சிறப்புக் களம்

காற்றில் பறந்த சமூக இடைவெளி: திட்டமிடப்படாத தளர்வால் வீண் ஆகிறதா கொரோனா தடுப்பு முயற்சிகள்

காற்றில் பறந்த சமூக இடைவெளி: திட்டமிடப்படாத தளர்வால் வீண் ஆகிறதா கொரோனா தடுப்பு முயற்சிகள்

webteam

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தபோவதாக அறிவித்தது. ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்பதால்
நேற்றும் இன்றும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

கடைகளில் அலைமோதிய கூட்டம்:

அறிவிப்பு வந்ததுமே நேற்றே கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. விட்டால் போதும் என பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டுப்பாடுகளெல்லாம் காற்றில் பறந்தன. நேற்றைய நிலைமை அப்படி என்றால், இன்றைய நிலமை மோசத்திலும் மோசம். தமிழகம் முழுவதிலும் உள்ள மளிகை, காய்கறி, சலூன் உட்பட அனைத்துக்கடைகளிலும் இன்று மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. இதனை கணகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட வியாபாரிகளும் சகட்டுமேனிக்கு பொருட்களை அதிக விலைக்கு விற்றனர்.

கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை:

கோயம்பேடு சந்தையில் நேற்று, 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 40 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் 40 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதனை சில்லறை வியாபாரிகள் இன்று 3 மடங்கு விலை உயர்த்தி மக்களிடம் விற்றனர்.

உதாரணமாக பீன்ஸ் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மளிகை கடைகளிலும் பொருட்கள் அதிகவிலைக்கு விற்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பொருட்கள் பற்றாக்குறையால்
எப்போதும் வாங்கும் நிறுவனங்களின் பொருட்கள் கிடைக்காமல் கிடைத்த பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.

பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்:

பேருந்து வசதியை பொருத்தவரை பல்வேறு இடங்களில் அரசு அதிக பேருந்துகளை இயக்கி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் பெரிய அளவில் குவிந்தனர். அதிக அளவில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தி இருந்த போதும், பேருந்துகளில் பயணித்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அருகருகில் அமர்ந்துசென்றனர்.

சில பேருந்துகளில் கட்டுப்பாடுகளுடன் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அதனால், அங்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஏற்கனவே கடைக்கோடி கிராமங்கள் பல்வேற்றிலும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த வேலையில் சென்னையில் இருந்து படையெடுத்துள்ள இந்த மக்கள் கூட்டத்தால் மேலும் கிராமங்கள் கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பு முயற்சிகளெல்லாம் வீணா?

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீரிய அளவில் எடுத்து வருவது
பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் இத்தனை மெனக்கெடல்களும் எதற்கு? கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தவும், இறப்புகளை குறைப்பதற்குதானே.. கொரோனா பரவலை நாளுக்கு நாள் அதிகப்படுத்துவதில் முக்கிய காரணிகளாக இருப்பது எது? முறையாக முகக்கவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒரே இடத்தில் அதிகப்படியானோர் ஒன்று கூடுவதும்தானே... ஆனால் அதுதான் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரங்கேறியிருக்கிறது.

இரண்டாவது அலையில் கொரோனா வைரஸ் தொற்று மிகத்தீவிரமாக பரவும் என்ற தகவல் உறுதியாக தெரிந்தும், அரசு நேற்றும் இன்றும் முறையான திட்டமிடல் இன்றி தளர்வுகளை தளர்த்தியது ஏன்? பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த காவல்துறை, இன்று பல இடங்களில் கண்டும் காணாமலும் இருந்துள்ளதே? இன்று மட்டும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விடுமுறையா என்ன? என பலரும் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு கொரோனா பரவல் புதிதல்ல, கடந்த 1 1/2 வருடமாக நாம் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டு வருகிறோம்.நெருங்கியவர்களை இழந்திருக்கிறோம். குணமடைந்தவர்களும் கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டோம் என்று பெருமூச்சு விடுவதற்கு வழியில்லை.. இருதய பாதிப்புகள், கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்கள் வரிசைக்கட்டி கொண்டு நிற்கின்றன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாத சூழ்நிலை மாறி, உறவினர் ஒருவர் கொரோனா நோயாளியை பக்கத்தில் இருந்து கவனிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பல அரசு மருத்துவமனைகளில் இந்த நிலை இருந்து வருகிறது.

பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களே கொரோனாவிற்கு தங்களது உயிரை தாரை வார்த்து கொடுத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், சாமானியர்களை காத்துக்கொண்டிருப்பது என்னவோ முககவசமும் தனிமனித இடைவெளியும்தான்.. அப்படியிருக்கையில் இன்றும் நேற்றும் மக்கள் அதனை காற்றில் பறக்கவிட அரசின் இந்த அறிவிப்பு காரணமாகி விட்டதோ என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

- கல்யாணி பாண்டியன்