சிறப்புக் களம்

பொன்னுலகம் காணத்துடிக்கும் பூவுலகின் நண்பர்!

பொன்னுலகம் காணத்துடிக்கும் பூவுலகின் நண்பர்!

webteam

மனித சமூகம் காக்கப்பட வேண்டுமென்றால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த உயரிய நோக்கில் செயல்பட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மூலம், மக்கள் சேவையாற்றி வரும் ஜி.சுந்தரராஜன் புதிய தலைமுறையின் சூழலியலாளருக்கான தமிழன் விருதைப் பெற்றுள்ளார்.

1980-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக நிதானமாக வளர்ந்த சூழலியல் இயக்கம் பூவுலகின் நண்பர்கள். டீக்கடைகளிலும், புத்தகக் கடைகளிலும் அமர்ந்து பேசி சூழலியலுக்காக உருவான அமைப்பு இது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிதானமாக பற்றத் தொடங்கிய விழிப்புணர்வுத் தீ, பல்வேறு தளங்களிலிருந்து வந்த 40 பேர் கொண்ட இயக்கமாக வளர்ந்தது. பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை நடத்தி வரும் ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு சமூக பிரச்சனையில் புரிதல்கொண்ட, நிபுணத்துவம் நிறைந்தவர்களாக செயலாற்றி வருகிறார்கள். கூடங்குளம் அணு உலையின் ஆபத்துக்கள் குறித்து தொடர்ச்சியாக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஜி.சுந்தரராஜன். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் கு.சிவராமன், சிறுதானிய உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவத்தையும், நாட்டு வகை உணவுகளை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். வரகுப் பொங்கல், திணைப் பாயாசம், ராகி உருண்டை, கொள்ளு சுண்டல் என பாரம்பரிய உணவுப் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் உணவுத் திருவிழாக்களையும் நடத்தி வருகிறார்கள்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பால் வெளியிடப்படும் பூவுலகு இதழ், 25 தலைப்புகளில் சூழலியல் சிக்கல்களைப் பதிவு செய்திருக்கிறது. தற்போது, யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்ததாக ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது இந்த அமைப்பு. ஐந்திணை விழா, முன் நீர் விழவு, நான் பேச விரும்புகிறேன் போன்ற இவர்களின் கருத்தரங்குகள், சூழலியல் குறித்த விழிப்புணர்வையும், அதிர்வையும் ஏற்படுத்தியது.