சிறப்புக் களம்

டாய்லெட்டைவிட செல்போனில் அதிகமிருக்கிறது பாக்டீரியாக்கள் - அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்!

டாய்லெட்டைவிட செல்போனில் அதிகமிருக்கிறது பாக்டீரியாக்கள் - அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்!

Sinekadhara

இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் நமது வாழ்வில் இன்றியமையாத ஒருங்கிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. கைகளில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கக்கூட நம்மால் முடியாது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் பயன்பாடு மற்றும் அதன் வளர்ச்சியை பற்றி சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு நமது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், நமது தினசரி வாழ்க்கையையும் சுலபமாக்கிவிட்டது.

மக்களுடன் தொடர்பில் இருக்க உதவுவது மட்டுமல்லாமல், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அனைத்துமே ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுவிட முடியும். அதுவே நீங்கள் தொற்று அழற்சி (germophobic) மற்றும் அதேசமயம் செல்போன் அடிமையாக இருந்தால் உங்களுக்கு ஒரு விரும்பத்தகாத தகவல் இது. ஏனெனில் உங்கள் கைகளில் எப்போதும் தவழ்கிற செல்போனில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கிறது.

இது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்காதுதான். ஏனெனில் நாம் எங்கு சென்றாலும் செல்போனை கையிலேயே கொண்டுசெல்கிறோம். எங்கு வேண்டுமானாலும் வைக்கிறோம். இதன்மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் பிற கிருமித் தொற்றுகள் எளிதில் பரவலாம். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது நம்மில் பலபேர் நம் கைகளை கழுவுவது போன்று செல்போனை கழுவி சுத்தப்படுத்துவதில்லை. ஆனால் செல்போனில் எந்த அளவுக்கு பாக்டீரியா தொற்று படிகிறது என்பது குறித்து தெரிந்தால் நாம் அசால்ட்டாக இருக்கமாட்டோம்.

அதாவது டாய்லெட்டில் இருக்கும் பாக்டீரியாக்களைவிட 10% அதிகம் பாக்டீரியாக்கள் செல்போனில் இருக்கிறது என்கிறது ஆய்வு. இது பொதுவான கருத்தாக முன்வைக்கப்படவில்லை. அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். ஒரு டீனேஜரின் செல்போனில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. இது டாய்லெட்டில் இருக்கும் பாக்டீரியாக்களைவிட 10% அதிகமாம்.

கொரோனா காலகட்டத்தில் சுத்தத்தின் முக்கியத்துவம் மற்றும் கைகழுவுதலின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டனர். சானிடைசரை பயன்படுத்தி கைகளிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க கற்றுக்கொண்டனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்தவுடன், சுகாதாரத்தின் அளவும் குறைய ஆரம்பித்துவிட்டது.

பாக்டீரியா தொற்றை குறைக்க கழிவறைக்கு செல்லும்போது செல்போனை கொண்டுசெல்வதை தவிர்க்கவேண்டும். 60% தண்ணீர் மற்றும் 40% சுத்தப்படுத்தும் ஆல்கஹால் கரைசலைக்கொண்டு ஒரு மாதத்தில் பலமுறை செல்போனை சுத்தம் செய்யவேண்டும். ஆனால் நேரடியாக இதனை செல்போன் திரைமீது ஸ்ப்ரே செய்யக்கூடாது. அது திரையை பாதிக்கலாம். இந்த திரவத்திற்கு பதிலாக கிருமிநாசினியையும் பயன்படுத்தலாம். 70% கிருமிநாசினிகள் செல்போன் திரைமீது பயன்படுத்துவது பாதுகாப்பானது என்கிறது ஒரு ஆய்வு.