வாடகைத்தாய். நேற்று முதல் தமிழ் இணையச்சூழலை ஆக்கிரமித்திருக்கும் ஒரு வார்த்தை. இதற்கு காரணம், இயக்குநர் விக்னேஷ் சிவனின் இணையதள போஸ்ட். தனது அந்தப் பதிவில், தானும் - நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைக்கு அப்பா - அம்மாவாகியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார் விக்கி. இந்நிலையில் `சமீபத்தில்தானே இவர்களுக்கு திருமணமானது... அதற்குள் குழந்தை எப்படி சாத்தியம்? நயன்தாரா கருத்தரிந்திருந்தது தொடர்பான எந்த செய்தியோ குறிப்போ புகைப்படமோ வெளியாகாத நிலையில், கடந்த மாதம் வரை விக்னேஷ் சிவன் வெளியிட்ட எந்தப் படத்திலும் நயன்தாரா கருத்ததரித்தற்கான அடையாளமே தெரியாத நிலையில், தம்பதியர் குழந்தை பெற்றது எப்படி’ என்பது கேள்விக்குள்ளானது.
இவற்றுக்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா தரப்பில் எந்த விளக்கம் தரப்படவில்லை. இருப்பினும், விக்கி - நயன் தம்பதி ’Surrogacy’ என சொல்லப்படும் வாடகைத்தாய் முறை மூலம் தாய், தந்தையராகியிருப்பதாக சில தகவல்கள் பரவிவருகின்றன. இது தனிநபர் உரிமை என்ற அடிப்படையில், இது உண்மையா பொய்யா என்பதை விடுத்து, வாடகைத்தாய் பற்றிய சட்டரீதியான அனுகுமுறைகளை இந்த தருணத்தில் பெறுவது அனைவருக்குமே நல்லது.
ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரை பெண்களுக்கு கருக்கலைப்புக்கான சட்டம், ஐ.வி.எஃப் மூலம் குழந்தை பெறுவதற்கான சட்டம், வாடகைத்தாய்க்கான சட்டம் என பல சட்டங்களும், பல திருத்தங்களும் வெளிவந்துள்ளன. இதை தெரிந்துக்கொள்வது, ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். அந்தவகையில் வாடகைத்தாய் என்பது என்ன, சட்டம் அதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் வைத்துள்ளன என்பது குறித்து பார்ப்போம். இதுகுறித்து மகப்பேறு மருத்துவரும், மருத்துவ செயற்பாட்டாளருமான சாந்தி நமக்கு விளக்கி கூறினார்.
"பல்வேறு மருத்துவ காரணங்களால் கருவுற இயலாத தம்பதிக்கு, குழந்தைபேறு அளிக்கும் செயல்முறையே வாடகைத்தாய் முறை. இதில் ஒரு பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்தணு கொண்டு மருத்துவமுறையில் கருவை உருவாக்கி, பின் வாடகைத் தாயின் கருப்பையில் அதை பொருத்தி, குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது. இது திருமணமாகி குழந்தை பெறுவதில் சிக்கலுள்ள தம்பதியரும், கைம்பெண்ணாகவோ விவாகரத்து செய்தோ வாழும் பெண்களும் இம்முறை மூலம் குழந்தை பெறலாம்.
இவர்களில் தம்பதியின் வாடகைத்தாய் மூலம் குழந்தைபெற முயல்கையில்,
* அவர்கள் இந்தியராக இருக்க வேண்டும்.
* சட்டப்படி அவர்களுக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும். இந்த இடத்தில், அவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. ஆனால் இது சட்ட அறிக்கையில் இல்லை. சட்டம் அமலுக்கு வரும் முன்பு வெளியான வரைவறிக்கையில் மட்டுமே இந்த 5 ஆண்டுகள் என்பது இருக்கிறது.
* இந்த தம்பதியில் பெண்ணுக்கு வயது 23- 50 என்றும், ஆணுக்கு 26 - 55 என்றும் இருக்க வேண்டும்.
* இருவரில் ஒருவருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்க வேண்டும். இதை மாவட்ட மருத்துவ குழு (District medical board) உறுதி செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதை அவர்கள் மருத்துவமனையில் சமர்பிக்க வேண்டும்.
* இதற்கு முன் அவர்களுக்கு குழந்தையே இருக்கக்கூடாது. அந்தக் குழந்தை பெற்ற குழந்தையாக மட்டுமல்ல, தத்துக்குழந்தையாகக்கூட இருக்கக்கூடாது. உடல் ரீதியான தீவிர நோயுள்ள (மரபு நோய்கள் போல) குழந்தை இருக்கலாம்.
* வணிகரீதியான காரணத்துக்காக வாடகைத்தாய் முறையை பயன்படுத்தக்கூடாது. குழந்தையின்மை சிக்கலுக்காக மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும்.
வாடகைத்தாய்க்கான விதிமுறைகள்:
* திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும். அவருக்கு வயது 25-35 என்பதற்குள் இருக்க வேண்டும்.
* இப்பெண்ணுக்கு ஏற்கெனவே குழந்தை இருக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட பெண்ணின் கருமுட்டையை வைத்து, குழந்தை உருவாக்கப்படக்கூடாது. மாறாக சம்பந்தப்பட்ட தம்பதியிரிலுள்ள பெண்ணின் கருமுட்டை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* ஒருமுறைதான் இவர் வாடகைத்தாயாக இருக்க முடியும்.
* இவர் இந்திய பிரஜையாக இருக்கவேண்டும்.
* வாடகைத்தாய் யாரென்ற அடையாளம் வெளிப்படுத்தப்படக்கூடாது.
வாடகைத்தாய் சட்ட வழிமுறை எப்போது அமலுக்கு வந்தது?
வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா என்ற பெயரில், கடந்த 2019 மக்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குமுன், பெரும்பாலும் வணிக நோக்கத்தில் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வழிமுறை கைகொடுத்து வந்ததாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஒழிக்க, இந்த மசோதாவை அமலுக்கு கொண்டுவந்தது அரசு. கடந்த டிசம்பர் 2021-ல் இச்சட்டம் அமலுக்கு வந்தது. இதன்மூலம் வாடகைத்தாய் மூலம் வணிக ரீதியாகக் குழந்தை பெறுவதைத் தடுப்பதுடன், அப்பாவிப் பெண்களின் உடல் உழைப்பு மற்றும் உணர்வு ரீதியான சுரண்டல் போன்ற மோசடியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.
இந்த மசோதாவின் கீழ், வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைப்பேறு என்பது, இயல்பான குழந்தைப்பேறுக்கு இணையான மருத்துவச் சிக்கல்களை உள்ளடக்கியதே. வாடகைத்தாய் முறை மூலம் பெறப்படும் குழந்தையின் சட்டபூர்வ உரிமைகள் தொடர்பான எதிர்காலச் சிக்கல்களை தவிர்க்க, பெற்றோர் மற்றும் வாடகைத் தாய்மார்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்பதும் சட்டமாக்கப்பட்டுள்ளது.
Surrogacy என்றால் என்ன? மருத்துவ விளக்கம்:
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியினரில், சம்பந்தப்பட்ட பெண்ணின் கருமுட்டையில், அவர் கணவரின் விந்தணுவை செலுத்தி கருவுறச் செய்து, அந்தக் கருவை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி குழந்தைப்பேறு அடைய வழிவகை செய்யப்படும். இந்த முறையில், கருமுட்டை, விந்தணு இரண்டும் சம்பந்தப்பட்ட தம்பதியுடையதாக இருப்பதால், வாடகைத்தாயின் மரபு பண்புகளை குழந்தை பெறுவது தவிர்க்கப்படுகிறது.
கூடுதல் தகவல்கள்:
மேற்கூறிய இந்த வழிமுறைகள் யாவும், இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற விரும்புவோருக்கானது மட்டுமே. உலகளவில் Fertility tourism என்றொரு கான்செப்ட் பற்றி பேசப்படுகிறது. அதாவது, வாடகைத்தாயை நிர்ணயிக்க எந்தவித சட்ட திட்டங்களும் இல்லாத சில நாடுகள் உலகில் உள்ளன. அங்கு சென்று, எந்த சட்டத்துக்கும் உட்படாமல், விரும்பியபடி குழந்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் வாடகைத்தாய்க்கு என்னென்ன மாதிரியான விதிமுறைகள் உள்ளன என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி பிற நாடுகளுக்குச் சென்று குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஆங்கிலத்தில் Fertility tourism எனப்படுகிறது” என்றார்.
இந்தியாவில் சமீபத்தில்தான் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு கொண்டுவடப்பட்டது. இந்தியாவில் இந்த சட்டத்திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டுக்கு முன்புவரை கூட, பல பிரபலங்கள் அதன்கீழ் குழந்தை பெற்றுள்ளனர். உதாரணத்துக்கு, பாலிவுட் பிரபலமான ஷாருக் கான்- கெளரி தம்பதி கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு தாய், தந்தை ஆகினர். அதன் பிறகு, அமீர் கான், சல்மான் கான், கரண் ஜோஹர், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, சன்னி லியோன், துஷார் கபூர் மற்றும் ஏக்தா கபூர் என வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், பிரியங்கா சோப்ரா - நிக் தம்பதியும் பெண் குழந்தையை இம்முறையில் பெற்றெடுத்ததன் மூலம் இந்த வரிசையில் இணைந்தனர்.
தொடர்புடைய செய்தி: பிரியங்கா முதல் ஷாரூக் வரை... வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!
- ஜெ.நிவேதா