சிறப்புக் களம்

பெற்றோர்களே! உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை!

பெற்றோர்களே! உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை!

Sinekadhara

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் டீனேஜ் என்பது மிகவும் முக்கியமான பருவம். எதை வேண்டாம் என்று தடுக்கிறார்களோ அதையெல்லாம் தெரிந்துகொள்ள தூண்டும் பருவம் அது. இந்த பருவத்தில் முறையான வழிகாட்டுதல்கள் கிடைக்காதபோதுதான் ஒருவரின் வாழ்க்கைப்பாதையே மாறிப்போகிறது. இந்த பருவத்தில்தான் அதிக மன உளைச்சல் மற்றும் அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இது படிப்பில் மட்டுமல்ல; நட்பு, காதல், பெற்றோர் என அனைத்திலும்தான். இந்த பருவத்தினருக்கு பெற்றோரின் வழிகாட்டுதலும், அன்பும் ஆதரவும் மிகமிக அவசியம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பது மட்டுமல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்துதலும் பெற்றோரின் கடமையாகும்.

வளர் இளம்பருவத்தினர் சந்திக்கும் சில முக்கிய மனநல பிரச்னைகள்:

  • மனச்சோர்வு
  • மனம் அலைப்பாய்தல்
  • மன பதட்டம் மற்றும் அழுத்தம்
  • சித்தப்பிரமை (Paranoia)
  • சமூகத்திலிருந்து தனிப்படுதல்
  • தூக்கமின்மை
  • சாப்பிடுவதில் சிரமம்
  • பசியின்மை (Anorexia and bulimia)
  • மது மற்றும் போதைக்கு அடிமையாதல்

வளர் இளம்பருவ பிள்ளைகளிடம் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தெரிந்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டியவை என்னென்ன என்பது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் அளவுக்கதிகமான நேரம் தூங்கினால், பெற்றோர்கள் அதை கவனிக்க வேண்டும். மனச்சோர்வு மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டின் முதல் அறிகுறியே அதீத தூக்கம்தான்.

குழந்தைப் பருவத்திலிருந்து பிடித்த சில விஷயங்கள் மற்றும் பொருட்களின்மீதான ஆர்வம் குறைதல் என்பது இயல்புதான். அதேசமயம் உங்கள் டீனேஜ் பிள்ளைகள் கவனச்சிதறலுடன் இருந்தாலோ, எதன்மீதும் நாட்டமின்மையுடன் இருந்தாலோ உடனே அதை பெற்றோர் கவனிக்க வேண்டும்.

நன்றாக படிக்கும் பிள்ளைகள், திடீரென ஃபெயில் ஆனாலோ அல்லது படிக்க மறுத்தாலோ பெற்றோர் அதை சுலபமாக விட்டுவிடக்கூடாது.

டீனேஜ் பருவத்தில்தான் ஒருவரின் ஆளுமை மற்றும் குணநலன்களில் மாற்றம் ஏற்படும். உதாரணத்திற்கு, குழந்தைப் பருவத்தில் அனைவரிடமும் சகஜமாக பழகும் உங்கள் பிள்ளை திடீரென சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாலோ, பேசுவதை நிறுத்திக்கொண்டாலோ அதை பெற்றோர் கவனித்தல் கொள்வது அவசியம்.

பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளுக்கு உதவுவது?

பெற்றோர்கள் சில விஷயங்களில் மிகவும் தெளிவாக இருத்தல் வேண்டும். உங்கள் வளர் இளம் பிள்ளையின் நடத்தை முற்றிலும் மாறுவதற்கு முன்பாக பெற்றோர்கள் சில முயற்சிகளை எடுக்கலாம்.

எதார்த்தமாக பேசுங்கள்: பெற்றோர்களிடம் பிள்ளைகள் எந்த விஷயத்தை பற்றியும் வெளிப்படையாக பேசும் அளவிற்கு நண்பர்கள்போல் பழக வேண்டும். அப்படி பழகும்போதுதான் அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் ஆரம்பத்திலேயே அதை புரிந்துகொண்டு அதிலிருந்து வெளிவர உதவ முடியும். பதட்டமும், மனச்சோர்வும் ஏற்படுவது சகஜம்தான் என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்ளும்படி அவர்களிடம் பெற்றோர்கள் பேசவேண்டும்.

மனநல பிரச்னைகள் பற்றி பேசுங்கள்: இன்றைய டீனேஜர்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகள் வருவது சாதாரண ஒன்றுதான். எனவே பொதுவான மனநல பிரச்னைகள் என்னென்ன என்பதை பெற்றோர்கள் தெளிவாக புரிந்துகொண்டு அதை தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் மனதில் பதியும்படி எடுத்துக்கூற வேண்டும். மேலும் பிள்ளைகளிடம் மனநல பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதை மருத்துவரிடம் கூறி, ஆலோசனை பெறவேண்டும்.

டீனேஜ் பருவத்தில் மாற்றங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், அதிலுள்ள சிக்கல்களை பெற்றோர்கள் புரிந்துகொண்டு பிள்ளைகள் எளிதில் கடந்துபோக வழியமைத்து கொடுப்பது அவர்களின் கடமை.