சிறப்புக் களம்

கிரிக்கெட் தமிழர்கள்!

கிரிக்கெட் தமிழர்கள்!

webteam

தமிழ்நாட்டின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ், பத்ரிநாத், அஸ்வின், இலங்கையின் முத்தையா முரளிதரன் போன்றவர்களை விட்டுவிட்டு வெளிநாடுகளிலும் நம் வேர் கொண்ட தமிழர்கள், கிரிக்கெட் ஆடியிருக்கிறார்கள். ஆடி வருகிறார்கள். அவர்களை பற்றிய லிஸ்ட் இது. இது முழு லிஸ்ட் அல்ல. சில விடுபடல்களும் இருக்கலாம்.

வீராசாமி பெருமாள்:


மேற்கிந்திய தீவுகளின் கயானாவை சேர்ந்தவர் இந்த பெருமாள். இவர் தமிழர் என்பதற்கு இந்தப் பெயரே சாட்சி. எப்போதோ கரும்புக் காட்டுக்கு கூட்டம் கூட்டமாக ஆட்களை கப்பலில் அள்ளிச் சென்ற ஆங்கிலேயன், மேற்கிந்திய தீவுகளில் விட்ட தமிழனின் தலைமுறை. ஸ்பின் பவுலரான பெருமாள், மேற்கிந்திய தீவுகளின் அணியில் உள்ளே வெளியே ஆட்டத்தில் இருக்கிறார் இப்போது. அதாவது திடீரென்று அந்த அணி பெருமாளை டீமுக்குள் சேர்க்கும். திடீரென்று ஒதுக்கும். கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் அணியுடன் மேற்கந்திய தீவுகள் அணி மோதியபோது டீமில் இடம் பெற்றிருந்தார் பெருமாள். இப்போதைக்கு, அதுதான் அவருக்கு கடைசி போட்டி.

அருள் சுப்பையா:


மலேசிய தமிழரான இவர், இளம் வயதிலேயே தேசிய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற பெயரை பெற்றவர். சிங்கப்பூருடன் நடந்த போட்டி ஒன்றில் 15 வயதிலேயே மலேசியா சார்பில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். பின்னர் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற சுப்பையா, கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தார். சோமர்செட் அணிக்காக ஆடி வந்த சுப்பையாவுக்கு எப்படியாவது இங்கிலாந்து அணிக்குள் நுழைய ஆசை. ஆனால் விதி அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. ‘சின்ன வயசுலயே எனக்கு கிரிக்கெட் ஆர்வம் இருந்தது. சச்சின் டெண்டுல்கர்தான் என் இன்ஸ்பிரேஷன். அவர் ஆடிய பல போட்டிகளை பார்த்து வியந்திருக்கிறேன். ஏகப்பட்ட காயம் உடம்புல. அதனால 2013-ல் கிரிக்கெட்ல இருந்து ரிட்டையர்ட் ஆகிட்டேன்’ என்கிற சுப்பையா, இப்போது லண்டனில் ஆசிரியர்.

மகேந்திர நாகமுத்து:


மகேந்திர வீரன் நாகமுத்துவின் சுருக்கம்தான், மகேந்திர நாகமுத்து. இந்த தமிழர், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர். இவர் யாரென்றால் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழருமான ஆல்வின் காளிச்சரணின் உறவினர். மேற்கிந்திய தீவுகளின் கயனாவில் பிறந்த இவர், அந்த நாட்டுக்காக 24 சர்வதேச ஒருநாள் போட்டியிலும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இப்போது தேசிய அணியில் இடமில்லை என்றாலும் கயானாவுக்காக விளையாடி வருகிறார். 

ரசல் அர்னால்டு: 


இலங்கை அணியில் ஆல்ரவுண்டர். கொழும்புவில் பிறந்த அர்னால்டுவின் முழுப் பெயர், ரசல் பிரேமகுமாரான் அர்னால்ட். இலங்கை அணியின் முதல் டி20 கேப்டன். யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்னால்டு ஒரு பேட்டியில், ஜாலியாக சொன்னார் இப்படி: ’இலங்கை கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒரே உண்மையான புலி நான்தான்’ என்று. இவரது பேவரைட் கிரிக்கெட் வாசிம் அக்ரம். கடந்த 2007-ல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று ரிட்டையர்ட் ஆகிவிட்ட அர்னால்டு, இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார். 

வந்தவாசி துரைகாந்தி பாலாஜி:


சென்னையில் பிறந்த இவர், இப்போது இருப்பது கனடாவில். பெயரிலேயே வந்தவாசியை வைத்திருக்கும் தமிழர். கனடா அணிக்காக கிரிக்கெட் ஆடியுள்ள இவர், ஸ்பின் பவுலர். 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இவர்தான் கனடா அணியின் முக்கிய பந்துவீச்சாளர். கனடாவில் ஆட்டோ கன்சல்டன்டாக இருக்கும் பாலாஜி, இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடியிருக்கிறார்.

நசிர் ஹூசைன்:


இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நசிர் ஹூசைன் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை ஜாவத் ஹூசைன் தமிழ்நாடு அணி சார்பில் ரஞ்சி போட்டியில் ஆடியவர். ஆற்காடு நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவரான நசிர், பிறந்த சில நாட்களிலேயே அப்பாவுடன் லண்டன் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே படித்து வளர்ந்து, இங்கிலாந்து அணியின் கேப்டனாக 1999 - 2003 ஆண்டு வரை இருந்தார். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளர்.

மேத்யூஸ்:


இலங்கை அணியின் தற்போதைய கேப்டன். இவரது தந்தை டைரோன் மாத்யூஸ் தமிழர். சிறுவயதிலேயே கிரிக்கெட் ஆடிவரும் மேத்யூஸ், 2013-ல் தனது காதலி ஹேஷானி சில்வாவை திருமணம் செய்துகொண்டார். திருமண வரவேற்புக்கு அப்போதையை ஜனாபதிபதி ராஜபக்‌ஷே வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.