ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இருப்பதில்லை என்றும், இதனால் தினந்தோறும் தாங்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தமிழகத்தை சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகள் கடந்த சில தினங்களாக சமூகவலைதளம் வழியாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு, ‘சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன’ என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் முகநூலில் உருக்கமான பதிவொன்றை இட்டிருந்தார். அதில், ‘இந்த நாட்டில் பெரும்பாலான இடங்கள் என்னைப் போன்றவர்களுக்கான இடங்கள் இல்லை. ஒரு சக்கர நாற்காலி உயயோகிக்கும் மனிதன் இந்த இடத்தை உபயோகிக்கக் கூடும் என்கிற உணர்வு யாருக்கும் இல்லை என்பது தான் உண்மை’ என்று அவர் வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில் அவர் ‘சக்கர நாற்காலி நுழையாத ஒரு ரயில் கழிவறை, குறுகலான ஒரு பாதை போன்றவை தொடங்கி மின்தூக்கிகள் வரை எதிலேனும் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அங்கு அந்தப் பிரச்னையை சரிசெய்யும் வரை நாங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலையே எங்களுக்கு உள்ளது. சக்கர நாற்காலி நுழையாத ஹோட்டல் கழிவறைகள் என சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்’ போன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார். தனது அப்பதிவின் இறுதியில் மனுஷ்யபுத்திரன், “இரண்டு கால்கள் இருப்பவர்கள் தயவு செய்து அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் மிகக் கொடூரமான சமூகத்தில் வாழ்கிறீர்கள்” எனக்கூறியிருந்தது, உடல் குறைபாடுகளற்ற நபர்கள் எல்லோரையும் ஒருவித அச்சத்துக்கு கொண்டு சென்றதென்பதையும் இங்கே மறுக்க முடியாது.
மனுஷ்ய புத்திரனின் வார்த்தைகள் மட்டுமல்ல; அவரை போன்ற மன வலியோடும், உடல் வலியோடும் வாழும் ஓர் நபர் தங்கள் அடிப்படை உரிமைகளுக்குக்கூட இச்சமூகத்தில் ஒவ்வொரு முறையும் போராட வேண்டும் என்கையில், இவர்களின் குரல்களை கேட்பதற்கு யாரும் இல்லையா என கேள்வியை எழுப்புகிறது. ‘சராசரி மனிதனொருவருக்கு கிடைக்கும் உரிமைகளைக்கூட எங்களுக்கு தராமல் ஏன் அவதிக்குள்ளாக்குகின்றீர்கள்’ என அவர்கள் கேட்கும் கேள்வி நம்மையும் சேர்த்து சுடுகிறது.
பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல, அரசு கட்டடங்களிலும் சாய்வு தளப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும், கழிப்பறை உள்ளிட்டவற்றில் போதுமான கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்கிற பெரும் கேள்வி எழுகிறது.
2021 ம் ஆண்டு கணக்குப்படி 16,80,000 பேர் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களுக்காக இயற்றப்பட்ட 2013 அரசாணையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்து தேடியபோது, அதில் ‘அனைத்து வணிக நிறுவனங்களையும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அனுகும் வகையில் 180 நாள்களில் கட்டமைக்க வேண்டும். மீறினால் உரிமங்கள் ரத்து செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. ஆனால் இன்றுவரை அதுசார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தனியார் நிறுவன வளாகங்களில்தான் இந்த நிலை என்றில்லை. பல அரசு துறைகளிலும் கட்டடங்களிலும்கூட உரிய கட்டமைப்பு வசதி இல்லை. குறிப்பாக அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்துகள், ரயில்களில் இவ்வசதிகள் முறையாக இல்லை. இந்த அரசு சார் இடங்களிலெல்லாம், மாற்றுத்திறனாளி நுழைவுவாயிலில் உள்ளே நுழைவதற்கான வழி மட்டுமே உள்ளதே தவிர மற்றபடி உள்நுழைந்த பின் அங்கிருந்து முன்னேறி செல்லவோ - இறங்கி செல்லவோ - படிக்கட்டுகளை தவிர்த்துவிட்டு மாடிக்கு செல்லவோ உரிய வசதி இல்லை.
சென்னை எக்மோர் ரயில் நிலையம்கூட இதற்கு சிறந்த உதாரணம். அங்கே, மாற்றுத்திறனாளியால் உள்நுழைய முடியும் - முதல் ப்ளாட்ஃபார்மிலிருந்து லிப்ட் உபயோகப்படுத்தி ப்ளாட்ஃபார்ம் மாறும் பாலத்தை அடைய முடியும். ஆனால் அங்கிருந்து வேறொரு ப்ளாட்ஃபார்மில் லிப்ட் வழியாக இறங்க முடியாது. முதல் ப்ளாட்ஃபார்ம் - 11, 12 ப்ளாட்ஃபார்ம் தவிர பிற எல்லா ப்ளாட்ஃபார்மிலும், படிக்கட்டு வழியாக மட்டுமே அங்கு இறங்க முடியும். லிஃப்ட்டில்தான் ஏற முடியும் என்ற நிலையுள்ள ஒரு மாற்றுத்திறனாளி, எப்படி படிக்கட்டு வழியாக இறங்குவார் என அரசு முடிவு செய்கிறதென தெரியவில்லை. இதைவிட முக்கியம், அப்பயணியால் ரயிலுக்குள் இடைஞ்சலன்றி ஏற முடியாது. ஏனெனில் அங்கும் படிக்கட்டு மட்டுமே. அதுவும், சக்கர நாற்காலி நுழையுமளவு பெரியதல்ல; மிக குறுகியதுதான். இப்படி இன்னும் நிறைய உதாரணம் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் ‘மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனை பேருந்துகள் இயங்குகின்றன?’ என கேட்கப்பட்டபோது, மிக சில இடங்களில் மட்டுமே அவ்வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அவை மொத்த அரசு பேருந்தில் 3% என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எப்படி புரிந்துக்கொள்வதென நமக்கே தெரியவில்லை. ஒருவேளை தமிழகத்தில் 16 லட்ச சொச்சம் பேருக்கு, 3% போதுமென்ற நிலையா உள்ளது? இக்கேள்விக்கும் அரசிடம் பதில் இல்லை.
1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு சார்பில், ‘சம உரிமை - சம வாய்ப்பு - சம பங்களிப்பு’ என்றொரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்தச்சட்டம், இன்றளவும் சட்டமாகவே உள்ளதாகவும்; தங்களை யாரும் சட்டை செய்யவே இல்லையென்றும் மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.
டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த தீபக் இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாக இந்த ‘உரிய வசதியின்மை’யை பேசுவதை விடவும், சூழ்நிலை காரணமாக உடல் சார்ந்த ஏதேனும் தற்காலிக சிக்கல் காரணமாக அவதிப்படும் நபர்களுக்காகவும் (கர்ப்பிணிகள், வயதானோர் உள்பட) இவ்விஷயத்தில் பேச விளைகிறேன். ஏனெனில் தற்காலிக பாதிப்பென்றாலும், பாதிப்பு பாதிப்புதானே? அவர்களுக்கும் உரிய வசதி தேவைதானே?! ஆகவே அவர்களையும் இணைத்து அரசுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.
தொடர்புடைய செய்தி: பிரதமருக்கு கோரிக்கை விடுத்த சுதா சந்திரன் - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு
மட்டுமன்றி மாற்றுத்திறனாளிகளை மட்டும் எண்ணிக்கை காட்டி அவர்களுக்காக வசதி கேட்கையில், அரசுக்கு மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக தெரியக்கூடும். எண்ணிக்கை குறைந்திருக்கும்போது, கட்டமைப்பு வசதியை செயல்படுத்த தரப்படும் அழுத்தமும் அதிகாரிகளுக்கு குறைந்துவிடுகிறது. ‘ஒருவர் தானே; இருவர்தானே... அட்ஜஸ்ட் செய்து கொள்வர்’ என நினைக்கின்றனர். அந்த அழுத்தம் அதிகரிக்க, மாற்றுத்திறனாளிகளாக இல்லாமலும் படிக்கட்டு ஏற - இறங்க என அவதிப்படும் தற்காலிக பாதிப்புடையோரும் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதையே நான் செய்கிறேன்; சொல்கிறேன்.
இந்த இடத்தில், பாதிக்கப்படும் - அவதிப்படும் நபர் ஒருவரென்றாலும், அவருக்காக அரசு வசதியை செய்துத்தர வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அரசுக்கு அவ்வளவு பெரிய மனமில்லை. சொல்லப்போனால், இந்தியாவுக்கே அப்படியொரு மனமில்லை. அதன் வெளிப்பாடுதான், இத்தனை வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதியை செய்துத்தராமல் இருப்பது. இங்கு யாருக்கும் மனமில்லை என்பதால், எங்கள் தேவைகளை வேறுவிதமாய் கேட்க விளைகிறோம். எங்களுக்காக (மாற்றுத்திறனாளிகளுக்காக) நாங்கள் மட்டுமே குரல் கொடுப்பதுடன், இன்னும் சிலரும் சேர்ந்து கொடுப்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் நெருக்கடியை தந்து, எங்களை மீட்கும் என நம்பி, அதை செய்ய விளைகிறோம்” என்றார்.
தீபக் மட்டுமன்றி பொது இடங்களில் போதுமான வசதிகள் உள்ளனவா என்ற கேள்விக்கு மாற்றுத்திறனாளிகள் பலரும் வசதிகள் இல்லையென்றே கூறுகின்றனர். பெரும்பாலானோர், "பல இடங்களில் எங்களுக்கான வசதிகள் இல்லை. குறிப்பாக கழிப்பறை பயன்படுத்த போதுமான வசதிகள் இல்லை. சில அரசு அலுவலங்களில் வசதிகள் உள்ளன. ஆனால் அங்கும் உள்நுழைய மட்டுமே வசதியுள்ளது. அதன்பின் மாடிகளுக்கு செல்லவோ படியின்றி பயணிக்கவோ வசதியில்லை. அரசு எங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எங்களில் பெண் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவர்களுக்கு அரசு கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும்" என்றனர். இவர்களும், டிசம்பர் 2 இயக்கம் தீபக்கும் பகிர்ந்த பிற தகவல்களை, கீழ்க்காணும் லிங்க் வழியாக தெரிந்துக்கொள்ளுங்கள்.