சிறப்புக் களம்

வங்கி மோசடிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தலைவர்..!

வங்கி மோசடிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தலைவர்..!

rajakannan

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில், பிரபல நகைக்கடை தொழிலதிபர் 11,500 கோடி ரூபாய் மோசடி செய்தது தான் இன்று நாடுமுழுவதும் பரபரப்பாக பேசி வரும் விஷயம். தொழிலதிபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு வாங்க முடியவில்லை என்று அரசுடைமை வங்கிகள் கைவிரிக்கும் நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. தொழிலதிபர்களும் கடனை வாங்கிவிட்டு, கட்டமாட்டேன் என்று அசால்ட்டாக நாட்டை விட்டு தப்பி சென்றுவிடுகிறார்கள். எப்படிதான் இது நடக்கிறதோ..?.

இன்று ஹாட் டாப்பிக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி இருந்து வரும் நிலையில், அந்த வங்கியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி லோன் எடுத்து கட்டியது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் என்றாலே எளிமையின் சிகரம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எல்லோரும் அல்ல, பலர் அப்படி இருந்தார்கள். தமிழகத்தில் காமராஜர், கக்கன் உள்ளிட்ட பலரை, இன்றளவும் அவர்களது எளிமை, நேர்மைக்காக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய மிகவும் சிலிர்க்க கூடிய ஒரு தகவல் தான் இது.

லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதியுள்ள, ‘லால் பகதூர் சாஸ்திரி: தலைமைக்கான பாடங்கள்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது தான் இந்த தகவல்கள்.

பிரதமராக இருந்த காலத்தில், லால் பகதூர் சாஸ்திரி 1964 மாடல் பியாட் கார் ஒன்றினை வாங்க ஆசைப்பட்டுள்ளார். அந்த காரின் விலை ரூ.12,000. ஆனால், லால் பகதூரின் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கில் ரூ.7 ஆயிரம் மட்டுமே இருந்திருக்கிறது. மீதமுள்ள ரூ.5 ஆயிரத்துக்கு லால் லோன் கேட்டு விண்ணபித்திருக்கிறார். விண்ணப்பித்த இரண்டு மணி நேரத்தில் அவருக்கு லோன் கிடைத்து விடுகிறது. உடனே, லால் பகதூர் என்ன செய்தார் தெரியுமா..?. லோன் வழங்க அனுமதி அளித்த அதிகாரியிடம், ‘எனக்கு அளித்தது போல் மற்ற எல்லா வாடிக்கையாளரையும் ஒரே அளவில் நடத்த வேண்டும். இதேபோல் விரைந்து லோன் வழங்க வேண்டும்’ என்று  கூறியிருக்கிறார். இது லால் பதுதூரின் நேர்மையை காட்டுகிறது.

இதில், கார் வாங்க வேண்டிய தேவை எப்படி வந்தது என்பதையும் அனில் சாஸ்திரி குறிப்பிடுகிறார். பள்ளியில் அனில் சாஸ்திரி படிக்கும் போது தந்தையின் காரில் செல்ல முயற்சிப்பாராம், ஆனால் லால் பகதூரோ அரசின் காரை சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிடுவார். இதனால், வீட்டில் உள்ளவர்களின் பயன்பாட்டிற்கு ஒரு கார் வாங்க வேண்டிய தேவை உருவாகியது.

லால் பகதூர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். அவர் தனது கொள்கையின் அடிப்படையில் நேர்மையாக இருப்பதில் நியாயம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவரது மனைவி அப்படியே இருக்க வேண்டியது அவசியமில்லைதான். லால் பகதூரின் மனைவி லலிதா, அவரைவிட ஒரு படி மேல் சென்று தனது பண்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படி தெரியுமா..?. லோன் தொகையை அடைப்பதற்கு முன்பாக லால் பகதூர் 1966-ம் ஆண்டு இறந்துவிடுகிறார். லால் பகதூரின் மனைவிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கடனை திருப்பி செலுத்துமாறு கடிதம் எழுதுகிறது. லால் பகதூரின் மனைவி தனக்கு வரும் பென்ஷன் தொகையில் இருந்து ஒவ்வொரு மாதமும் கடனை திருப்பி செலுத்தி வந்திருக்கிறார். எவ்வித நிறுத்தமும் இல்லாமல் தொடர்ச்சியாக கடனை கட்டி முடித்தார் அவர்.

அனில் எழுதிய புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், “கடனை தள்ளுபடி செய்துவிடுவதாக அரசாங்கம் சார்பில் சலுகை வழங்கிய போதும், அதனை எனது தாயார் ஏற்க மறுத்துவிட்டார். ஒவ்வொரு மாதமும் முறையாக கடன் தொகையை செலுத்தி வந்தார். லால் பகதூர் இறந்த 3 முதல் 4 ஆண்டுகளை வரை கடன் தொகையை செலுத்தினார்” என்றார். லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி தனது கணவரின் கண்ணியத்தை காத்துள்ளார் என்பது எத்துனை சிறப்பு மிக்கது என்பது இன்றைய மோசடிகளை பார்த்தால் தெரியும்..!

டெல்லியில் உள்ள லால் பகதூரின் நினைவிடத்தில் இன்றளவும் அந்தக் கார் காட்சியளித்து வருகிறது. நிரவ் மோடிகளுக்கு மத்தியில் லால் பகதூர் சாஸ்திரி போன்ற வாடிக்கையாளர்களும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இருந்தார்கள் என்பதற்கு இதுவே சான்று.