இயற்கை விவசாயத்தை காக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கு மேலான மரக்கன்றுகளை நட்டு மரங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழுப்புணர்வை ஏற்படுத்தியவர் மரம் தங்கச்சாமி. இவர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இன்று நடைப்பெற்ற அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு மரக்கன்றுகளை வழங்கி அவரின் குடும்பத்தினர் நெகிழ வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கச்சாமி. இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் இயற்கை வேளாண் விஞ்ஞனி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயம் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் பொது மக்களிடம்விழுப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
‘மனம்போல் வாழாமல் மரம்போல் வாழுங்கள்’ என்ற வாசகத்தோடு தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கு மேலான மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிக்கவும் வழிவகை செய்து வந்தார். மரங்கள் மீது அவர் கொண்ட காதலால் மரம் தங்கச்சாமி என தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். மனிதர்களில்தான் ஜாதி வேறுபாடு இருக்கக் கூடாது. மரங்களில் ஜாதிகள் இருக்க வேண்டும் என தனது 10 ஏக்கர் தோட்டத்தில் 250 வகையான பல்வேறு மரங்களை நட்டு ஒரு வனப்பகுதியை போல் உருவாக்கி இயற்கை எழிலோடு வாழ்ந்து வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று சேந்தன்குடியில் நடந்த அவரின் இறுதி நிகழ்வில் தமிழக அணைத்து விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள், இயற்கை நல ஆர்வளர்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவரின் நினைவாக இறுதி நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி தங்கச் சாமியின் குடும்பத்தினர் நெகிழ வைத்தனர். மரங்களுக்காகவே வாழ்ந்து மரங்களோடு மரணித்த மரம் தங்கச் சாமியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அவரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அவரின் நினைவிடத்தில் மண்னை காக்க மரங்களை வார்ப்போம், என்று உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.