கொரோனா வைரஸ் பாதிப்பில் படுக்கை வசதி தட்டுப்பாடை குறைக்க, பெரும்பாலானோருக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மிக மோசமான பாதிப்பு என்றால் மட்டும், மருத்துவமனையை நாடுங்கள் என கூறப்பட்டு வருகிறது.
இப்படி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், நோயிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் நோக்கத்தில் செயல்படுவதோடு சேர்த்து, மேற்கொண்டு நோயை பரப்பாமல் இருக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பது பற்றியும் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வீட்டுக்குள்ளும் கட்டாய முகக் கவசம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது ஆகியவை பற்றி நிறைய அறிவுரைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன்ன. இவற்றோடு சேர்த்து நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி விரிவாக சொல்கிறார் மருத்துவர் அர்ஷத் அகில்.
"கொரோனா தொற்று என்பது தொற்று ஏற்பட்ட நபரின் இருமல், தும்மல், பேசுதல் போன்ற செயல்பாடுகளால் அவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் சிறு துளிகளின் மூலம் வைரஸ் அருகிலிருப்பவருக்கு நேரடியாக பரவும். இவற்றோடு சேர்த்து, தொற்று ஏற்பட்டிருக்கும் நபர் உபயோகிக்கும் பொருள்களின் மூலமாக மறைமுகமாகவும் வைரஸ் பரவல் இருக்கும். இப்படி மறைமுகமாக பரவும் போது, சாப்பாடு தட்டு - வாஷ்பேஷின் போன்ற நோயாளியின் எச்சில் படும் இடம் வழியாகத்தான் வேகமாக பரவுமென்பது குறிப்பிடத்தக்கது.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் மனித உடலில் அதிகம் இருக்கும் இடம் வாய்தான். அதனால்தான் கொரோனா வைரஸூம் அடிப்படையில் வாயிலிருந்து அதிகமாக வெளிப்படுகிறது. வைரஸ் வெளிப்பட்ட பிறகு காற்றில் சிறிது நேரம் தங்குகிறது. பிறகுதான் வேறொரு நபருக்குத் தொற்றுகிறது. இதைத்தடுக்கத்தான், வாய்ச்சுகாதாரம் முக்கியமானதாக ஆகிறது.
தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர், தன்னுடைய வாய் சுகாதாரத்தில் பல் துலக்கி (tooth brush) மற்றும் நாக்கு வழிப்பான் (tongue cleaner) ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்வது, இப்போதைக்கு முதன்மை பெற்றிருக்கின்றன. இவை இரண்டின் சுத்தத்தையும் நன்கு உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் எல்லோரும் ஒரே கழிப்பறை, குளியலறையைப் பயன்படுத்தும் சூழல் இருந்தால், பல்துலக்கிகளும் ஒன்றாகவே இருக்கும். அந்த சூழலை தவிர்த்துவிட்டு, பிறரின் டூத் ப்ரஷ் இருக்கும் இடத்தோடு, பொதுவாக வைக்காமல் இருக்கவும்.
கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதை போல, மௌத்வாஷ் மூலம் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். தினமும் மூன்று முறையாவது இதை செய்யலாம். இரவு தூங்கப்போகும் முன் கட்டாயம் வாய்க்கொப்பளிப்பது நல்லது. உப்பு நீரில் வாய்க்கொப்பளிப்பது, மௌத்வாஷ் உபயோகிப்பதை விட நல்லதுதான். அவரவர் வசதிக்கேற்ப எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வாய் சுகாதாரம் என்பதுமட்டுமே நோக்கம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், அதிலிருந்து மீண்ட பிறகு அடுத்த சில நாள்களுக்கு வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். இப்படி மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு வீட்டுத்தனிமையில் இருப்போர், புதிய பல்துலக்கியையும், நாக்கு வழிப்பானை உபயோகிப்பது நல்லது. இயல்பு நிலை திரும்பிய பின், மீண்டுமொரு முறை புதிய டூத் ப்ரஷ், துலக்கி உபயோகப்படுத்தவும்.
வாய் சார்ந்த செயல்பாடுகளில், நாம் சாப்பிடும் உணவு உள்ளே போய்விடுகிறது. தட்டுகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்திக்கொள்ளும் அறையிலேயே வைத்துக்கொள்ளலாம். ஆனால், பல் துலக்கும்போது, துலக்கி முடித்த பிறகுப் பல் துலக்கியும், நாக்கு வழிப்பானும் வெளியே தான் இருக்கின்றன. சாதாரண நேரத்தில் கூட, பல் துலக்கி முடித்து சிறிது நேரம் கழித்து டூத் ப்ரஷ்ஷை முகர்ந்து பார்த்தால் அதில் ஒருவகை நாற்றம் இருக்கும். அது பாக்டீரியாவினால் ஏற்படும் நாற்றம்தான்.
இவை மட்டுமன்றி கோவிட் 19 ஏற்படுத்தும் நுரையீரல் நோய்களில், தொடக்கத்தில் நுரையீரலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆய்வொன்று சொல்லியிருக்கிறது. உமிழ்நீரில் வைரஸின் அதிக செறிவு ஏற்படுவதால், அவை மூலமாக சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனாவின் தீவிரம் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக, நம்மையும் நம் குடும்பத்தையும் கொரோனா ஆபத்திலிருந்து காக்க, வாய் சுகாதாரம் மிக மிக முக்கியம்" என்றார்.