சிறப்புக் களம்

’தமிழ்த் தேசியத் தந்தை’ அயோத்திதாசப் பண்டிதர்

’தமிழ்த் தேசியத் தந்தை’ அயோத்திதாசப் பண்டிதர்

webteam

‘தமிழன்’ இதழின் நிறுவனரும் , ‘தமிழ்த் தேசியத் தந்தை’யுமான  அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின்  சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச்சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்பே பேசியவர். தமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து பௌத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர். தமிழ் மக்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்டப் பல்வேறு சடங்குகளுக்கும் ; கார்த்திகை தீபம்,பொங்கல், தீபாவளி முதலான  பண்டிகைகளுக்கும் பௌத்த நோக்கில்  பொருள் கூறியவர். புகழ்பெற்ற சித்த மருத்துவர். 1876ல் நீலகிரியில் ‘அத்வைதானந்தசபை’யையும், 1891ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜனசபை’யையும் நிறுவியவர்.

தமிழ் இதழியல் வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் துவக்கி நடத்திய தமிழன் வார இதழுக்கு (1907-1914) முக்கியமானதொரு இடம் உண்டு. தனது பத்திரிகையில் பெண்கள் எழுதுவதற்கென தனி ‘பத்தி’ (column) ஒன்றை வெளியிட்டவர் அவர். சுதேசி மற்றும் சுயராச்சிய இயக்கங்களில் கலந்திருந்த சாதித்திமிர், மதத் திமிர்,அறிவுத்திமிர் மற்றும் பணத்திமிர் ஆகிய நான்குவகைத் திமிர்களை அடையாளம் காட்டிய அயோத்திதாசர், அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிட சாதிப்பெருமையைப் புறக்கணிப்பதே முதன்மையானது என வலியுறுத்தினார்.

தமிழ் அடையாளமானாலும், பௌத்த அடையாளமானாலும் அது சாதியற்றதாக உள்ளதா என்பதிலேயே அயோத்திதாசர் கவனமாக இருந்தார். சாதியை ஏற்றுக்கொண்ட அல்லது சாதியோடு சமரசம் செய்துகொண்ட எதனையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த அயோத்திதாசரின் பெருமை 1990களின் பிற்பகுதியில்தான் மீண்டும் வெளி உலகுக்குத் தெரியவந்தது. அதற்கு நான் ஆற்றிய பணிகள் சிலவற்றை இங்கே நினைவுகூர்வது பொருந்தும். 1998ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் ’தலித் சாகித்ய அகாடமி’ என்ற பதிப்பகத்தின் சார்பில் அயோத்திதாசப் பண்டிதரின் படைப்புகளைப் பொருள்வாரியாகத் தொகுத்து  நான்கு தொகுதிகளாகவும், புத்தரது ஆதிவேதம் என்ற நூலை மூலப் படியிலிருந்து ஒளிநகலெடுத்தும் ஐந்து நூல்களாக வெளியிட்டேன்.

மத்திய அரசின் சார்பில் சென்னை தாம்பரத்தில் இப்போது செயல்பட்டுவரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு 1999 மார்ச் 27ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று அந்த மையத்துக்கு அயோத்திதாசரின் பெயரைச் சூட்டுவதற்கு அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலித் எழில்மலை ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறக்கப்பட்டபோது அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பண்டிதரின் பெயரை வைப்பதற்குத் தயங்கினார். எனது வேண்டுகோளின் அடிப்படையில் பண்டிதரின் பெயரைச் சூட்டும்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின்  சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் அந்த மையத்துக்கு சூட்டப்பட்டது.

நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 27.05.2006 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய கன்னி உரையில் : “100 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழன்’ என்று பெயரிட்டு வார இதழை நடத்தி, நமது தமிழ்ச் சமூகம் பெருமைப்படக் காரணமாக  இருந்த அயோத்திதாசப் பண்டிதருக்கு இன்றைய முதல்வர் கலைஞர்தான் முன்முயற்சி எடுத்து அஞ்சல் தலையை வெளியிட்டார். அந்தப் பெருமையின் தொடர்ச்சியாக, அயோத்தி தாசருக்கு ஒரு  சிலையை நிறுவ வேண்டும் என்றும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலே அவரது பெயரிலே ஓர் இருக்கையை ஏற்படுத்தி, தமிழ், பௌத்தம் பற்றிய ஆய்வுகள் நடத்துவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும். தமிழக அரசின் சார்பில் தமிழன் இதழின் நூற்றாண்டை  நடத்தவேண்டும் ” என வேண்டுகோள் வைத்தேன். எனது கோரிக்கை ஏற்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பு தமிழக அரசால் செய்யப்பட்டது. அன்றைய நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தலைமையில் தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு சிறப்பாக நடத்தியது. அதுமட்டுமின்றி அயோத்திதாசப் பண்டிதரின் நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டு, பண்டிதரின் வாரிசுகளுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டபோது அயோத்திதாசப் பண்டிதரின் பெயரால் விருது ஒன்றை வழங்கவேண்டும் என்ற எனது வேண்டுகோளை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஏற்றுக்கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சான்றோர் பலருக்கு அவ்விருது வழங்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே திரு பாண்டியராஜன் அவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அவரை நேரில் சந்தித்து  அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் விருது ஒன்றை அறிவிக்குமாறும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் ஆய்வு இருக்கை ஒன்றை நிறுவுமாறும் வேண்டினேன். எனது கோரிக்கை இப்போது ஏற்கப்பட்டு அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசின் பரிசீலனைக்கு மேலும் சில கோரிக்கைகளையும் முன்வைக்கிறேன் : தமிழின் தொன்மையையும், தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டையும் அறிந்துகொள்வதற்கும்; தமிழ்ச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மீட்டெடுப்பதற்கும்  அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் பெரிதும் உதவக்கூடியவை. அவற்றை இன்றைய தலைமுறையினர் பயன்படுத்த ஏதுவாக அவரது பெயரில் ஆய்வு இருக்கை ஒன்றை நிறுவவேண்டும். அவரது பிறந்த நாளான மே மதம் 20 ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அவரது உருவச்சிலை ஒன்றை நிறுவவேண்டும்.