சிறப்புக் களம்

அடுக்கடுக்கான தாக்குதல்; அதிர வைக்கும் வெள்ளம்புத்தூர் விவகாரம்

அடுக்கடுக்கான தாக்குதல்; அதிர வைக்கும் வெள்ளம்புத்தூர் விவகாரம்

webteam

வெள்ளம்புத்தூரில் ஒரு குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சாதி ரீதியிலான தாக்குதல் இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிய வந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி (45). தனது கணவரை இழந்துவிட்ட ஆராயிக்கு 6 குழந்தைகள். கணவரின் வருமானம் இல்லாதக் காரணத்தினால் வெவ்வேறு இடங்களில் தனது 4 குழந்தைகளைக் கூலித்தொழிலுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஒரு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி ஆராயி தனது மகள் மற்றும் மகனுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்க, வீட்டில் புகுந்த கும்பல் ஒன்று ஆராயி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளை சரமாரியாகத் தாக்கியுள்ளது. ஆராயி வீட்டில் இருந்து முணுமுணுப்பு சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு ஆராயி குழந்தைகளுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரின் 14 வயது மகள் அரைகுறை ஆடையுடன் கிடந்துள்ளார். ஆராயின் மகன் கொலை வெறித் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆராயி மற்றும் அவரது மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சுயநினைவிழந்து காணப்படுகின்றனர். 

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆராயிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் பல மாதங்களாக நிலத் தகராறு இருந்துள்ளது. ஆராயின் நிலத்தில் 12 சென்ட் இடத்தை தனக்கு விற்குமாறு, குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் கேட்க, அதற்கு ஆராயி மறுத்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே ஆராயி மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சாதிய ரீதியிலான தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு குறைவு என தெரியவந்துள்ளது.

கோணம் மாறும் கொலை விவகாரம்

ஆராயி குடும்பத்தில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் முன்விரோதம், சாதி இவற்றைத் தாண்டி ஏதோ ஒரு மர்மம் உள்ளடங்கியுள்ளது. ஆராயி குடும்பத்தை கொலை செய்ய வந்த கும்பல் 14வயது சிறுமியின் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கொலை செய்வதுதான் நோக்கம் என்றால் சிறுவனை போன்று இவர்களை படுகொலை செய்திருக்கலாம். பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட வந்த கும்பல் என்றால் சிறுவனை கழுத்தறுத்து படுகொலை செய்தது ஏன்?. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆண் துணை இல்லாத வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் பேசியபோது அவர்கள் கூறிய தகவல் இந்தக் கொலை விவகாரத்தில் வேறொரு பாதையை காட்டுகிறது. வெள்ளம்புத்தூரில் கடந்த ஆண்டு குறவர் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்த தாக்குதலுக்கு உள்ளானார். அதே போல அடுத்த 4 மாதத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண், தனது 2 வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர். தற்போது அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 3 சம்பவத்திலும் பாலியல் வன்கொடுமை, தலையில் அடித்து தாக்குதல், சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் தாக்குதல் ஆகியவை ஒற்றுமைகளாக இருக்கிறது. மேலும், 3 சம்பவங்களும் ஊரில் ஒதுக்குப் புறமாக உள்ள, ஆண்கள் இல்லாத, எளிதில் தப்பித்துபோக வழி உள்ள வீடுகளிலேயே நடந்துள்ளது. கூராக இல்லாத, ஆனால் கனமான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.


இந்தப் பகுதியில் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே தனியாக வசிப்பதும், ஆண்கள் அவ்வப்போது மட்டுமே வெளியூரில் இங்கே வருவதுமாக உள்ளனர். ஆண்கள் ஏதேனும் விழாக்கள் அல்லது இறப்புக்கு மட்டுமே ஊருக்கு வருகின்றனர். நடந்த மூன்று சம்பவங்களும் வார இறுதி நாளில், இறப்போ அல்லது விழாக்கள் முடிந்த நேரத்திலோ நடைபெற்றிருக்கிறது. எனவே, வெளியூரில் இருந்து வந்து செல்பவர்கள் யாரேனும் இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல், பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் வட இந்திய பணியாளர்கள் சிலர் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.


ஒரு கும்பல் திட்டமிட்டு இச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்க தோன்றுகிறது. ஒரே கிராமத்தில் 4 மாத இடைவெளியில் மூன்று சம்பவங்கள், அனைத்தும் ஒரே மாதிரியாக நடந்துள்ளது. இத்தொடர் சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.