சிறப்புக் களம்

கிருஷ்ண ஜெயந்தி: குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி

கிருஷ்ண ஜெயந்தி: குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி

webteam

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாட ஆசைபட்ட குழந்தைக்கு ஆசையாய் கிருஷ்ணர் வேடம் அணிவித்து மகிழ்ந்துள்ளனர் இஸ்லாமிய தம்பதியினர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் இதயதுல்லா- தாஹிதா பேகம் தம்பதி. இஸ்லாமிய தம்பதியான இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதில் 5 வயது நிரம்பிய இரண்டாவது குழந்தை ஹேனா, கிருஷ்ண ஜெயந்தியான இன்று டிவியில் சுட்டிக் கிருஷ்ணரை பற்றிய நிகழ்வுகளை பார்த்துவிட்டு, பெற்றோரிடம் கிருஷ்ணர் வேடமிடுமாறு ஆசையாய் கேட்டுள்ளார்.

பெற்றோர்களும் தாங்கள் இஸ்லாமியர்களாய் இருந்தாலும் மதங்களை கடந்து பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவெடுத்து தாம்பரம் சந்தைக்கு சென்று கிருஷ்ணர் வேடமிட தேவையான மயில் இறகு, புல்லாங்குழல், சிறிய பானை, ஆடை, என அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து அலங்கார பொருட்களை வைத்து கிருஷ்ணர் வேடமிட்டு தெருவில் நடக்க விட்டு மகிழ்ந்தனர்.

மனிதர்கள் மதங்களை தூக்கிப் பிடித்து கொண்டிருக்கும் வேளையில் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற, மதங்களை கடந்து ஒதுக்கி வைத்து விட்டு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.