உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நேற்றைய தினம் தெரிவித்த தகவலின்படி, கடந்த ஏப்ரல் 1, 2020 முதல் ஜனவரி 11,2022 வரையிலான தகவலின்படி இந்தியாவில் சுமார் 1,47,492 குழந்தைகள் தங்களது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்ட அத்தகவல்களை நோக்கிய, இந்த கொரோனா கால மாணவர் நலன் அத்தியாயம் அமையவுள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒருநாளில்மட்டும், இந்தியாவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இறப்பை பொறுத்தவரை, அதிலும் கணிசமான உயர்வு இருக்கிறது. அந்தவகையில் இந்தியாவில் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.86 லட்சம் ஆகும். இப்படியான சூழலில்தான் நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் கொரோனாவால் ஆதரவற்ற குழந்தைகள் குறித்த வழக்கொன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது NCPCR தந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு தகவல் தெரிவிக்கையில், ‘1,36,910 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்; 10,094 குழந்தைகள் ஆதரவற்றுள்ளனர்; 488 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர். இப்படியாக மொத்தமுள்ள 1,47,492 குழந்தைகளில் 76,508 ஆண் குழந்தைகளும், 70,980 பெண் குழந்தைகளும், 4 பிற பாலினத்தை சேர்ந்த குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் அதிகபட்ச குழந்தைகள் (துல்லியமாக 1,25,205 பேர்), ஒரு பெற்றோரை இழந்து - மற்றொரு பெற்றோரின் ஆதரவின் கீழ் வாழ்கின்றனர். இன்னும் 11,272 குழந்தைகள் பெற்றோரின்றி குடும்ப உறுப்பினர்கள் யாருடனாவது வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 8,450 குழந்தைகள் பாதுகாவலரின் கண்காணிப்பின்கீழ் வாழ்கின்றனர்.
பெற்றோரை இழந்திருக்கும் இந்தக் குழந்தைகள் பட்டியலில் 8 முதல் 13 வயதுடைய குழந்தைகள் 59,010 பேர்; 14 முதல் 15 வயதுடைய குழந்தைகள் 22,763 பேர்; 16 முதல் 18 வயதுடைய குழந்தைகள் 22,626 பேர்; 26,080 பேர் 4 முதல் 7 வயதுடையவர்களாக உள்ளனர். மாநில வாரியாக பார்க்கையில், ஒடிசாவில் 24,405 குழந்தைகள்; மகாராஷ்ட்ராவில் 19,623 குழந்தைகள்; குஜராத்தில் 14,770 குழந்தைகள்; தமிழ்நாட்டில் 11,014 குழந்தைகள்; உத்தர பிரதேசத்தில் 9,247 குழந்தைகள், ஆந்திராவில் 8,760 குழந்தைகள்; மத்திய பிரதேசத்தில் 7,340 குழந்தைகள்; மேற்கு வங்கத்தில் 6,835 குழந்தைகள்; டெல்லியில் 6,629 குழந்தைகள்; ராஜஸ்தானில் 6,827 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களை தொடர்ந்து, குழந்தைகள் பற்றிய தகவல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அக்குழந்தைகள் மீது NCPCR இனி கூடுதல் கவனம் செலுத்துமென தகவல் தெரிவித்துள்ளது. இதற்காக NCPCR, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விரைவில் (ஜனவரி 19) மீட்டிங் நடத்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு பக்கமிருக்க, கடந்த மாத இறுதியில் இதுதொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ‘கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்’ பற்றி செய்திக்குறிப்பொன்று வெளியிட்டிருந்தது. அதில் “மாவட்ட ஆட்சியர்களின் மூலம் மொத்தம் 6,098 விண்ணப்பங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு வந்திருந்தன. அதில் 3,481 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் அஞ்சலகங்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகள் மூலம் அந்த சிறுவர்களுக்குத் தேவையான நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கும். விடுதியில் உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,160-ம், விடுதியில் இல்லாத குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000-ம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என கூறப்பட்டிருந்தது. இவையாவும் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல தமிழக அரசும் இந்தக் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. அந்தவகையில் கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு தலா 5 லட்சம், ரூபாய், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைக்கு 3 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இவற்றுடன் இக்குழந்தைகளுக்கென ‘ஸ்மார்ட் கார்டுகளை அரசு தயாரித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும், அப்படிச் செய்தால்தான் அக்குழந்தைகளால் வருங்காலத்தில் எளிமையாக சலுகைகளை பெற இயலும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தெலுங்கானா போன்ற ஒருசில அரசுகள், இவற்றை திட்டவடிவமாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கவும் செய்துள்ளது.
மூன்றாவது அலை கொரோனா பற்றிய அச்சம் நிலவுவதால், அரசு தரப்பில் இந்த நடவடிக்கைகள் யாவும் துரிதப்படுத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்தவிஷயத்தில் உச்சநீதிமன்றமேவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆம், நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் நாகேஷ்வர ராவ் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு “நாம் இன்னும் பெருந்தொற்றிலிருந்து முழுமையாக மீளவில்லை. அதிகாரத்துவவாதிகள் அனைவரும் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில், நம் நாட்டின் குழந்தைகள் வீதிகளில் இன்னும் சிரமப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
மூன்றாவது அலை கொரோனா உருவாகையில், சிரமத்துக்கு உள்ளாகும் குழந்தைகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இன்னும் பல குழந்தைகள் வீதிக்கு வந்துவிடுவர். யோசித்து பாருங்கள்... டெல்லியின் இந்தக் குளூரில் வீதிகளில் குழந்தைகள் தள்ளப்பட்டால், அது நமக்கு எவ்வளவு பெரிய வலியை தருமென்று. அவர்களை நாம் காக்க வேண்டும். இதற்கு, கடந்த இரு அலை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பதும் முக்கியம்; இந்த அலை கொரோனாவில் மேற்கொண்டு குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் முக்கியம்” என்றனர்.
ஆக இந்த அலை கொரோனாவை நாம் எந்தளவுக்கு கட்டுப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நம்மால் அந்தக் கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசுடன் மக்களாகிய நாமும் இணைவது அவசியம். அதன் முதல் முயற்சியாக, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம். அதேபோல 15 -18 வயதுடைய சிறாருக்கும் தடுப்பூசி போடுவோம்!
முந்தைய அத்தியாயம்> கொரோனா கால மாணவர் நலன் 18: அதிகரிக்கும் ஒமைக்ரான்... குழந்தைகளுக்கும் வேகமாக பரவுகிறதா?