கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள சில பாலிவுட் திரைப்படங்களின் வசூல் வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது. இத்தனைக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் நிலைதான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த நிலை ஏன் என்பது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சில பெரிய படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த வெளியீடுகள் திரைப்படத் துறைக்கு ஒரு சிறிய நம்பிக்கையை அளித்தன. இருப்பினும், இந்தப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் திரையரங்குகளின் எதிர்காலம் மற்றும் மக்கள் திரைப்படம் பார்க்கும் அனுபவங்கள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
'தலைவி', 'பெல்பாட்டம்': ஆகஸ்ட் மாதமே சில மாநில திரையரங்குகள் திறக்கப்பட்டதை அடுத்து, அக்ஷய் குமாரின் 'பெல்பாட்டம்' படமும், அமிதாப் பச்சனின் 'செஹ்ரே' படமும் பெரிய வெளியீடாக திரைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து சில தினங்கள் முன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி, கங்கனா ரனாவத் நடித்த 'தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த மூன்று படங்களின் நட்சத்திரங்களும் இந்திய அளவில் பெரிய அளவில் நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள். இதனால் அவர்களின் படங்களின் வெளியீடுகள் பற்றிய பேச்சுகள் வெளியீட்டுக்கு முன்பே கிடைத்தன.
பாப்புலாரிட்டியும், படம் குறித்த பேச்சுக்கள் இருந்தாலும், படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் பெரிய அளவுக்கு இருந்ததா என்றால், அதற்கு பாசிட்டிவ்வான பதில் இல்லை. முதல் நாள் புள்ளிவிவரங்கள் படி, அக்ஷய் யின் பெல்பாட்டம் வசூல் ரூ.2.75 கோடி மட்டுமே. அமிதாப்பின் 'செஹ்ரே' வசூல் ரூ.50 லட்சம் மட்டுமே. கங்கனாவின் 'தலைவி' (இந்தி) வசூலோ ரூ.1.46 கோடி என்ற அளவிலேயே இருந்தது.
வார இறுதி வசூல் முறையே, 'பெல்பாட்டம்' - ரூ.12.90 கோடி (4 நாள் வார இறுதி), 'செஹ்ரே' - ரூ.2.05 கோடி, 'தலைவி' - ரூ.4.91 கோடி என்ற அளவிலேயே இருந்தது. இதே நடிகர்களின் முந்தைய படங்களின் வெளியீடுகளுடன் இதை ஒப்பிடும்போது அக்ஷய் குமாரின் 'குட் நியூஸ்' படம் முதல் நாளில் ரூ.17.56 கோடியும், வார இறுதியில் ரூ.64.99 கோடியாகவும் இருந்தது. கங்கனா ரனாவத்தின் 'மணிகர்ணிகா' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.8.75 கோடி என்ற அளவிலும், ஒரு வார வசூல் ரூ.42.55 கோடி என்ற அளவிலும் இருந்தது. கொரோனா தொற்றுநோய்க்கு முன்னும் பின்னுமான இந்தப் புள்ளிவிவரங்களில் உள்ள பெரிய இடைவெளி மற்றும் அதன் விளைவாக லாக்டவுன் சொல்லப்படுகிறது.
தியேட்டர்களுக்கு செல்ல பார்வையாளர்கள் தயாராக இல்லையா? - வசூலை நிர்ணயிக்கும் பல காரணிகள் இங்கே இருக்கின்றன. குறிப்பாக திரையரங்குகளின் எண்ணிக்கை. இந்திய அளவிலான சினிமா வணிகத்தில் சுமார் 30% பங்குகளை பெற்றுதரும் மகாராஷ்டிராவில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. மேலும், நாட்டின் பிற பகுதிகளில் தற்போது திறந்திருக்கும் தியேட்டர்களில் 50% இருக்கைகளே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் பழைய பாக்ஸ் ஆஃபிஸ் வெளியீடுகள் என்பது சற்று பெரிய விஷயமே.
இது தொடர்பாக பேசியுள்ள முன்னணி திரைப்பட ஆர்வலர் அக்ஷயே ரதி, ''மக்கள் முழுமையாக வந்து பார்க்கும் வகையில் திரையரங்குகளை மீண்டும் திறக்க பிரமாண்ட திரைப்படங்கள் வெளிவர வேண்டும். என்றாலும் தற்போதைய சூழலில் வெளியாகியுள்ள 'தலைவி', 'பெல்பாட்டம்' போன்ற நல்ல வரவேற்பையே பெற்றுள்ளன. அதேநேரம் ஹாலிவுட் படம் 'ஷாங்-சி'-யும் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. திரையரங்கு துறையை மீண்டும் பழையபடி கொண்டுவருவதில் இந்தப் படங்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. அதற்கான கிரெடிட் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்" என்றுள்ளார். அவர் கூறியது போல, 'பெல்பாட்டம்' மற்றும் 'தலைவி'யை விட 'மார்வெல் ஸ்டுடியோ'வின் 'ஷாங் சி' (Shang-chi) திரைப்படத்துக்கு பெரிய ஓப்பனிங் கிடைத்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.
தமிழ், தெலுங்கு சினிமா: பாலிவுட்டுடன் ஒப்பிடும்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா சூழல்கள் இருந்தபோதும் பட வெளியீட்டில் எதிர்பாராத சிறப்புகள் கிடைத்தன. ஜனவரியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படமான 'மாஸ்டர்' உள்நாட்டில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது. இத்தனைக்கும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த வசூலை செய்தது. இதேபோல் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' முதல் நாள் வசூல் ரூ.30 கோடியைத் தாண்டியது. இந்திய அளவில் இந்தப் படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ.110 கோடி ஆகும்.
"தென்னிந்திய சினிமாவில் வர்த்தகத் திரைப்படங்கள் இயல்பாகவே பார்வையாளர்களை திருப்தி செய்கின்றன. மேலும், தென்னிந்திய சினிமா நாயகர்களை கொண்டாடும் வழக்கம் பார்வையாளர்களிடம் இருக்கிறது. இது, தென்னிந்திய சினிமாத் தொழிலுக்கு கிடைத்துள்ள நன்மை. இந்த பாணியால் பார்வையாளர்கள் விரைவில் தியேட்டர்களுக்கு வருவார்கள்" என்றுள்ளார் அக்ஷயே ரதி.
இதேபோல், 'மாஸ்டர்' மற்றும் 'வக்கீல் சாப்' வெற்றி குறித்து திரைப்பட வர்த்தகர் கோமல் நஹ்தா பேசுகையில், ''இரண்டு தொழில்துறைகளும் வெவ்வேறு அளவீடுகளில் செயல்படுகின்றன. ஓடிடியில் இந்தி திரைப்பட வெளியீடுகளின் வழக்கமான தன்மையை காட்டிலும் திரையரங்கு வெளியீடுகளுக்கு மக்களை அழைத்துவர சிறந்த மார்க்கெட்டிங் தேவை. எல்லோரும் விளம்பர வரவு செலவுத் திட்டங்களைக் குறைக்கிறார்கள். ஆனால், நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக படத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதே உண்மை. முதலீடுகளுக்கு நீங்கள் எவ்வளவு அதிகமாக செலவழிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான மக்கள் வருவார்கள்" என்றுள்ளார்.
கொரோனா பேரிடரின் விளைவுகளை சினிமா துறை தாங்க வேண்டியிருந்தாலும், பார்வையாளர்கள் இன்னும் திரையரங்குகளுக்கு முழுமையாகத் திரும்பத் தயாராக இல்லை என்பது உண்மை இல்லை. மக்கள் இன்னும் இரண்டாவது அலையிலிருந்து முழுமையாக மீளவில்லை. மெதுமெதுவாக தான் மக்கள் மீண்டு வருகிறார்கள். மேலும், கொரோனா மூன்றாவது அலைக்கான சாத்தியம் காரணமாக உடனே மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று எண்ணிவிட முடியாது. அதற்கேற்ப, ''தொற்றுநோயால் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாமானியர்களுக்கு, உயிர் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைதான் முதலில் வரும். பொழுதுபோக்கு என்பது தொலைதூர கனவு. அதனால் அந்த துறை மீண்டெழ நேரம் எடுக்கும்" என்றுள்ளார் திரைப்பட வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ்.
- மலையரசு