அணிலாக, முயலாக, பனியாக, பாறையாக, தெய்வமாக, சாத்தானாக, மொழியாக, மவுனமாக, உண்மையாக, பொய்யாக, நிழல் - நிஜம் இரண்டுமாக என வாழ்வை அதன் அத்தனை சாத்தியங்களோடும் வாழும் வரம் பெற்றவர்கள் படைப்பாளிகள். அப்படியொரு படைப்பாளி, அப்படியொரு கவிஞன், அப்பயொரு மனிதர் நா.முத்துக்குமார். தமிழ் ரசிகர்களை பத்து ஆண்டுகள் தனது பாடல் வரிகளால் அள்ளி அணைத்துக் கொண்டவர். தன்னை மொத்தமாக தமிழுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் ஒப்புக் கொடுத்தவர். காஞ்சியில் பிறந்த அன்பின் கவிஞன், நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார் தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என சென்னை வந்தார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இணைந்தார். நான்கு ஆண்டுகள் அவரோடு உதவியாளராக வேலை செய்தார். ஆனால் தனது எழுத்தில் இருக்கும் கவித்துவத்தை தானே உணர்ந்த அவர், பிறகு தனது பாதையை மாற்றிக் கொண்டார். சீமான் இயக்கிய 'வீரநடை' படத்திற்காக தனது முதல் பாடலை எழுதினார்.
பிறகு தொடர்ந்து 'நந்தா', 'வெயில்', 'காதல்', 'காதல் கொண்டேன்' என நூற்றுக்கும் அதிகமான படங்களில் 1,500 பாடல்களை எழுதினார். சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அந்த இழப்பின் வெறுமையை, ஏக்கத்தை, ஆசையை, எதிர்பார்ப்பை மொத்தமாக ராம் படத்தின் 'ஆராரிராரோ’ பாடலில் கடத்தியிருப்பார். தனது அப்பா மீதான அன்பை குழைத்து நெகிழ்ச்சி பொங்க 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே…’ என எழுதியிருப்பார்.
நா.முத்துக்குமார் காலத்தில் காதலித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அவர் காலத்து இளைஞர்கள் பெருமிதம் கொள்வதுண்டு. தன் மகளுக்கு ஒன்று, மகனுக்கு ஒன்று என்பது போல 'தங்கமீன்கள்' படத்திற்காக ஒரு தேசிய விருது, 'சைவம்' படத்திற்காக ஒரு தேசிய விருது என இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றார். 'வெயில்', 'சிவாஜி', 'கஜினி', 'அயன்', 'சிவா மனசுல சக்தி' ஆகிய படங்களுக்காக 5 மாநில விருதுகளையும் பெற்றார்.
'நியூட்டனின் மூன்றாம் விதி', 'பட்டாம் பூச்சி விற்பவன்' போன்ற கவிதைத் தொகுப்புகளையும், 'குழந்தைகள் நிறைந்த வீடு', 'வேடிக்கை பார்ப்பவன்', 'சில்க் சிட்டி' உள்ளிட்ட நாவல்களையும் எழுதினார். இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையில் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
அனைத்தையும் அவசர அவசரமா எழுதிவிட்டு அவசரமாக நம்மிடமிருந்து விடைபெற்றும் விட்டார். அவருக்காக அவரே எழுதிய வரிகள் என்பது போல பாலாவின் 'அவன் இவன்' படத்தில் ‘முதல்முறை என் வாழ்வில் மரணத்தைப் பார்க்கிறேன், கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்…’ என வரிகளை எழுதியிருப்பார்.
காலம் கருணையற்றது என்றாலும், குறைந்த காலத்தில் நிறைவாக எழுதிவிட்டார் நா.முத்துக்குமார். தமிழும், தமிழ் சினிமாவும் உள்ளவரை நா.முத்துக்குமார் எப்போதும் நினைவுகூரப்படுவார்.