சிறப்புக் களம்

`மழை வெயிலெல்லாம் பசிக்கு தெரியுமா?’-யாசகர்களின் பசி போக்கும் தன்னார்வலர் டெலி ராஜா பேட்டி

`மழை வெயிலெல்லாம் பசிக்கு தெரியுமா?’-யாசகர்களின் பசி போக்கும் தன்னார்வலர் டெலி ராஜா பேட்டி

webteam

கனமழை காலத்திலும், சுடுவெயில் காலத்திலும் பசித்தோர் இடம் தேடிச்சென்று நேரில் உணவளிக்கும் பெரும் சேவையை செய்து வருகின்றார் நெல்லையை சேர்ந்த தன்னார்வலர் டெலி ராஜா என்பவர். இவரது இந்த சேவை, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பசியால் வாடும் மக்களின் கால் சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்பவர்கள் என புள்ளி விபரங்கள் கூறுகிறது. எதையும் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனம் படைத்தோர் கூட, பசி என்னும் பிணியை தாங்கிக் கொள்வது மிகுந்த சிரமம் தான். அப்படியான ஒரு கஷ்டத்தை, தனக்கு தெரிந்து யாரும் எதிர்கொள்ளக்கூடாது என்பதே நெல்லையை சேர்ந்த ராஜா என்பவரின் எண்ணம். ஒருகாலத்தில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் நிலை தடுமாற்றத்தால், மிகப்பெரிய சரிவையும் இழப்பையும் சந்தித்து தெருவில் நின்று யாசகம் கேட்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ராஜா.

இதனால் பசியின் வலியை உணர்ந்து, அன்று தொடங்கி இன்று வரை ஆதரவின்றி சாலையோரம் வாழும் மக்களுக்கு நேரில் தேடிச்சென்று உணவு வழங்கி வருகிறார் இவர். நெல்லை மாநகரப் பகுதியில், நான்கு வருடங்களுக்கு முன்பு சாலையில் ஆதரவற்றோரை தேடி சென்று உணவு கொடுக்கும் பழக்கத்தை இவர் தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து நண்பர்கள் ஆதரவுடன் காலை - இரவு வேலைகளில் உணவு கொடுப்பதற்காக நேரம் ஒதுக்கி இந்த பணியை தொடர்ந்துள்ளார். இதன்படியே தற்போது இவர் பணியாற்றி வருகின்றார்.

தான் செய்யும் அன்றாட உதவிகளை தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாக பேஸ்புக்கில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 2 லட்சத்தை நெருங்குகிறது. இவரை பேட்டிகாண புதிய தலைமுறை சார்பில் அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்றோம். மாநகரப் சந்திப்பு பகுதியில் குறுகலான தெருவுக்குள் இருந்த அடர்த்தியான வீடுகளுக்கு அருகே, ஓரமாய் ஒரு ஓட்டு வீடாக அவர் வீடு இருந்தது. சுற்றாத சீலிங் ஃபேனுக்கு கீழே டேபிள் ஃபேநை வைத்து காற்று வாங்கிக்கொண்டு, ஒரமாய் ஒற்றைக்கட்டிலில் இருந்தார் மனிதர். அந்த ஒற்றைக்கட்டிலை சுற்றிலும் சில பயன்படுத்திய ஆடைகள் இறைந்து கிடந்தன. விசாரித்தபோது, அது அவருக்காக சில நல் உள்ளங்கள் வழங்கியவை என்றார் ராஜா. இவற்றுடன், வீடு முழுக்க புத்தகங்கள் இருந்தன.

கொரோனா காலகட்டத்திலும்கூட ஆதரவற்றோருக்கு உணவளித்திருக்கிறாராம் ராஜா. ஏற்கனவே தன் வாழ்வில் மரணத்தின் வாசல் வரை சென்று வந்ததால், மரணத்தை பற்றிய எவ்வித அச்சமுமின்றி சேவையாற்றியதாக நம்மிடையே சொன்னார் அவர். கொரோனாவின்போது நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், சாலைகளில் தனித்து விடப்பட்டோர் ஆகியோரை தேடி தேடிச் சென்று உணவு வழங்குவதை நாள்தோறும் வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார் டெலி ராஜா. இந்த உணவை வழங்கும் பணிக்கு, அவருக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்களின் உதவிதான் அவர் தொடர்ந்து இயங்க பேராதரவாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

அவரது இந்த சேவை குறித்து அவரிடமே பேசினோம். “கடந்த 4 வருடங்களாக மிகவும் விருப்பப்பட்டு இந்த பணியை செய்து வருகிறேன். எல்லோரும் போல எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களினால் என் குடும்பம், உற்றார் உறவினர்களே என்னை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு என்னைக் நிற்கதியாக்கியது. ஆதரவே இன்றி வீதியில் தள்ளப்பட்டேன். அப்போது பசி என்னை பெரிதும் பாதித்தது. உணவுக்காக கையேந்த தொடங்கினேன். ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், பசியோடு வெறும் வயிற்றில் காத்திருக்கும் நேரம் மிக கொடுமையானதாக இருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதன் உன்மை அப்போதுதான் எனக்கு புரிந்தது.

அப்படி பசி வருகையில், தன்மானம் பார்க்க கூட மனம் இருக்காது. பசியை உணர்த்திய அந்த வலிதான் என்னுள் மற்றவர்களுக்கும் பசியின் போது உணவு வழங்க உதவி செய்ய தோன்றியது. மெல்ல மெல்ல என் புகைப்படப் பணியை அதிகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய வருமானத்தில் எனக்குப் போக மீதம் இருந்ததை இல்லாதவர்க்கு நேரடியாக சென்று உணவு கொடுக்க தொடங்கினேன்.

இதில் என்னோடு கரம் சேர்த்த நண்பர்கள் உதவி மிக முக்கியமானது. செய்யும் ஒவ்வொரு செயலையும் முகப்புத்தகத்திலும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தேன். இதனை பார்த்து பலர் உதவி செய்ய வந்தனர். யார் பணம் கொடுத்தாலும் அதற்கான உணவை வாங்கி வழங்கிவிட்டு அந்த வீடியோ பதிவில் வழங்கியவரின் புகைப்படம் உட்பட பெயர் விபரங்களை பதிவு செய்து விடுவேன். இதனால் உணவு வாங்க உதவி செய்த நபர்கள் குறித்த விபரம் அனைவருக்கும் தெரியவரும். அனைவரின் வாழ்த்துக்களும் அவர்களுக்கும் கிடைக்கும்.

இந்த காரணத்தால் என் மீது நம்பிக்கை கூடியது. இதனால் நாள்தோறும் இரண்டு வேளைகளிலும் உணவு வழங்கும் பணியில் என்னை தீவிர படுத்தினேன். காலை நேரத்திலும் இரவு நேரத்திலும்தான் உணவு கிடைப்பதில் ஆதரவற்றோருக்கு சிரமம் இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் நான் உணவு வழங்கும் பணியை மும்மரமாக செய்து வருகிறேன். தெருவில் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதும் முதியோர் இல்லங்களில் இருக்கும் மக்களிடம் நேரில் சென்று கலந்துரையாடுவதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும். அதனால் அதனையும் தொடர்ந்து செய்து வருகிறேன்.

கனமழை பெய்தாலும், சுடு வெயில் அடித்தாலும் பசியுடன் காத்திருக்கும் அந்த நபர்களை நோக்கி என் கால்கள் செல்வதை என்னால் கூட அந்த நேரங்களில் தடுக்க முடியாது. என்னுடைய மாற்றம் இப்போது என் குடும்பத்தில் உறவுகளிடையே ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது” என்றார் டெலிராஜா.

வாழ்க்கை நமக்கு என்ன கொடுக்கிறது என்பதைவிடவும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதே மிகச்சிறந்த விஷயம். அந்த வகையில் டெலி ராஜாவை வாழ்க்கை வீதிக்கு தள்ளியது. அவரோ, வீதியிலிருப்போருக்கு பசியாற்றத்த தொடங்கிவிட்டார். `எந்த தீமைக்குள்ளும், ஒரு நன்மை உண்டு!’ என்ற வைரமுத்துவின் வரிகளை போல, தன் கண்ணீர்த் துளியில் பிறருக்கு வைரங்கள் செய்யும் கலைகளை கற்றுள்ளார் டெலிராஜா. வாழ்த்துக்கள் சார்!

- செய்தியாளர் : நெல்லை நாகராஜன்