சிறப்புக் களம்

சென்னையில் சற்றே ஓய்ந்த கொரோனா - ஓமந்தூரர் மருத்துவனையில் காலியாகத் தொடங்கும் படுக்கைகள்!

சென்னையில் சற்றே ஓய்ந்த கொரோனா - ஓமந்தூரர் மருத்துவனையில் காலியாகத் தொடங்கும் படுக்கைகள்!

நிவேதா ஜெகராஜா

சென்னையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், ஓயாமல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்த ஓமந்தூரர் மருத்துவமனையில் 6 படுக்கைகள் காலியாக இருப்பதாக இன்று அறியும் தகவல் சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. அப்போதிருந்து கொரோனா சிகிச்சையின் முக்கிய இடமாக ஓமந்தூரர் மருத்துவமனை இருந்து வருகிறது.

முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3 கொரோனா படுக்கைகளை திறந்து வைத்தார். அதன் பின்னர் கோவிட் அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றம் பெற்று, முதல் அலையின் போது சென்னையில் தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு முக்கிய சிகிச்சை மையமாக ஓமந்தூரார் மருத்துவமனை விளங்கியது.

முதல் அலையின் தாக்கம் குறைந்து, சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் ஓமந்தூரர் மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக தொடங்கின. அதற்குள் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்க, மீண்டும் மருத்துவமனை துரிதமாக செயல்பட தொடங்கியது.

ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் நாள் ஒன்றுக்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 5000 தாண்டியது, அப்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் அதிகரிக்கப்பட்டன. தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று அதிக அளவில் வெளியேற தொடங்கினர். தேவைக்கு ஏற்றார் போல மருத்துவ கட்டமைப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை, படுக்கைகள் போன்றவற்றை அதிகரித்தும் குறைத்தும் வந்தது ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் கடந்த வாரமே தனியார் மருத்துவர்களில் மருத்துவ படுக்கைகள் காலியாக தொடங்கியது.

தற்போது அரசு மருத்துவமனையான ஓமந்தூராரிலும் மருத்துவ படுக்கைகள் காலியாக தொடங்கியுள்ளன. மொத்தமாக 1020 மருத்துவ படுக்கைகள் மருத்துவமனையில் உள்ளன. அவற்றில் 600 ஆக்சிஜன் படுக்கைகளும், 200 தீவிர சிகிச்சை படுக்கைகளும் உள்ளன. சென்ற வாரம் வரை மருத்துவ படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் தற்போது, 6 படுக்கைகள் காலியாக உள்ளன.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி பேசிய போது, "கடந்த ஒரு வருடமாக ஓமந்தூரார் மருத்துவமனை கொரோனாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மருத்துவ படுக்கைகள் காலியாகி வருகிறது. இது மகிழ்ச்சியான செய்திதான் என்றாலும், நாங்கள் எப்போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கு தயாராக இருக்கிறோம்.

அத்தோடு தற்போது வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கான 6 புதிய படுக்கைகள் ஓமந்தூரர் மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பரிசோதனை ஆய்வகமும் உள்ளன. இவற்றின் மூலம் நோய் கண்டறியப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்படும்" என கூறினார்.

சென்னையில் தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு மருத்துவமனை படுக்கைகள் காலியாக தொடங்கியுள்ளது நாள் தோறும் இடைவிடாது சேவை புரியும் மருத்துவ பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ந.பால வெற்றிவேல்