சூடானின் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட மறுத்ததால், கூட்டு ராணுவப்படைகள் மூலமாக கைதுசெய்யப்பட்டு அவர் அடையாளம் தெரியாத இடத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சூடான் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை அமைதியான முறையில் எதிர்க்கவும், "தங்கள் ஆட்சியை பாதுகாக்கவும்" சூடான் மக்களுக்கு ஹம்தோக் அழைப்பு விடுத்ததை அடுத்து ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை செய்துள்ளது.
சூடான் இராணுவம் கிழக்கு சூடானில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சிக்கவிழ்ப்பு செய்யப்பட்டது என்று பிரதமர் அலுவலகத்தின் இயக்குனர் அல்-அரபியா தெரிவித்தார். அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜெஃப்ரி ஃபெல்ட்மேன் முன்னிலையில், ஹம்டோக்குடன் நாட்டின் ஆளும் குழுவின் தலைவரான அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற வேண்டும் என ஒரு பிரிவினரும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டுமென மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் நிகழ்த்திய ஆட்சிகவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது. தேர்தல் நடைபெறும் வரை பிரதமர் அப்தல்லா ஹம்தோக் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது.
இந்நிலையில் ராணுவம் திடீரென பிரதமர் மற்றும் அமைச்சர்களை கைது செய்துள்ளது. தலைநகர் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. பிரதமர் கைதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனிடையே சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதை ஏற்க முடியாது என்றும் நிகழ்வுகளை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.