சிறப்புக் களம்

ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை

ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை

webteam

ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

வடமாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான சீடர்களை கொண்டவர் குர்மீத் ராம் ரஹிம். இவர் வழக்கமான சாமியார்களில் இருந்து மாறுபட்டவர். இந்த நவீன காலத்து சாமியார் பாடகர், ‌நடிகர், எழுத்தாளர், தொழிலதிபர் பன்முகத்தன்மை கொண்டவர்.

 திரை நட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் ‌இப்படி ஒரு என்ட்ரி கொடுக்கும் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆம் தேதி தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். முற்றும் துறந்த துறவிகளைப்போல இல்லாமல் இவர் வண்ணமயமான வாழ்க்கையை கொண்டிருந்தார்.

 ஆன்மீக குரு, கொடையாளர், பாடகர், விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என தனது பன்முகத்தன்மையை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இவ‌ர் சாகச பைக் பிரியர்.

 பள்ளிப்படிப்பை முடித்துள்ள குர்மீத்துக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒரு பெண்ணை தத்து எடுத்து ‌வளர்த்து வருகிறார். பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த குர்மீத் ராம் ரஹிம் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

ஏப்ரல் 2002 - பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பெயரிடப்படாத ஒரு கடிதம் வந்தது. அதில் சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதாவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

மே 2002 - கடிதத்தின் அடிப்படையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அங்கு பாலியல் கொடுமை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிக்கை அளித்தது. 

செப். 2002 - வழக்கை சிபிஐ விசாரிக்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிச. 2002 - ஆசிரமத்தின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் மீது சிபிஐ பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

ஜூலை 2007 - அம்பாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் 1999 - 2001ல் 2 பெண்களை ராம் ரஹீம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

செப். 2008 - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராம் ரஹீம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. 

2009 -  நீதிமன்றத்தில் புகார்தாரர்களான 2 பெண்களும் வாக்குமூலம் அளித்தனர்.

ஏப். 2011- அம்பாலாவில் இருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பஞ்குலாவுக்கு மாற்றப்பட்டது

ஜூலை 2017 - இந்த வழக்கில் தினசரி விசாரணை மேற்கொள்ள சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

ஆக. 17 - இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவு, ஆகஸ்ட் 25ல் தீர்ப்பு என அறிவிப்பு

ஆக. 17- குர்மீத் ராம் ரஹீம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு

ஆக. 25 - ராம் ரஹீம் குற்றவாளி என்று தீர்ப்பு, தண்டனை 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல்

ஆக. 25 - தீர்ப்பை தொடர்ந்து ராம் ரஹீம் ரோதக் நகரில் உள்ள சிறையில் அடைப்பு