண்டாகி சுந்தர முதலியார் வம்சாவளியைத்தான் பார்க்க முடியவில்லை. பெருமாள் முதலியார் வீட்டையாவது பார்க்கலாம் என்று அவரது வீட்டிற்குச் சென்றோம்.

அந்த வீட்டில் வசித்துவருபவர் ரவி. மிகவும் அன்புடன் வரவேற்றார். பெருமாள் முதலியாரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினோம். அவரது மாமனார் இராமசாமி முதலியார் வீடு இது என்றார். பாரம்பரியமிக்க நெசவுத்தொழில் குடும்பத்தைச் சேர்ந்த வீடு. இதுதான் பராசக்தி படத்திற்கு கதாநாயகனாக சிவாஜிகணேசனைத் தேர்வு செய்த வீடு.

ராமசாமி முதலியார் 

நீண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு சிவாஜியைத் தேர்வு செய்தார் பெருமாள் முதலியார். அதற்காக தனது மாமானார் ராமசாமி முதலியாரிடம் "இந்த பையன் நன்றாக நடிப்பான்" என்று வலியுறுத்தி இணங்க வைத்தாராம். அந்த நேரம், இந்த வீட்டின் தாழ்வாரப் பகுதியில் சுவற்றின் நீலவண்ணத் தூணில் சாயந்து நின்றபடி சிவாஜி கணேசன் சற்று பதற்றத்துடன் காணப்பட்டார். வீட்டிற்குள் மிக நீண்ட விவாதம் நடந்து அதன் பிறகே அவரைத் தேர்வுசெய்தார்களாம்.

ராமசாமி முதலியாரின் மகள் சாந்தா நாயகி அம்மாள் 

இந்த வீட்டை கடைசிவரையில் சிவாஜி கணேசன் மறக்காமல் நன்றிக்கடன் செலுத்திவந்தார். ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் தன்னை தேர்வு செய்த இந்த வீட்டிற்கு வந்துவிடுவார். வேட்டித் துணிகள் மற்றும் பழங்களுடன் சீர் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்று ஆசீர்வாதம் வாங்கிவருவதை வழக்கமாக வைத்திருந்தார் சிவாஜி. அவர் மறைந்த பிறகும் நடிகர் பிரபு குடும்பத்துடன் இந்த வீட்டிற்குச் சென்றுவருகிறார்.

சிவாஜியை தேர்வு செய்வது பற்றி பெருமாள் முதலியார் ஆலோசித்த அறை 

பெருமாள் முதலியாருடைய மாமானார் ராமசாமி முதலியாரின் பெரிய மகள் சாந்தா நாயகி. அந்த அம்மாவின் ஞாபகார்த்தமாகத்தான் சிவாஜி கணேசன் தனது தியேட்டருக்கு சாந்தி என்று பெயரும் வைத்தார். அந்தக் காலத்தில் ஒரு நாள் சிவாஜி கணேசன் கனவுடன் நின்றுகொண்டிருந்த அந்த பழைமையான வீட்டின் தூணில் நானும் சுதாகரும் நின்றபடி நினைவுகளில் மூழ்கியிருந்தோம்" என்றார் ரெங்கையா முருகன்.