சிறப்புக் களம்

“சசிகலா சொன்னதைக் கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது!” - மனம் திறந்த சீமான்

“சசிகலா சொன்னதைக் கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது!” - மனம் திறந்த சீமான்

webteam

சசிகலாவை சந்தித்ததற்கான காரணம் குறித்து 'புதிய தலைமுறை' நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடனான சிறப்பு நேர்காணலில் 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிய பின்னர், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து அதிமுகவினர் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆனால், சசிகலாவையும் டிடிவி தினகரனையும் ஏற்க அதிமுக தலைமை மறுத்துவிட்டது.

இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சசிகலாவை சீமான் சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'புதிய தலைமுறை'யின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சசிகலா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், “கருணாநிதி, ஈவிகேஸ் இளங்கோவனை விட சசிகலாவை நான் விமர்சிக்கவில்லை. கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டபோது நான் இரண்டு முறை பார்க்க சென்றிருந்தேன். அரசியல் ரீதியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது பெரும் கோபம் உள்ளது. ஆனால், அவரது தாயார் இறந்தபோது வீட்டிற்கே சென்று துக்கம் கேட்கிறேன். அதுதான் மனித மாண்பு.

சசிகலாவை பொறுத்தவரை குடும்ப அளவில் உறவு இருக்கிறது. அவர்களின் கணவர் இறந்தபோது 4 மணிநேரம் உட்காந்து பேசிக்கொண்டிருந்தேன். சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை; கொரோனா வந்துவிட்டது என்றார்கள். உண்மையிலேயே கொரோனா வந்துவிட்டதா என்று கேட்டேன். 'ஆமாம்...  நான் பிழைத்து வருவேன் என்று நினைக்கவே இல்லை' என சசிகலா சொல்கிறார். இதைக் கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

குடும்பத்தோடு வர சொன்னார். ஆனால், எனது மகன் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை தூங்கும்போது எழுப்பினால் அழுவான். அதனால் அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் சென்று பார்த்துவிட்டு வந்தேன். அங்கு தனியாக நிறைய பேசினோம். அதையெல்லாம் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும் என அவசியமில்லை.

அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலைசெய்வோம் என்று சசிகலா உளமாற விரும்பினார். நீண்ட காலம் போராடி கட்டி காப்பாற்றிய இயக்கம். 'நடுநிலையாக யாரையாவது வைத்து பேசியிருக்கலாமே' என்றேன். 'அது முடியவில்லையே' என சசிகலா கூறினார். நான் முதல்வரிடம் நன்றாக பேசுவேன். பேசிப் பார்க்கிறேன் என்றேன். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதைப் பேசியும் பயனில்லை.

நான் அவர்களுடன் சண்டை போடுவது வேறு. எந்த ஓர் அரசியல் இயக்கமும் சிதைந்து போவதை பார்க்க முடியாது. நான் அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஜெயலலிதா அதிகாரத்தில் இருந்தாலும் அவருக்கு பக்க பலமாக இருந்தது சசிகலா. இது அனைவருக்கும் தெரியும். சசிகலாவையும் தெரியும். எடப்பாடி பழனிசாமியையும் எனக்கு தெரியும். அதனால்தான் நான் பேசிப் பார்க்கிறேன் எனக் கூறினேன். அவ்வளவுதான்.

சசிகலா இந்த முடிவை எடுத்திருப்பதற்கு காரணம், வலி. சசிகலாவை யாரும் மிரட்ட முடியாது. அவராக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும்” என்றார் சீமான்.