சிறப்புக் களம்

‘அதற்கு உண்ண புற்கள் வேண்டும்’ செத்து மடியும் யானைகள்.. காரணங்களை அறிய வேண்டாமா..?

‘அதற்கு உண்ண புற்கள் வேண்டும்’ செத்து மடியும் யானைகள்.. காரணங்களை அறிய வேண்டாமா..?

jagadeesh

2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் மக்களுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் போதாத ஆண்டாகதான் இருக்கிறது. ஆப்ரிக்க கண்டத்தில் போட்ஸ்வானா நாட்டில் எந்தக் காரணம் என்று தெரியாமலேயே 250க்கும் மேற்பட்ட யானைகள் இறந்தன. இந்த யானைகள் இறந்ததற்கான ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஏன் தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் தொடர்ந்து இறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஒரு யானை சுடப்பட்டு உயிரிழந்தது. இது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.

இதில் அதிர்ச்சி தரும் விதமாக கோவை மாவட்டத்தில் மட்டும் மூன்று மாதங்களில் 13 யானைகள் உயிரிழந்தது சூழலியலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள சிறுமுகை வனச்சரகத்தில் மட்டுமே 5க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளுக்குள் நடக்கும் மோதல், வலசைப்பாதைகள் ஆக்கிரமிப்பு, மனித விலங்கு மோதல், நோய்த்தொற்று ஆகிய காரணங்களால் இப்பகுதியில் யானைகள் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் கோவை மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறும்போது " உயிரிழந்த யானைகளின் உடல்களை ஆய்வு செய்ததில் வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்தொற்று இருப்பது, பெரும்பாலான யானைகளிடம் கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான உணவு அல்லது சுத்தமான தண்ணீர் உட்கொள்ளாத பட்சத்தில் இது போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும். எனவே, நோய்த்தொற்று காரணமாக சில யானைகள் உயிரிழந்துள்ளது. யானைகளின் இறப்பு குறித்து கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, வனப் பகுதிகளுக்குள் யானை உயிரிழந்து சுமார் ஒரு வாரத்திற்கு பின்பு துர்நாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் யானையின் உடல் மீட்கப்படுகிறது" என்கிறார் அவர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக வனத்துறை "வனவிலங்குகளின் பிறப்பு மற்றும் இறப்பு என்பது இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இருப்பினும் யானைகள் பாதுகாப்பு மற்றும் வருங்காலங்களில் யானைகளின் வாழ்விடத்தை மேம்படுத்துதல் மற்றும் உயிரிழப்பைக் குறைத்தல் போன்ற பல்வேறு காரணங்களை கண்டறிய யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் "என தெரிவித்திருந்தது.

இது குறித்து கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் "ஓசை" சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியது " 6 மாதங்களில் 15 யானைகள் உயிரிழந்திருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு யானைகள் காப்பாற்றப்பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். பல்வேறு தரப்பட்டவர்களின் தொடர் அழுத்தம் காரணமாக இப்போது யானைகள் இறப்பு குறித்த ஆய்வு நடத்த வனத்துறை குழு அமைத்திருக்கிறது. உயிரிழந்த 15 யானைகளில் ஒரு யானை சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறது. பொதுவாக யானையை சுடுபவர்கள் ஆண் யானையை குறிவைப்பார்கள், அதன் தந்தத்திற்காக. ஆனால் இப்போது சுடப்பட்டுள்ளது பெண் யானை" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "பெண் யானையை சுட்டவர்கள் காட்டின் அருகே விவசாயம் செய்துக்கொண்டு இருப்பவர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பொதுவாக விவசாய நிலத்துக்கு வரும் யானைகளை விரட்ட பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் துப்பாக்கியால் யானையை சுடுவது என்பது மிகவும் ஆபத்தான போக்கு. அவர்களின் கையில் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்களால் விலங்குளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆபத்தானதுதான். உயிரிழந்த யானைகளில் இரண்டு யானைகள் அவர்களுக்குள் நடந்த மோதலில் காயமடைந்து இறந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இதர யானைகள் நோய் வாய்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது" என்கிறார் காளிதாசன்.

விரிவாக பேசிய காளிதாசன் "யானைகள் உயிரிழப்பு இயற்கையானதுதான் என்றாலும் இதே கோவை மாவட்டத்தில் 2016 இல் 22 யானைகள் இறந்தன, 2017 இல் 18 யானைகள் உயிரிழந்தன. அதற்கு பின்பு அவ்வளவு இல்லை. ஆனால் கோவை வனக்கோட்டத்தில் சிறுமுகை பகுதியில் மட்டும் 8 யானைகள் இறந்தது எப்படி என்பதுதான் கவலை தருவதாக இருக்கிறது. கோடைக் காலத்தில் வறட்சிக் காரணமாக உணவின்றி இறக்கும். அதிலும் பலவீனமான யானைகள் மட்டும் இறக்கும், ஆராக்கியமான யானைகள் இறப்பது அரிது. ஆனால் சிறுமுகை வனப்பகுதியில் யானைகளுக்கு நீருக்கும் பஞ்சமில்லை. யானைகளுக்கு புற்கள் வேண்டும் உண்பதற்கு. சிறுமுகை வனப்பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இந்தாண்டு உணவுக்காக 40 யானைகள் தங்கிவிட்டன. ஆனால் அங்கு புற்கள் இல்லை வெறும் சீமை கருவேல மரங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் யானைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "சீமைக் கருவேல மரங்களின் இலைகளை சாப்பிட்டு இருக்கலாம் அது யானைகளுக்கு ஆகாது. மேலும் வேறு உணவுத்தாண்டியும் செல்லவில்லை. இதற்கு ஆக்கிரமிப்பும் காரணம். யானைகளின் வலசைப் பாதைகல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த யானைகளின் மரணத்தை இயற்கையானதுதான் என எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏன் எதற்கு என்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இந்த இறப்புகளை குறுகிய வட்டத்தில் சுறுக்கக் கூடாது. அதேபோல ஆறுகள், ஓடைகளின் நீர் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் யானைக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதில் கூடுதல் குழுக்களை அமைத்து வனத்துறை கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் காளிதாசன்.