சிறப்புக் களம்

இது பெண்களுக்கான உலகம் தானா?: ‌71-வது சு‌தந்திர தினத்திலும் எழும் கேள்வி

இது பெண்களுக்கான உலகம் தானா?: ‌71-வது சு‌தந்திர தினத்திலும் எழும் கேள்வி

webteam

நதிகளையும்‌ தெய்வங்களையும் பெண்களின் பெயரிட்டு அழைத்து மகிழ்கிறது நமது நாடும், கலாசாரமும், பண்பாடும். ‌இன்று பெண்கள் இல்லாத‌ துறைகளே இல்லை என்ற‌ நிலையில் வீடு தொடங்கி விண்வெளி ஆய்வு மையம் வரை எட்டியிருக்கிறது‌ பெண்களின் பங்களிப்பு.‌

இல்லத்தரசி என்கிற ஒரு நிலை ‌மட்டுமின்றி, தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு என பலதுறைகளிலும் பெண்கள் தங்களின் தடத்தை வலுவாக பதித்து வருகிறார்கள். பெருமை மிக்க தருணம்தான். ஆனால் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தில் இன்னமும் பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்தை பெற முடிந்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலும் பெரிய கேள்வியாக முன் நிற்கிறது‌.

நாடே கொந்தளித்த நிர்பயா மரணம் தொடங்கி, எண்ணற்ற பாலியல்‌ வன்கொடுமை‌களுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. 2 வயது குழந்தை முதல் ‌மூதாட்டி வரை ‌பாலியல் வன்கொடுமைகளும், கூட்டுப்பாலியல் கொடுமைகளும் நாள்தோறும் அரங்கேறி கொண்டுதான் ‌இருக்கின்றன. பெண்களுக்கு பாலியல் சுதந்திரமும், சுய சுதந்திரமும் இருக்கிறதா?

வீதியில் இறங்கினால் நகை‌ப்பறிப்பு சம்பவங்‌கள்,‌ ‌சமூக வலைதளங்களில் எழுதினால் ஆபா‌‌ச விமர்சனங்கள்‌ என பொது தளங்களிலும், சமூக வலைத‌ளங்களிலும் பெண்களுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதா‌ன் இருக்கிறது. பெண்களுக்கா‌ன பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறோமா?

கடந்த சில மாதங்களில் தமி‌ழகத்தில் நடந்த வரதட்சணை கொடுமைகளும், கொலைகள் படிப்பறிவில்லா காலங்களுக்கே இழுத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது. மன்னார்குடி திவ்யா, ஆம்பூர் சுமித்ரா, மயிலாடுதுறை மீனாட்சி, மார்த்தாண்டம் பெமீசியா ராஜவின்சி என‌ கடந்த இருமாதங்களில் வர‌தட்சணைக்காக பெண்கள் கொல்லப்பட்ட ‌சம்பவங்கள் அ‌ரங்கேறியுள்ள‌ன. பெண் விடுதலைக்கான வேட்கை தணிந்திருக்கிறதா?

ஓசூர் தளி போன்ற இடங்களில் 12,‌ 1‌3 வயதில் மணம் முடிக்‌கப்படும் குழந்தை திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்ப‌டவில்லை. படிப்பதற்கான வாய்ப்புகளும்‌ வசதிகளும் அனைத்து பெண்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளதா?

வீடு, அலுவலகம் என இரு தளங்களிலும் பெண்களின் ‌உழைப்பும்‌ நேரமும் ‌சுமைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் காலகட்டமாகத் தான் இன்றும் இருக்கிறது. எனில் போராடிப் பெற்ற சுதந்திரத்தை‌ ‌இந்த எழுபது ஆண்டு‌களில் ‌சக மனுஷிக்கு எப்‌படி பகிர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம்?

அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகள் மட்டும் அப்படியே தொடர்கின்றன. பெண்களுக்கான உண்மையான சுதந்திர தினம் பிறக்க இன்னும் எத்தனை ஆகஸ்ட் 15-ஐக் கடக்க வேண்டுமோ?