தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கலானது.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அத்துறைக்கென தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தலில் வென்ற திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இப்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் ஆகும். கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள்:
கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு
தனியார் பங்களிப்புடன் தேனி, கோவை, கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைக்கப்படும்
தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜட்கோவிற்கு ரூ.5,157.56 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்
விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.
தமிழகத்தில் புதிதாக 10 உழவர் சந்தைகள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்
திண்டிவனம், தேனி,மணப்பாறையில் ரூ.381 கோடியில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும்