சிறப்புக் களம்

தீராத பஞ்சாப் 'பிரச்னை', புதிய 'பாலைவனப் புயல்'... ராஜஸ்தான் அரசியலை சமாளிப்பாரா ராகுல்?

தீராத பஞ்சாப் 'பிரச்னை', புதிய 'பாலைவனப் புயல்'... ராஜஸ்தான் அரசியலை சமாளிப்பாரா ராகுல்?

PT WEB

பஞ்சாப் மாநிலத்தில் உள்கட்சி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சரண்ஜித் சிங்கை முதல்வராக்கி இருக்கிறார் ராகுல் காந்தி. ஆனால், அங்கே நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரிந்தர் சிங்குக்கு இடையே வலுக்கும் மோதல் காரணமாக அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பஞ்சாப் பிரச்னையே இன்னும் முற்றிலும் தீராத நிலையில், இப்போது ராகுலுக்கு ராஜஸ்தான் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இது தொடர்பான பின்னணியைப் பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டார்கள். தொடக்கத்தில் இருந்தே இந்த இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி மிக வெளிப்படையாக இருந்தது. 2020-ல் இந்த மோதல் வெளிப்படையாக வெடித்தது. முதல்வர் பதவி கேட்டு பைலட் போர்க்கொடி தூக்க, ஒருகட்டத்தில் ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். என்றாலும், ராகுல் காந்தி தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தார்.

இதன்பின் சில காலமாக உள்ளுக்குள் புகைந்துவந்த இந்த பிரச்னை, இப்போது பஞ்சாப்பில் முதல்வர் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் வெடித்துள்ளது. சச்சின் பைலட் கடந்த வாரங்களில் இரண்டு முறை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் பின்னணியாக சொல்லப்பட்டது, 2020-ல் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது அவருடைய ஆதரவாளர்களும் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் பதவி கொடுக்கும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பைலட் கோரிக்கை விடுத்தும் பல முறை அசோக் கெலாட் செவிசாய்க்கவில்லை. இதனால், முதல்வர் பதவியில் இருந்து மாற்ற சொல்லி, பைலட் இப்போது மீண்டும் முயன்றுவருவதன் விளைவே ராகுல் காந்தி உடனான சந்திப்பு என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

அசோக் கெலாட் மற்றும் பைலட் இடையேயான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் கெலாட்டின் ஊடக ஆலோசகர் லோகேஷ் சர்மா, "வலிமையானவர்கள் உதவியற்றவர்களாக உணரப்படுகிறார்கள், சாதாரணமானவர்கள் ஆணவத்தை உணர ஊக்குவிக்கப்படுகிறார்கள், வேலி தானே வயலை அழிக்கும்போது பயிரை யார் காப்பாற்ற முடியும்?" என்று தனது ட்வீட்டில் பதிவிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதேபோல், சச்சின் பைலட்டின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் மகேஷ் சர்மா, "பைலட்டின் கடின உழைப்பின் காரணமாகவே ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவருக்கே முதல்வர் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் சூழலில் காங்கிரஸ் தலைமை அதை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் வரும் தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பலனை கொடுக்கும்" என்றுள்ளார்.

இதனிடையே, பைலட்டின் கோரிக்கைக்கு ராகுல் காந்தி மவுனம் காத்து வருகிறார். பஞ்சாப் விவகாரத்திலும் மவுனம் காத்த ராகுல் முதல்வரை மாற்றினார். அதேபோல், இந்த மவுனமும் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் பைலட் ஆதரவாளர்கள்.

ராஜஸ்தான் நெருக்கடியை ராகுல் காந்தி எப்படி எதிர்கொள்வார் என்பதற்கு இப்போது மூன்று சாத்தியங்கள் உள்ளன.

முதல் வாய்ப்பு: சச்சின் பைலட்டை ராஜஸ்தான் கட்சித் தலைவராக மீண்டும் நியமிப்பதுடன் மற்றும் 2023 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அவரையே அறிவிப்பது.

இரண்டாவது வாய்ப்பு: அமரீந்தர் சிங்கை போல, அசோக் கெலாட்டையும் முதல்வர் பதவியில் அதிரடியாக நீக்குவது.

மூன்றாம் வாய்ப்பு: கெலாட் அல்லது பைலட் இருவருக்கு தேசிய அளவில் கட்சியில் முக்கியவதும் கொடுத்து அழைத்துக் கொள்வது. அப்படி செய்து, பஞ்சாப்பில் செய்தது போல் இருவருக்கும் இடையேயான மோதலை சமரசம் செய்யும் வகையில் புதிய ஒருவரை முதல்வராக ஆக்குவது.

எனினும் இப்படிச் செய்வது ராஜஸ்தானில் சாத்தியமற்றது என்கிறார்கள். ஏனென்றால், கெலாட்டுக்கு பிறகு ஆளுமை மிக்க தலைவராக இருப்பவர் பைலட் மட்டுமே. இதனால் இவர்களுக்கு மாற்றாக புதிய ஒரு நபரை கொண்டுவருவது அடுத்த தேர்தலுக்கு மட்டுமல்ல, 2024 மக்களவைத் தேர்தலுக்கும் கைகொடுக்காது. தற்போதைக்கு ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் 2024 மக்களவைத் தேர்தல்களை மனதில் வைத்தே செயல்பட்டு வருகின்றனர். தற்போது காங்கிரஸ் சற்றே வலுவாக இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து பல மக்களவைத் தொகுதிகளைப் பெற கட்சித் தலைமை திட்டமிட்டு வருகிறது.

எனவே, மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அதனடிப்படையில் ராஜஸ்தான் விவகாரத்தில் ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பார் என்றே பல அரசியல் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- மலையரசு

தகவல் உறுதுணை: India Today, The Tribune India