கர்னல் ஜான் பென்னிகுவிக் - ஆங்கிலேய இன்ஜினியரின் பிறந்தநாள் இன்று(15.01.1811 - 09.03.1911)
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் சென்னை மாகாணத்தை சுற்றிய பகுதிகளில் மழை இல்லாததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுவந்தனர். இதைக்கண்ட ஜான் பென்னிகுவிக் இன்ஜினியர் மக்களுக்கு உதவவேண்டும் என்று நினைத்தார். எனவே அதற்கான முயற்சியில் இறங்கினார். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வழிந்தோடும் நீரை மக்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டார். எனவே பெரியாறு ஆற்றின் குறுக்கே ஒரு அணையைக் கட்டினால் அந்த நீர் மக்களின் விவசாயத்திற்கு பயன்படும் என்று எண்ணிய அவர், அதற்கான அனுமதியை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்றார். அப்போது சென்னையின் கவர்னராக இருந்த வென்லாக்கிடமிருந்து 1895ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி ரூபாய் 75 லட்சம் பெற்று, அணை கட்டும் பணியைத் தொடங்கினார்.
இப்போது அனைத்தும் நகரமயமாகிவிட்டது. ஆனால் முன்பு அவை அனைத்தும் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாகத்தான் இருந்தது. கடும் மழை, ஆற்று வெள்ளம், காட்டு மிருகங்கள் மற்றும் விஷ பூச்சிகளுக்கு மத்தியில் கட்டடம் கட்டும் சிரமமான பணியை பென்னிகுவிக் மேற்கொண்டார். மூன்று ஆண்டுகளாக பாதி அணை மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்மழையால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணையும் அடித்துச் செல்லப்பட்டது. ஏராளமான மக்களும் உயிரிழந்தனர்.
எனவே பென்னிகுவிக்மீது நம்பிக்கை இழந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அணைக்கு நிதி ஒதுக்க மறுத்துவிட்டது. ஆனால் மக்களின் கஷ்டத்தை கண்ட பென்னிகுவிக்கால் தனது திட்டத்தை நிறுத்த முடியவில்லை. எனவே கர்னல் பென்னிகுவிக், இங்கிலாந்துக்குச் சென்று தனது சொத்துக்களை விற்று பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். தனது சொந்த பணத்தின்மூலம் அணையையும் கட்டிமுடித்தார். அந்த அணைதான் தற்போது சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு நீர்வழங்கும் ‘முல்லை பெரியாறு’ அணை என பெயர்பெற்று உயர்ந்து நிற்கிறது.
இந்த அணையின் நீரால் பல விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். பல விவசாயிகளின் உழைப்பிற்கு உறுதுணையாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுவிக்கின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறையையும், அதிகாரத்தையும் மக்கள் வெறுத்தாலும், பென்னிகுவிக் போன்ற சில நல்ல உள்ளங்கள் என்றும் மக்களின் மனதில் நீங்கா பிடித்திருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.