சிறப்புக் களம்

மெனோபாஸ் நிலையில் இருக்கும் ஆண்களுக்கு இந்தந்த பிரச்னைகள் வருமா?

மெனோபாஸ் நிலையில் இருக்கும் ஆண்களுக்கு இந்தந்த பிரச்னைகள் வருமா?

Sinekadhara

பருவமடைதல் மற்றும் மெனோபாஸ் என்ற வார்த்தைகள் எப்போதும் பெண்களுடனேயே தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. பெண்கள் மெனோபாஸ் நிலையை அடையும்போது அவர்களுடைய ஹார்மோன் உற்பத்தியில் அதீத மாற்றம் ஏற்படுவதால் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்த நிலை பெண்களுக்கு மட்டுமல்ல; எப்படி ஆண்களும் குரல் மாறி, மீசை முளைத்து பல்வேறு ஹார்மோன் மாற்றங்களுக்கு ஆளாகி பருவமடைகிறார்களோ அதேபோல், அவர்களுக்கும் மெனோபாஸ் என்ற நிலை இருக்கிறது.

ஆனால் பெண்களைப்போல் அல்ல; அவர்களுக்கு இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்கிறது. வயது ஆக ஆக ஆண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. இதை ஹைபோகோனாடிசம் (hypogonadism) என்று அழைக்கின்றனர். ஆண்கள் 40 வயதை அடையும்போது அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி 1% குறைகிறது. ஹார்மோன் உற்பத்தி குறையும்போது ஆண்களிடையே சில மாற்றங்களை காணமுடியும்.

உடலுறவின்மீது ஆர்வம் குறைதல்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், 40 வயதிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். இது தினந்தோறும் குறைந்து 45 வயதை நெருங்கும்போது கிட்டத்தட்ட 50% ஹார்மோன் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் உடலுறவின் மீதான ஆர்வமும் படிப்படியாக குறையும். இதனால்தான் 50 - 60 வயது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்னை ஏற்படுகிறது.

விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile dysfunction)

50-60 வயது ஆண்கள் விறைப்புத்தன்மை நிலையின்மை பிரச்னையால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கிட்டத்தட்ட 20 மில்லியன் அமெரிக்க ஆண்கள் இந்த பிரச்னையால் அவதிப்பட்டு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆண்களுக்கு தங்கள் மீதான சுய மரியாதை குறைந்து, தங்கள் குடும்ப உறவிலும் விரிசல்கள் ஏற்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்பில் அசௌகர்யம்

மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் நிறைய ஆண்களுக்கு மார்பு பகுதியில் வீக்கம் ஏற்படுவதால் அசௌகர்யத்தை உணர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மலட்டுத்தன்மை

மெனோபாஸ் அறிகுறிகளால் அவதிப்படும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 40 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதான ஆண்களுடன் ஒப்பிடுகையில் 30-களில் உள்ள ஆண்களின் கருவுறுதல் விகிதம் 21% அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. விந்தணு சுரப்பு குறைதல், சீரற்ற விந்தணு இயக்கம் அல்லது அடைப்புகள் போன்றவை வயதான ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாகவும் கூறுகின்றன.

குறைந்த எலும்பு தாது அடர்த்தி

வயதான பெண்களைப் போலவேதான் ஆண்களும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சந்திக்கின்றனர். குறைந்த அதிர்ச்சி முறிவு மற்றும் எலும்பு தாது அடர்த்தி இழப்பு போன்றவை எலும்புகளை உடையக்கூடியதாகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது.