சிறை வாழ்க்கையில் சுப்பிரமணிய சிவா அனுபவித்த வேதனைகளை வார்த்தையில் வடிக்க இயலாது. சிறையில் இவருக்கு கிடைத்த பரிசுதான் தொழு நோய்.
இந்திய விடுதலைக்காக தன்னுடைய உயிரை துச்சமென துறந்து போராடிய எண்ணற்ற தியாகிகளில் சுப்பிரமணிய சிவாவும் ஒருவர். 1884இல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிறந்த சுப்பிரமணிய சிவா, குடும்ப வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட் சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். அப்போது தூத்துக்குடியில் வழக்கறிஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை (வ.உ.சி) சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.. இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் நட்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார். இந்நிலையில் பாரதியின் நட்பும் கிடைக்க, மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினர். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பேசினார். இவர் மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட. பல பத்திரிக்கைகளை நடத்தி வந்த சுப்பிரமணிய சிவா, 1919இல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளரின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அவர்களுக்காக அயராது உழைத்தார். சுப்பிரமணிய சிவா கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம்.
துறவிபோல காவி உடை அணிந்து கொண்டு, பெயரை ‘ஸ்வதந்திரானந்தர்' என்றும் மாற்றிக்கொண்டார். சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கிலேயர் அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்ட போது தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.
இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற சுப்பிரமணிய சிவா சிறையில் இருந்து வெளியில் வரும் போது வயோதிகராக மட்டும் வரவில்லை. தொழு நோயால் பாதிக்கப்பட்டு, நோயாளியாக வந்தார். இதனால், ரயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது. இதனைக் கண்டு சுப்பிரமணிய சிவா மனம் கலங்கவில்லை. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணத்தை மேற்கொண்டு மக்களுக்கு வெள்ளையர் ஆட்சியின் கொடுமைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்தார்.
நாட்டு மக்கள் அனைவரும் தத்தம் விருப்பப்படி பாரத மாதாவை வணங்குவதற்கு, 'பாரதாஸ்ரமம்' ஒன்றை நிறுவத் திட்டமிட்டார். அத்தகையதோர் ஆசிரமத்தை நிறுவுவதன் மூலம் இந்திய இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வையும் தேச பக்தியையும் ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பினார். ஆனால் தன்னுடைய கனவு முழுமையாக நிறைவேறாத கவலையிலும் சுப்பிரமணிய சிவா, பல்வேறு ஊர்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து வந்தார்.
இருப்பினும் நோய் முற்றிய நிலையில் தம் பாரதாஸ்ரமத்திலேயே உயிரை விட விருப்பம் கொண்டு அங்கே வந்தார். 1925ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41வது வயதில் காலமானார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.
இதையும் படிக்கலாம்: கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் - காரணம் என்ன?