''காசு பத்தி எல்லாம் கவலைப்படுவது இல்லைங்க; வயிறார சாப்பிடுறாங்களா? அதுவே போதும். அப்படின்னு இருந்திடுவேன்'' என்கிறார் சாலையோரம் இட்லி கடை நடத்திவரும் கல்யாணி.
மனித குலத்தில் உணவு தேவை என்பது மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. பலர் அவர்களுக்கு தேவையான உணவுகளை அவர்களாகவே தயாரித்துக் கொள்கிறார்கள். வேலைப்பளு, நிதிச்சுமை உள்ளிட்ட நெருக்கடிகளை பயன்படுத்தி உணவுகளை விலைகொடுத்து வாங்கக்கூடிய நிலைக்கு ஆளான நாம், அன்றாட வாழ்வில் உணவை விலைகொடுத்து வாங்குவதை ஒரு செயலாகவே மாற்றிவிட்டோம். எதற்கு பணம் இருக்கிறதோ இல்லையோ உணவிற்கு என்று பணம் ஒதுக்கி வைக்கிற பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
காலை உணவு மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் இப்போதெல்லாம் காலை உணவிற்கு சிற்றுண்டிதான் சரியான வழி என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். அப்படி காலை உணவில் மிக முக்கியமாக அனைவரும் உண்ணுவது என்கிற ஒரு உணவாக இட்லி பார்க்கப்படுகிறது. உணவுத் தேவைகளை அவரவர் வசதிக்கு ஏற்றார்போல பூர்த்திசெய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் நடுத்தர சாமானிய மக்களின் உணவுத் தேவைகளை சாலையோர கடைகள்தான் இன்றுவரை பூர்த்திசெய்து வருகிறது. அப்படி உணவு தயாரித்து வழங்கும் அவர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
’’என் பேரு கல்யாணிங்க. எனக்கு வயசு 53 ஆகுது. எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு ஆம்பள பசங்க, ஒரு பொம்பள பொண்ணு பொறந்தாங்க. அதுல ஒரு பையன் விபத்துல இறந்துட்டான். தியாக துருகம்தான் எங்க சொந்த ஊரு. என்னை வெளியூர்ல கட்டிக் கொடுத்தாலும்கூட கொஞ்ச நாள்ல நான் எங்கம்மா கூடவே வந்துட்டேன். இருபத்தி ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மாகிட்ட வரும்போது இந்த கடைல வேலை கத்துக்கிட்டேன். அப்பல்லாம் ஒரு இட்லி 50 பைசா, சாம்பார், சட்னி எல்லாம் இரண்டு ரகம்; எல்லாம் போட மாட்டோம். ஒன்னு சாம்பார் கொடுப்போம்; அப்படி இல்லன்னா சட்னி கொடுப்போம். ஆனா இப்ப ஆறு இட்லி 20 ரூபாய்க்கு விக்கிறேன். ஒரு சட்னி ஒரு சாம்பார். இன்னமும் நான் சட்னியை ஆட்டுக்கல் இல்ல அம்மியிலதான் அரைப்பேன். கையால அரைக்கிறதுலதான் சுவை இருக்குங்க. அதுக்காகவே என்கிட்ட நிறைய பேர் சாப்பிடுவாங்க.
ஒருநாளைக்கு குறைந்தது 6 கிலோ அரிசி ஊற வைப்பேன். 6 கிலோ அரிசிக்கு 1 கிலோ உளுந்து ஊற வைக்கணும். அரிசியும் உளுந்தும் குறைந்தது மூணு மணி நேரம் தண்ணியில ஊறணும். அப்போதான் மாவு பக்குவமா அரைக்க முடியும். எங்க அம்மாவுக்கு அப்புறம், நான் கடை நடத்தும்போது ஒரு கிலோ அரிசி வெளியில கொண்டு போய் அரைக்கறதுக்கு மூன்று ரூபாய் கொடுத்தேன். இப்ப நானே சொந்தமா கிரைண்டர் வாங்கிட்டேன். காலையில 4 மணி அப்படி இல்லன்னா 5 மணிக்கு எழுந்திருக்கணும். அப்ப வேலை ஆரம்பிச்சா பத்து மணி வரைக்கும் இட்லி கடை ஓடுங்க. அதுக்கு அப்புறமும் வீட்டுக்கு போலாம்னா முடியாது. இட்லி சுட பயன்படுத்தின பாத்திரத்தை எல்லாம் கழுவி வச்சிட்டு வீட்டுக்கு போறதுக்கு மத்தியானம் ஒரு மணி ஆகிடும். ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணிக்குத்தான் மதிய சாப்பாடு சாப்பிடுவேன்.
ஒரு நாளைக்கு 1000 ரூபாயும், 1500 ரூபாய்கூட கிடைக்கும். எல்லா செலவும் போக 500 ரூபா நிக்குங்க. இந்த இட்லி கடைய வெச்சுதான் என் பொண்ணை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சேன். என் பையன பாலிடெக்னிக் படிக்க வச்சேன். இப்ப பொண்ண கட்டிக்கொடுத்துட்டேன். இட்லி கடை மட்டும் இல்லேன்னா என் குடும்பம் நடுத்தெருவுல வந்து நின்னுருக்குங்க. இன்னும் விறகு அடுப்பில் தாங்க இட்லி சுடுவேன். ஆனா விறகுதான் கிடைக்கறதில்ல. கிடைக்கும்போது வாங்கி வெச்சுக்கிறது. ஒரு கிலோ பொன்னி அரிசி 32 ரூபா விக்குது, உளுந்து ஒரு கிலோ 125. அதுவும் இந்த வருஷம் மழையில நிறைய உளுந்து அழுகி போச்சுங்.க என்ன விலை விக்கபோகுதுன்னே தெரியல. ஆனாலும் நான் 6 இட்லி 20 ரூபாய்க்குத்தான் கொடுப்பேன்.
விறகு அடுப்புதான் பெரும்பாலும் பயன்படுத்துவேன். ஏன்னா கேஸ் விக்கிற விலைக்கு இட்லி சுட முடியாதுங்க. வூட்டு கேஸ் ஆயிரம் ரூபாக்கும், கடை கேஸ் 2000 ரூபாக்கும் விக்குதுங்க. இத வாங்கி நானு என்னன்னு கடை வைக்கிறது? அதனால விறகு தாங்க நமக்கு சரிவரும். என்ன ஒண்ணு... இந்த கடை இருக்குறதுனால சொந்தபந்தம் விசேஷம்ன்னு எங்கேயும் போகமுடியாதுங்க. என் பொண்ணு கல்யாணத்துக்கு நாலஞ்சு நாள் கடை லீவு போட்டதுக்கு நிறையபேர் வந்து பாவம் ஏமாந்து போய்ட்டாங்க. நமக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் வரவுகளுக்கு வயிறார இட்லி போடுறதுதாங்க.
காசுன்னு கணக்கு பண்ணி நான் யாருக்கும் இட்லி விக்கிறது இல்லை. இருந்தாலும் இருக்கிறவங்ககிட்ட வாங்கி இல்லாதவங்களுக்கு சாப்பாடு போடறதுதாங்க. இப்படியே காலம் ஓடிக்கிட்டிருக்கு. இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த கடையை வச்சுக்கிட்டு இருக்கப் போறேன்னு எனக்கே தெரியல’’ என்கிறார் கல்யாணி.
எளிய மனிதர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை வாழ்கின்றனர். அன்றன்றைக்கு அவர்களுக்கு ஏற்படுகிற திருப்திதான் வாழ்க்கை. இப்படிதான் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த இட்லி கடை கல்யாணி ஓர் உதாரணம். மீண்டும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையோடு தொடர்வோம்.