தி காஷ்மீர் ஃபைல்ஸ். - இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த சினிமா தற்போது இந்திய அளவில் பேசுபொருளாக உள்ளது. இதுவரை அழுத்தமாக பேசப் படாத காஷ்மீரின் மற்றுமொரு துயர பக்கத்தை தி காஷ்மீர் ஃபைல்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது.
80களின் பிற்பகுதியில் 90களின் மத்தியில் காஷ்மீரில் நிகழ்ந்த கிளர்ச்சி, நிலையற்றதன்மை ஆகியவற்றின் ஆவணமாக, காஷ்மீர் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பண்டிட்களின் குரலாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் ஒரு குறிப்பிட்ட தரப்பை நியாயமாகவும் இன்னொரு தரப்பை புறந்தள்ளியுமே விவாதிப்பது முறையாகாது. ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது எப்படி நியாயமற்றதோ அதுபோலவே பிற மதத்தினரின் வாதங்களை கேட்க மறுப்பதும் நியாயமற்றதே.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் பல்லவி ஜோஸி, அனுபம் கேர் ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பல்லவி ஜோஷி இப்படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் மனைவி. இப்படத்தில் வெவ்வேறு சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட தனித்தனி குழுக்கள் காண்பிக்கப்படுகின்றன. பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரிகள். இந்திய ஆதரவு காஷ்மீரிகள் அடுத்ததாக காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என எழும் குரல்கள்.
“இந்த நிலத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படும் போது, பாகிஸ்தானின் கொடி ஏற்றப்படும் போது காஷ்மீருக்கென தனி கொடி ஏற்றப்படக் கூடாதா.,?” என முழங்குகிறார் பல்லவி ஜோஷி. ஆஸாதி காஷ்மீர் என்பதே அவரது குரல். தன் நில விடுதலைக்காக போராடிய பகத் சிங் தியாகியாக இருக்கும் போது, சுதந்திர காஷ்மீருக்காக உயிர் நீத்த புர்ஹான் வானியை நாம் தியாகியாக ஏற்கக் கூடாதா எனப் பேசுகிறது ஒரு காட்சி. (புர்ஹான் வானி - ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் மூலம் சுதந்திர காஷ்மீருக்காக போராடி உயிர் நீத்தவர்.).
இந்திய ராணுவ உடையில் வந்து இந்து பண்டிட்களை கொலை செய்யும் இஸ்லாமிய மதவாதிகளையும், பயங்கரவாதிகள் போல வந்து தாக்கும் ராணுவத்திரையும் கூட காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்த சினிமா பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், அவர்கள் இந்து பண்டிட்களை கொலை செய்கிறவர்களாகவும் காட்டியிருப்பதே இந்த சர்சைகளுக்குக் காரணம். ஆனால் இயக்குநர் மிகத் தெளிவாக பல இடங்களில் விளக்கங்களைத் தருகிறார். சிவாவும் அப்துலும் நண்பர்கள். கிரிக்கெட் விளையாடும் காலம் தொட்டு நண்பர்களாக இருக்கும் அவர்களின் நட்பு குறித்த காட்சிகளும் கவனிக்கத்தக்கது.
கொத்து கொத்தாக மனிதர்கள் கொன்று புதைக்கப்பட்ட 7000 சமாதிகள் குறித்த வசனம் பதறவைக்கிறது. காஷ்மீர் பூர்வக்குடிகளுக்கு உண்மையில் யார்தான் பிரச்னை என்ற கோணத்தில் சில விவாதங்களையும் முன்வைத்திருக்கிறார் இயக்குநர். காஷ்மீர் அழகான வரலாற்று நகரம். இதனை ஆக்கிரமிக்க முயல்வது அதிகாரமே தவிர மதங்கள் இரண்டாம் பட்சமே என பேச முயன்றாலும் படம் நெடுக பண்டிட்களை அப்பாவிகளாக சித்தரிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர். அதுவே இப்படம் சர்ச்சையாவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு காட்சியில் ‘இங்கு இந்துக்கள் மட்டும் கொல்லப்படவில்லை, எனக் குறிப்பிட்டு கூடவே சில மதங்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன அவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறார் இயக்குநர். அந்த மதங்கள் அல்லது இனக்குழுவின் பட்டியலில் தலித்துகள் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த வசனம் வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
படம் மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கிறது. அனுபம் கேர் ஆர்டிகிள் 370’யை நீக்கச் சொல்லி போராடுகிறார். கிட்டத்தட்ட 6000 கடிதங்களை இந்திய அரசாங்கத்திற்கு அவர் எழுதியதாகச் சொல்கிறார். ஆர்டிகிள் 370 ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து குறித்தானது. 1949’ல் வழங்கப்பட்ட அந்த சிறப்பு அந்தஸ்து தற்போது நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பண்டிட் குடும்பங்கள் காஷ்மீர் கிளர்ச்சி காலத்தில் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர் எனப் பதிவு செய்கிறது இத்திரைப்படம். Convert, Leave or die என்ற முழக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பண்டிட்களுக்கு எதிராக வைக்கப்படுகிறது. காஷ்மீரில் இருந்து வெளியேற மறுக்கும் பண்டிட்கள் கொலை செய்யப்படுகின்றனர். இப்படியாக பல முனைகளில் நின்று பேச நினைத்திருக்கும் இயக்குநர் அதனை செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். மாறாக அவர் பண்டிட்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து மட்டுமே நிறைய பேசியிருக்கிறார்.
மதம், மதநம்பிக்கை , மதப் பயங்கரவாதம் என மூன்றாக பிரித்துக் கொள்வோம். எந்த மதத்தை பின்பற்றுகிறவர்களாக இருந்தாலும் இந்த மூன்று வகைமைக்குள் அடக்கம். விளக்கிச் சொல்வதானால் மதத்தை பெயரளவில் தங்கள் அடையாளமாக வைத்துக் கொள்கிறவர்கள் இவர்களால் ஆபத்தொன்றும் இல்லை. இரண்டாவது மதநம்பிக்கை கொண்டு தத்தமது மத வழிபாட்டு முறைகளை பின்பற்றுகிறவர்கள். இவர்களும் பிற மதத்தினரோடு இணக்கமாகவே போகின்றனர். மூன்றாவது மதத்தினடிப்படையிலான பயங்கரவாதம். காஷ்மீரில் ஒரு கையில் தங்கள் மத நூலையும் மறுகையில் துப்பாக்கியினையும் ஏந்தி நின்றவர்கள் மதத்தினடிப்பையிலான பயங்கரவாதிகள். இவர்களை மிகச் சரியாக புரிந்து கொண்டால் மதம் வேறு பயங்கரவாதம் வேறு என நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த சினிமாவில் இருக்கும் ஆபத்தும் இதுவே. கையில் துப்பாக்கி ஏந்தியவர்களை முஸ்லீம்கள் எனப் பொதுவாக புரிந்து கொள்ளும் ஆபத்தை இந்த சினிமா நிகழ்த்தியிருக்கிறது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் உண்மையில் காஷ்மீரில் இவ்வளவு பேரிழப்புகள் ஏற்பட அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பும் ராணுவத்தின் அத்துமீறலுமே காரணம் என்கிறது. ஆனால் இயக்குநர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இந்த வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களை தனித்தனி குழுக்களாக காண்பித்திருக்கிறார். அதனால் தான் இக்கட்டுரையின் துவக்கத்தில் “இப்படத்தில் வெவ்வேறு சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட தனித்தனி குழுக்கள் காண்பிக்கப்படுகின்றன. ” என குறிப்பிட்டோம்.
இந்த சென்ஸிடிவான சினிமா குறித்த விவாதங்களை முவைக்க வேண்டியது பார்வையார்களின் பொறுப்பு. இந்த சினிமாவை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்ள முடிகிறது. இறுதிக் காட்சியில் வரிசையாக பலரும் நிறுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படும் காட்சி மனதை நிம்மதியிழக்கச் செய்கிறது.
ஆக்கிரமிப்பு, தாக்குதல் என வந்துவிட்டால் எந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அங்கிருப்பவர்கள் எந்த மதநம்பிக்கை கொண்டவர்கள் என்பது முக்கியமே அல்ல. அங்கிருக்கும் மனித உயிர்களும் கூட வெறும் எண்கள் தான் என்பதே உண்மை. மதமும் தேசப்பற்றும் ஒரு நாடு இன்னொரு நிலத்தின் மீது ஆக்கிரமிக்க சொல்லிக் கொள்ளும் போலி சமாதானம் மட்டுமே.
‘சமூகஊடங்கங்கள் தங்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது., எங்களின் பதிலையோ குரலையோ வெளிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. காஷ்மீரில் இண்டர்நெட் இல்லை.’ என பதிவு செய்கிறது அப்துலின் கதாபாத்திரம். கூடவே அங்கு கொல்லப்பட்ட 19 பத்திரிகையாளர்கள் குறித்தும் ஆவணப்படுத்துகிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’
இப்படத்தின் மூலம் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் காஷ்மீர் குழந்தைகள் குறித்தானது. யுத்தம் மற்றும் எதிர்பாராத தாக்குதலால் மனதளவில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் குழந்தைகள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீர் குழந்தைகள் தங்கள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்படும் தாய் தந்தையரின் ரத்தம் வழியும் உடலைக் கண்டு நடுங்கினர். காஷ்மீரின் குழந்தைகளானாலும் சரி உக்ரைனின் குழந்தைகளானாலும் சரி, அந்தப் பிஞ்சு மனங்களுக்கு நாம் வழங்கும் குரூர தண்டனைக்காக உலகோர் யாவரும் தலை குனிந்தே ஆக வேண்டும். தி காஷ்மீர் ஃபைல்ஸ் அவசியம் பார்த்து விவாதிக்க வேண்டிய சினிமா.
- சத்யா சுப்ரமணி